Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?
`முதல்வர் அப்படி சொன்னதை நகைச்சுவை உணர்வுனு எடுத்துக்கிட்டேன்; ஆனாலும் குற்ற உணர்வு’ - நடிகை ஆர்த்தி
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்றும் நடித்து வருபவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. இவரின் தந்தை சில தினங்களுக்கு முன் வயோதிகம் காரணமாக காலமானார்.
இந்த நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரிடம் விசாரித்திருக்கிறார். ரொம்பவே நெகிழ்ச்சியுடன் அதை விவரித்தார் ஆர்த்தி.
''எங்க குடும்பம் பக்கா திமுக குடும்பம். நானும் சின்ன வயசுல இருந்தே திமுக மேடைகள்ல ஏறியிருக்கேன். எனக்கும் கணேஷ்க்கும் கல்யாணத்தை நடத்தி வச்சதே கலைஞர் அய்யாதான். கோபாலபுரத்துல கலைஞர் அய்யா மட்டுமில்லாம ஸ்டாலின், செல்வி அக்கா எல்லார் கூடவும் நல்ல தொடர்பு இருந்திச்சு.
இந்தச் சூழல்ல ஒரு தேர்தலையொட்டி திடீர்னு ஒருநாள் மறைந்த ஜெயலலிதாம்மா கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் வீட்டுல யாருக்குமே அங்க போக பிடிக்கலை. ஆனா தனிப்பட்ட முறையில எனக்கு அம்மாவை ரொம்பவே பிடிக்கும். அதுவும் போக அவரே விரும்பி கூப்பிடறப்ப போகாம இருந்தா எப்படினு போனேன்.
அங்க போனதும் குடும்பம் வேலை பத்தில்லாம் விசாரிச்சுட்டு, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிடுறேன்னு சொல்லி பிரச்சாரத்துக்குப் போகச் சொல்லிட்டாங்க.
நான் திமுக-வுக்காக பேசறது தெரிஞ்சும் அவங்க கூப்பிட்டதால என்னால மறுக்க முடியலை. அதனால அப்ப இருந்து அம்மா இருந்த வரைக்கும் ஒவ்வொரு தேர்தல்லயும் அதிமுக-வுக்காக பிரச்சாரம் செய்தேன்.
அவர் மறைஞ்ச பிறகு எனக்கு வேற கட்சிக்குப் போகப் பிடிக்காததால் இப்ப எந்தக் கட்சியிலயும் சேராம சிவனேன்னு இருக்கேன்.
தலைமைச் செயலகத்துல வேலை பார்த்து ஓய்வு பெற்ற என் அப்பா சென்னையில் எங்கூடத்தான் இருந்தாங்க. சில தினங்களுக்கு முன்னாடி வயோதிக பிரச்னைகள் காரணமாகத் தவறிட்டாங்க. இந்தச் சூழல்ல ரெண்டு மூணு நாள் இருகும். காலையில நானும் கணவரும் அடையார் தொல்காப்பியர் பூங்காவுல வாக்கிங் போயிட்டிருந்தோம். எதேச்சையா பார்த்தா எதிர்ல முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிலருடன் வந்திட்டிருந்தார்.

அம்மா கூப்பிட்டாங்கனு அதிமுகவுக்கு நான் பிரச்சாரம் பண்ணக் கிளம்பிட்டதுல இருந்தே எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருந்திட்டே இருந்தது. அதனால எதிர்ல இவரை பார்த்ததும் என்ன ரியாக்ட் செய்யறதுன்னே தெரியலை. பார்க்காம ஒதுங்கிப் போயிடலாமா, பார்த்தா என்ன பேசுவார், திட்டுவாரா.. இப்படி நொடிப்பொழுதுல பல யோசனை.
ஆனா யோசிச்சு முடிக்கறதுக்குள்ள 'என்னம்மா எப்படி இருக்கீங்க'னு நின்னு கேட்டுட்டார். வணக்கம் வச்சுட்டு பதில் சொன்னேன். 'திட்ட வேண்டியது இன்னும் இருக்கா அவ்வளவுதானா'னு சிரிச்சிக்கிட்டே கேட்டவர், அமைச்சர் மா.சு பக்கம் திரும்பி 'அதிமுகவுல நட்சத்திரப் பேச்சாளரா இருந்தவங்க' என்றார். பொதுவா நான் அதிமுக மேடைகளில் திமுகவை திட்டறதில்ல. ஆனா சில இடங்களில் உள்ளூர் கட்சிக்காரங்க திட்டச் சொல்லி வற்புறுத்திப் பேச வைப்பாங்க. அதைத்தான் சொல்றார்.

சிரிச்சு சமாளிச்சேன். அடுத்த செகண்ட் 'அப்பா தவறிட்டாராமே'னு கேட்டுட்டார். எனக்கு பெரிய ஆச்சரியம். அவருக்கு இருக்கிற வேலைகள்ல இந்தச் செய்தியும் தெரிஞ்சுருக்கேனுதான். தொடர்ந்து அப்பா பத்தி சில நிமிடங்கள் விசாரிச்சுட்டுக் கிளம்பிட்டார்.
அவர் அப்பா பத்தி விசாரிச்சது இந்த நிமிடம் வரை ஆச்சரியமாகவே இருக்கு. அதேபோல 'திட்டி முடிஞ்சதானு அவர் கேட்டதை கலைஞர் அய்யாவுடைய ஹுயூமர் சென்ஸ்னு நான் எடுத்துகிட்டேன். ஆனாலும் எனக்கு குற்ற உணர்வு இன்னும் குறையல' என்கிறார்.


















