பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி
சிதறி கிடந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் - கோவையில் நரபலியா?
கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகே காளப்பட்டி - வீரியாம்பாளையம் சாலை உள்ளது. அங்கு மாரியம்மன் கோயில் அருகே புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது.

குழந்தையின் கால் பாகங்களை நாய்களால் கடித்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் கோவில்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகியிருக்கும் என்றும்,

கால்கள் மட்டுமல்லாமல் குழந்தையின் கைகளும் வெட்டப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தையின் பாலினம் குறித்த விபரம் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.
குழந்தையின் உடல் கோயில் அருகே கண்டறியப்பட்டதால், இது நரபலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. குழந்தை நரபலி செய்யப்பட்டு இறந்ததா அல்லது திருமணம் கடந்த உறவில் பிறந்த குழந்தையை கொலை செய்து வீசி சென்றார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



















