சென்னை: துணை நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய போலீஸ் உதவி கமிஷனர் - பரபர பின...
சென்னை: துணை நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய போலீஸ் உதவி கமிஷனர் - பரபர பின்னணி
சென்னையில் குடியிருக்கும் துணை நடிகை ஒருவரும் அவரின் கல்லூரி நண்பரும் நெருங்கி பழகி வந்திருக்கிறார்கள். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கல்லூரி நண்பரிடம் துணை நடிகை வற்புறுத்தியிருக்கிறார்.
ஆனால் திருமணம் செய்ய விரும்பாத கல்லூரி நண்பர், துணை நடிகையிடமிருந்து விலக தொடங்கியிருக்கிறார். அதனால் துணை நடிகை, சம்பந்தப்பட்ட கல்லூரி நண்பர் மீது கோயம்பேடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர், துணை நடிகை குற்றம் சுமத்திய கல்லூரி நண்பருக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். அதோடு கல்லூரி நண்பரை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதையும் இன்ஸ்பெக்டர் தடுக்கவில்லை. அதனால் புகார் கொடுத்த துணை நடிகை, இணை கமிஷனர் திஷா மிட்டலைச் சந்தித்து இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதையடுத்து இணை கமிஷனர் திஷா மிட்டல் விசாரணை நடத்தியபோது துணை நடிகை கூறிய குற்றச்சாட்டு உண்மையென தெரியவந்திருக்கிறது.
அதனால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்தநிலையில் துணை நடிகை இன்னொரு பரபரப்பான புகாரை உதவி கமிஷனர் ,சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது கொடுத்திருக்கிறார்.
அதில், தன்னுடைய ஆண் நண்பர் மீது புகார் கொடுக்கச் சென்ற இடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு அறிமுகமாகினார். அவர் மூலம் உதவி கமிஷனர் ஒருவர் என்னிடம் பேசினார். ஆரம்பத்தில் புகார் தொடர்பாக இருவரும் விசாரித்தனர். இந்தச் சமயத்தில்தான் உதவி கமிஷனர், எனக்கு நள்ளிரவு நேரத்தில் இரட்டை அர்த்த குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கினார் என குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு இணை கமிஷனரிடம் உதவி கமிஷனர் அனுப்பிய மெசேஜ்களையும் காண்பித்திருக்கிறார் துணை நடிகை. அதைப் பார்த்ததும் துணை நடிகை குற்றம் சாட்டிய உதவி கமிஷனர், சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

விசாரணையில் துணை நடிகை கூறிய குற்றச்சாட்டு உண்மையென தெரிந்ததும் உதவி கமிஷனரும் அவருக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
கோயம்பேடு காவல் மாவட்டத்தில் ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு துணை கமிஷனர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு தற்போது ஒரே நேரத்தில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகியிருக்கிறது.




















