காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு!...
காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு! - பரபர அப்டேஸ்!
இன்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த செங்கோட்டையன், சூட்டோடு சூடாக இன்று மாலை தவெக தலைவர் விஜய்யையும் சந்தித்திருக்கிறார். டெல்லியில் எடப்பாடி செய்ததைப் போல கார்களை மாற்றி மாற்றி பயணித்து பத்திரிகையாளர்களையும் குழம்ப வைத்தார்.

நேற்று கோவையிலிருந்து சென்னை வந்த செங்கோட்டையன் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் தங்கியிருந்தார். காலையில் 8:30 மணிக்கு இனோவா 'TN09 CE 9393' நம்பர் ப்ளேட் கொண்ட காரில் கிளம்பினார். மீடியாக்கள் வட்டமடிப்பதைப் பார்த்து யூடர்ன் போட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார். 11:30 மணியளவில் மீண்டும் அதே '9393' காரில் கிளம்பி தலைமைச் செயலகம் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
அங்கிருந்து புறப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார். ஊடகங்கள் மொத்தமும் தன்னை பாலோ செய்வதை அறிந்தவர், அங்கிருந்து வேறொரு காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார். அதே சமயத்தில் விஜய்யும் செங்கோட்டையனை சந்திப்பதற்காக நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். தவெகவில் செங்கோட்டையனின் இணைப்பு சார்ந்து அத்தனை விஷயங்களும் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விஜய்யை பெர்சனலாக சந்தித்து பேச திட்டமிட்டார் செங்கோட்டையன்.

இதற்காக ஆதவ்வின் '5050' என்ற பேன்சி நம்பர் கொண்ட ரேஞ்ச் ரோவர் கார் செங்கோட்டையனை பிக் அப் செய்ய அனுப்பப்பட்டது. அந்த காரில் தேநீர் அருந்தும் வேளையில் மாலை 4:30 மணிக்கு மேலாக பட்டினம்பாக்கம் வந்து சேர்ந்தார் செங்கோட்டையன். அவர் வருவதற்கு முன்பே ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நண்பரான விஷ்ணு ரெட்டி ஆகியோரும் பட்டினப்பாக்க வீட்டில் ஆஜராகியிருந்தனர்.
செங்கோட்டையன் - விஜய் தரப்பு இடையேயான இந்த சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு நீண்டது. விஜய் - செங்கோட்டையன் சந்திப்பு பற்றிய அப்டேட்ஸ் சாட்டிலைட் சேனல்களில் லைவாக ஓட விஜய்யை பார்க்கவும் ஒரு கூட்டம் அங்கே கூடிவிட்டது. பட்டினப்பாக்கத்தில் முக்கியமான ஜங்ஷனில் விஜய்யின் அலுவலக அப்பார்ட்மெண்ட் இருப்பதால் போக்குவரத்து கடும் நெருக்கடிக்குள்ளாகியது. இதனால் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தனர். கூட்டம் கூடுகிறது சீக்கிரம் சந்திப்பை முடிக்க சொல்லுங்கள் என காவல்துறையினர் விஜய் தரப்புக்கு செக்யூரிட்டிகள் மூலம் மெசேஜ் சொல்லி அனுப்பினர்.

ஒரு வழியாக மாலை 6:30 மணி வாக்கில் அந்த சந்திப்பு நிறைவடைந்தது. ஆதவ், ஆனந்த், ஜான் என எல்லாரும் தனித்தனி காரில் கிளம்பிச் சென்றனர். அதே '5050' எண் கொண்ட இன்னொரு ரக காரில் செங்கோட்டையனும் கிளம்பி சென்றார்.
நாளை பனையூர் அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் சிலரோடு செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக உறுதியாக கூறுகின்றனர். அதுவரைக்கும் சஸ்பென்ஸை உடைக்காமல் இருக்க நினைக்கிறதாம் விஜய் தரப்பு. அதனால்தான் செங்கோட்டையனும் கார்களை மாற்றி மாற்றி வித்தை காட்டி மௌனமும் காத்திருக்கிறார். நாளை உதயநிதியின் பிறந்தநாள். செங்கோட்டையனின் இணைப்பு விழாவை நாளை நடத்துவதன் மூலம், உடன்பிறப்புகளின் 'சின்னவர்' பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஓவர்டேக் செய்து மாஸ் காட்ட நினைக்கிறார்களாம்.

தட் ’யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க’ மொமென்ட்.





.jpeg)











