`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன ந...
கரூர் சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.ஐ விசாரணை
கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் உள்ளிட்டோர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
இந் நிலையில், நேற்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆஜராகினார்.
கடந்த இரண்டு நாள் விசாரணையில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவர்கள் அளித்த ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் தான், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் நேற்று சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார் என்று சொல்லப்படுகிறது.

இந்த விசாரணையின் போது, த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர், கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் எவ்வளவு மக்கள் கூடியிருந்தனர், த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் எவ்வளவு பேர் வருகை தந்தனர், கூட்டம் அதிகமாக இருப்பதால் விஜயை காவல்துறை ஏன் நிறுத்தவில்லை?, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர என்ன நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன உத்தரவு பிறப்பித்தார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
அதேபோல், கரூர் வேலுசாமிபுரம் பகுதிக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர் தடியடி நடத்தப்பட்டது, முதல் தகவல் காவல்துறை பதிந்த உடன் ஏன் பிரேத பரிசோதனை அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன் என நேற்றைய சி.பி.ஐ விசாரணையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் எழுப்பிய சந்தேகங்கள் அடிப்படையிலும், இன்று கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் சி.பி.ஐ விசாரணையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவத்தன்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சிலரையும் விசாரணைக்காக சி.பி.ஐ அதிகாரிகள் இன்று ஆஜராக சமன் அனுப்பியதன் அடிப்படையில், 4 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சமன் அளித்து விசாரணைக்கு இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
அதோடு, கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுல கண்ணன் என்பவர் முகநூல் பக்கத்தில் த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்டதாகவும், அதன் அடிப்படையில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியதாக, இன்று விசாரணைக்காக ஆஜராகினார்.
இதே போல, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஓடுவாந்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி என்பவர், த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற அன்று தமிழக காவல்துறையின் அவசர உதவி எண் 100 எண்ணுக்கு அழைத்து, சம்பவம் குறித்து விசாரணை செய்ததாக, சி.பி.ஐ சம்மன் அளித்து இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இது தவிர, கரூரை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழில் அதிபர் ஒருவர் சி.பி.ஐ விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரே நாளில் சி.பி.ஐ விசாரணைக்கு கரூர் நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் சி.பி.ஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேரில் ஆஜராகினர்.
இதில், கரூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கரூர் நெரிசல் பலி சம்பவ சி.பி.ஐ விசாரணைக்காக அடுத்தடுத்து பலரும் ஆஜராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


















