கோவை ரோலக்ஸ் யானை திடீர் மரணம் - வனத்துறை பிடித்த ஒரே மாதத்தில் சோகம்!
கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!
திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் ஒருவர் நகை அடகு வைத்து பணம் பெற்ற வகையில் வங்கிக்கும், அந்த பெண்ணுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த இரும்பூதிப்பட்டி காலனியை சேர்ந்த தி.மு.க பிரமுகரான பிச்சை (எ) பிச்சைமுத்து (வயது: 55) என்பவர் தனியார் வங்கியின் கிளை மேலாளர் சிவாவை அணுகி அந்தப் பெண்ணுக்கும், வங்கிக்கும் ஏற்பட்ட பிரச்னையை தான் தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார்.

அதற்காக, வங்கி மேலாளரிடம் ஏற்கனவே ரூ.10 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வங்கி மேலாளரை மிரட்டி மேலும் பணம் கேட்ட பொழுது வங்கி மேலாளர் சிவா குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் பிச்சைமுத்து மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைதுசெய்தார். தனியார் வங்கி மேலாளரிடம் மிரட்டி பணம் கேட்ட தி.மு.க பிரமுகர் கைதாகியுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
















