காரை மாற்றி மாற்றி செங்கோட்டையன் காட்டிய வித்தை; விஜய்யுடன் 2 மணி நேர சந்திப்பு!...
Gautam Gambhir: "அதை BCCI-யிடம் தான் கேட்க வேண்டும்" - பயிற்சியாளராக தொடர்வது குறித்து கம்பீர்!
இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது இந்திய அணி. இதன்மூலம் 0-2 என்ற கணக்கில் தொடரிலும் வொயிட்வாஷ் ஆகியிருக்கிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவிடம் இப்படி ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி.
கேள்விகளை எதிர்கொண்ட Gautam Gambhir
இந்த தோல்வியின் விளைவாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர். அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு பயிற்சியாளரான ஒரு ஆண்டில் நியூசிலாந்திடம் 0-3, தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என உள்நாட்டில் நடந்த இரண்டு தொடர்களில் வொயிட்வாஷ் செய்யப்பட்டுள்ளது இந்திய அணி. உள்நாட்டில் இரண்டு வொயிட்வாஷ் தோல்விகளை சந்தித்த ஒரே பயிற்சியாளர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் நடந்த கடந்த 7 போட்டிகளில் 5ல் இந்தியா தோல்வியைத் தழுவியிருக்கிறது. சொல்லப்போனால் கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதலான 19 போட்டிகளில் 10ல் இந்தியா தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
புதன்கிழமை (நவ. 26) தோல்விக்குப் பிறகு பேசிய கம்பீரிடம் பயிற்சியாளராக அவரது எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அதனை பிசிசிஐ-யிடம் தான் கேட்க வேண்டும். நான் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்கும்போது, 'இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை' என்று சொன்னேன். அதையேதான் இன்றும் சொல்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
"ஊடகங்கள் தோல்விகளை பெரிதுபடுத்துகின்றனர்"
ஈடன் கார்டனில் நடந்த முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 124 ரன்களைத் துரத்த முடியாமல் 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தபோது, சுழற்பந்துக்கு சாதகமான பிட்ச் சூழல் காரணமாக கூறப்பட்டது. ஆனால் கவுகாத்தியில் நல்ல பிட்சில் விளையாடியபோதும் இந்தியா படுதோல்வியடைந்தது.
இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட் தேர்வும், நீண்ட நேரம் விளையாடுவதற்கான பொறுமையின்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மேலும் கௌதம் கம்பீர் டெஸ்ட் போட்டிகளுக்காக அறியப்படும் வீரர்களைப் பொருட்படுத்தாமல் ஆல்-ரவுண்டர்களை முன்னிறுத்தியது மோசமான விளைவைக் கொடுத்திருக்கிறது.

தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த கம்பீர், ஊடகங்கள் தனது வெற்றிகளைப் புறந்தள்ளிவிட்டு டெஸ்ட் தோல்விகளை மட்டுமே பெரிதுபடுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
"மக்கள் ஒருவிஷயத்தை மறந்துகொண்டே இருக்கிறார்கள். இங்கிலாந்தில் இளம் அணியுடன் நல்ல முடிவுகளைப் பெற்றுக்கொடுத்த அதே கம்பீர்தான் நான். நீங்கள் மிக விரைவில் மறந்துவிடுவீர்கள். நிறைய பேர் நியூசிலாந்து பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்ற அதே நபர் நான். இது அனுபவம் குறைந்த அணி. நான் முன்பே சொன்னேன்: அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்." எனப் பேசியிருக்கிறார்.
"இளம் வீரர்களுக்கு நேரம் தேவை"
இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 0–3 என்ற கணக்கில் தோல்வியடைவதற்குக் காரணமான பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லையா என்று கேட்கப்பட்டபோது, முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ஆர்.அஷ்வின் ஆகியோர் அணியில் இருந்தும் நியூசிலாந்துக்கு எதிரான அந்தத் தொடரில் இந்தியா தோற்றது. இதில், இந்த மூவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில் தலைமையில் சென்ற இளம் இந்திய அணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரைச் சமன் செய்ததோடு, கடந்த மாதம் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனால், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்களான தென் ஆப்பிரிக்காவிடம் மிகவும் சோகமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
கம்பீர், "நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடியது வேறு ஒரு அணி, இந்தக் குழு முற்றிலும் வேறுபட்டது. நீங்கள் அனைவரும் நிறைய கிரிக்கெட்டைப் பற்றி எழுதுகிறீர்கள் – அந்த பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவத்திற்கும், இந்த வரிசையில் உள்ள அனுபவத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது" என அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
மேலும், "நான் சாக்குபோக்குச் சொல்ல மாட்டேன், சொன்னதும் இல்லை. ஆனால், எங்களது டாப் எட்டு வீரர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் 15-க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே ஆடியவர்கள். அவர்கள் களத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள், அதுவும் உயர்தரமான அணிக்கு எதிராக விளையாடும்போது அது எளிதான காரியம் இல்லை. அவர்கள் அழுத்தத்தைச் சமாளிக்கவும், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் நேரம் தேவை" என்று வெளிப்படையாகப் பேசினார்.
"டெஸ்ட் போட்டிகளை விளையாடுவது கூட்டுமுயற்சி"
சுப்மன் கில் கழுத்துவலியால் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அணியை வழிநடத்த நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட், இரண்டு இன்னிங்கிஸிலும் பேட்டிங்கில் சொதப்பியதால் அவரால் திறமையாக கேப்டன் பொறுப்பை கையாளமுடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து கேட்கப்பட்டபோது தனிமனிதர்கள் மீது குற்றம்சுமத்த முடியாது என மறுத்துவிட்டார் கம்பீர். "என்னையும் சேர்த்து, எல்லோரிடமிருந்தும் நான் சிறந்ததையே எதிர்பார்க்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து கொண்டு ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லப் போவதில்லை. நீங்கள் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை வெல்ல விரும்பினால், ஒவ்வொரு வீரரிடமிருந்தும் உயர்ந்த தரத்தை எதிர்பார்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளை வெல்வது என்பது கூட்டு முயற்சி" என அறிவுறுத்தினார்.


















