``சுடுகாட்டுக்கு சாலை இல்லை, சேறு சகதியில் நடந்து போகிறோம்'' - நான்கு தலைமுறையாக...
"தவெக வந்தவுடன் அண்ணன் செங்கோட்டையன் சொன்ன தேர்தல் வியூகம் இதுதான்" - ஆதவ் அர்ஜுனா
இன்று (நவ 27) செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் தவெக-வில் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கிறார்.
கடந்த சில தினங்களாக செங்கோட்டையன் விஜய்யுடன் இணையப்போவதாக பரபரப்பான விவாதங்கள் நடந்தன. இதையடுத்து நேற்று எம்.எல்.ஏ பதவி ராஜினாமா, உடனே விஜய் சந்திப்பு, இன்றைக்கு தவெகவில் இணைந்தது என படபடவென காய்களை நகர்த்தியிருக்கிறார் செங்கோட்டையன்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

"எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகள் சரியில்லை, அதிமுகவை ஒன்றிணைக்க முடியவில்லை, திமுக - அதிமுக இரண்டும் ஒன்றுதான்" என்று கூறி தமிழ்நாட்டில் புதிய மாற்றம் வரவேண்டுமென தவெகவில் இணைந்திருப்பதாக செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருப்பது குறித்துப் பேசியிருக்கும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று ஒரு பெரும் வரலாறு ஆரம்பித்ததில் பங்காற்றியவர். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் வரலாறு தொடங்கியபோது உறுதுணையாக இருந்தார்.
இப்போது மூன்றாவது முறையாக ஒரு புதிய வரலாற்றை உருவாக்க தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிக்குப் பெரும் உறுதுணையாக இருக்கப்போகிறார் அண்ணன் செங்கோட்டையன்.
அன்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முதல்வராக உறுதுணையாக இருந்தவர், இப்போது விஜய் அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க, புதிய வரலாற்றை உருவாக்க முடிவெடுத்திருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன்.

தேசிய கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிகள் வரை அவரை அழைந்தன. ஆனால், அவரது முடிவு தவெகவில் இணைவதாக இருந்திருக்கிறது.
'தவெக வாக்கு வங்கி 28 சதவிகிதம் என கணிக்கப்படுகிறது. இன்னும் ஒரு 10 சதவிகிதத்தை நோக்கி உழைத்தால் மாபெரும் வெற்றி நிச்சயம். 18 வயதிலிருந்து 40 வயது வரை இருப்பவர்கள் ஆதரவு இருக்கிறது. அதை இன்னும் விரிவுபடுத்தி 90 வயதுவரை இருப்பவர்களின் ஆதரவைப் பெற வேண்டும்' என்று தேர்தல் வியூக அறிவுரைகளை கட்சியில் இணைந்தவுடன் சொல்லியிருக்கிறார் அண்ணன் செங்கோட்டையன்.
2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்குவோம்" என்று பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.


















