Chennai : '24 நாடுகள், கோலாகல கொண்டாட்டம், தொடங்கியது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி...
Ditwah: தமிழகம் நோக்கி டிட்வா புயல்; எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நாளை (நவம்பர் 29) தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யலாம்.

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யலாம்.
அதேபோல், நாளை மறுநாள் (நவம்பர் 30) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம்.
மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகம் நோக்கி நகரும் டிட்வா புயல் நாளை மறுநாள் தமிழ்நாடு கடல் பகுதிகளுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பில், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், புதுச்சேரியிலும் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் தமிழக பள்ளி கல்வித்துறை, மாநிலம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் தமிழக அரசு அதனை மறுத்திருக்கிறது.


















