கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? - ஸ்ரீலீலாவி...
CSK: `கேப்டன்சியில் தடுமாறும் ருதுராஜ்; அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன்.!' - முன்மொழிந்த மனோஜ் திவாரி
ஐபிஎல் தொடரில் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய மாற்றம் வரலாம் என்ற பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் நான்கு இடங்களுக்குள் நுழைய சென்னை அணிக்கு இனி பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. பிற அணிகளின் தோல்விகளை பொறுத்தே வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் அணியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகள் எழத் தொடங்கியுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு சென்னை அணிக்கு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

பேட்டிங்கில் சொதப்பல்... கேப்டன்சியில் அழுத்தம்!
கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் திவாரி, ருதுராஜின் பேட்டிங் ஃபார்ம் அவரது கேப்டன்சியை நேரடியாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டார். "ஒரு கேப்டன், முதலில் பேட்டிங்கில் ரன்களைக் குவித்தால் மட்டுமே அணியை நேர்மறையாக வழிநடத்த முடியும்.
ஆனால், ருதுராஜிடம் அந்த ரன் வேட்டை இல்லை. அவரிடம் அந்த இயல்பான ஆட்டமும், அதிரடியும் மிஸ் ஆகிறது," என்று திவாரி கூறியுள்ளார். இந்த சீசனில் ருதுராஜ் 13 போட்டிகளில் விளையாடி, 29.18 என்ற சராசரியுடன் 321 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 120.68 ஆக இருப்பது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
எம்.எஸ். தோனியின் இடத்திற்கு ருதுராஜ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த எதிர்பார்ப்பை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து திவாரி கூறுகையில், "தோனியின் கால் தடம் மிகப் பெரியது. அந்த இடத்திற்குப் பொருந்தக்கூடிய ஒரு ஷூ இன்னும் உருவாகவில்லை என்றே நான் நினைக்கிறேன். ருதுராஜ், தோனியின் இடத்தை நிரப்புவதை விட்டுவிட்டு, தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதற்கு, அவர் தனது கடந்த காலப் போட்டிகளை ஆய்வு செய்து, எங்கே தவறு நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, அடுத்த சீசனுக்குத் தயாராக வேண்டும்," என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

புதிய முகமாக சஞ்சு சாம்சன்?
சென்னை அணிக்கு ஒரு புதிய தலைமை தேவைப்படும் பட்சத்தில், அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் சரியான தேர்வாக இருப்பார் என்பது திவாரியின் கருத்தாக இருந்தது.
"அடுத்த சீசனில் ருதுராஜ் கேப்டனாக நீடிப்பாரா என்று பார்ப்போம். ஏனெனில், சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் இருக்கிறார். சென்னை அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அவரை அணிக்குள் கொண்டுவந்தால், அவரை ஒரு கேப்டன் ஆப்ஷனாக பார்க்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய அனுபவம் சாம்சனுக்கு உண்டு. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, ஒரு நிரூபிக்கப்பட்ட கேப்டனும் கூட," என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.
தோனி இல்லாமல் சென்னை அணியால் போட்டிகளை வெல்ல முடியும் என்பது இந்த சீசனில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக களத்தில் அவரது வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இனிவரும் காலங்களில் அணியை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்பதில் சென்னை அணி நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அந்த மறுகட்டமைப்பின் முதல் படியாக கேப்டன் மாற்றம் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


















