'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை
PMK: `அன்புமணி தயாரித்த போலி ஆவணம்; தேர்தல் ஆணையம் செய்த மோசடி' - ஜி.கே.மணி குற்றச்சாட்டு!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2023ம் ஆண்டு வரை அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு கடுமையான கண்டங்களை முன்வைத்துள்ளார் ஜி.கே.மணி.
மேலும் அன்புமணி போலி ஆவணங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதாகவும், ஆணையம் அவற்றை ஏற்றுக்கொண்டு மோசடியாக அறிக்கை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கட்சியைத் திருடும் நடவடிக்கை
அவர் பேசும்போது, "28.05.2022 பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த கால அவகாசம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 28.05.2025 உடன் முடிவு பெற்றது.

அந்த முடிவுக்கு பிறகு,தேர்தல் ஆணையத்திடம் 2023இல் பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆகஸ்ட் வரைக்கும் பதவி இருப்பதாகவும் ஒரு 'போலியான' ஆவணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் ஜனநாயகத்தை கட்டி காக்கிற தேர்தல் ஆணயம் ஒரு மோசடியான படுகொலையான உத்தரவை இன்று வெளியிட்டுருக்கிறது. இது மிகப்பெரிய மோசடி, எங்களுக்கு வேதனை அளிப்பதோடு கண்டனத்துக்குரியதாகவே நாங்கள் பார்க்கிறோம். இது ஒரு கட்சியை திருடுவதைப் போன்றது." எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து 28.05.2022ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்று அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகைப்படங்களுடன் அனுப்பப்பட்ட 29.05.2022 தேதியிட்ட ஆவணங்களைக் காட்டினார்.
தேர்தல் ஆணையம் மோசடி
மேலும், "இந்த ஆதாரங்களைத் தாண்டி 2023ஆம் ஆண்டு ஒரு பொதுக்குழு நடந்ததாகவும் அதில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு போலி ஆவணத்தை கொடுத்திருக்கிறார், அதை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் மோசடி செய்திருக்கிறது.
இப்படி தவறு நடக்கிறது என்பதை அறிந்த உடனே, கடந்த ஐந்து மாதமாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எல்லாம் கொடுத்தோம். அந்த கடிதத்தினுடைய நகல் இருக்கிறது. எல்லாவற்றையும் வைத்திருக்கறோம். மருத்துவர் அன்புமணி 28.05.2022இல் தலைவராக அறிவிக்கப்படுகிறார், 29.05.2022இல் அவரே கைப்பட தேர்தல் ஆணையத்துக்கு கடிதமே எழுதுகிறார். அந்த கடிதமும் இருக்கிறது." என்று பேசினார்.
டெல்லியில் ராமதாஸ் PMK போராட்டம்
அத்துடன், "இவ்வளவு பெரிய மோசடி நடந்ததுதான், இன்னைக்கு அதிர்ச்சியாக மிகப்பெரிய கண்டனத்துக்குரியதாக பார்க்கிறோம். இதை கட்சி திருட்டு நடவடிக்கையாக பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை கட்டி காக்க வேண்டும். இப்படி ஒரு மோசடியான உத்தரவை நேற்று வெளியிட்டு, இன்றைக்கு எங்கள் கையில் கொடுக்கிறார்கள். அது ரொம்ப அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
மருத்துவர் அன்புமணி 2023ஆம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், அவருடைய பதவி காலம் 2026 வரை இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள் கொடுத்த ஆவணங்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்கிறார்கள். ஆவணங்கள் எல்லாம் சரியா இருக்கிறது... நாங்கள் எதற்கு நீதிமன்றத்துக்குப் செல்ல வேண்டும்? இது கண்டிக்கத்தக்கது.
இதை கண்டித்து மருத்துவர் ஐயா, 'டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்துவோம்' என்று சொல்லியிருக்கிறார். நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை." எனப் பேசியுள்ளார்.













