``ஸ்மிருதி மந்தனா திருமண தடை; நான் அவரை காப்பாற்றி உள்ளேன்'' - சாட்டிங் செய்த ப...
IND vs SA: ``கடினமான நாள்களைக் கடந்து வந்துள்ளோம்" - இந்தியாவை ஒயிட் வாஷ் செய்த டெம்பா பவுமா
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.
இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் 2 - 0 முழுமையாகத் தொடரை இழந்திருக்கிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 124 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இன்று கவுகாத்தி டெஸ்ட்டில் 549 சேசிங்கில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 408 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய சைமன் ஹார்மர் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத கேப்டனாக டெம்பா பவுமா மிளிர்கிறார்.
இவருடைய கேப்டன்சியில் 12 போட்டிகளில் ஆடியிருக்கும் தென்னாப்பிரிக்கா, ஒரு போட்டி மழையால் டிரா ஆக மற்ற 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்றைய வெற்றிக்குப் பின் பேசிய டெம்பா பவுமா, ``இது மிகப்பெரிய வெற்றி. இந்தியாவுக்கு வந்து 2 - 0 என தொடரை வெல்வோம் என்று எல்லா நாள்களிலும் நடப்பதல்ல. இருப்பினும் இதில் எங்களுக்கு இனிமையானது என்னவென்றால், நாங்கள் முடிவின் மறுபக்கத்தில் இருந்தோம். கடினமான நாள்களை நாங்கள் கடந்து வந்துள்ளோம். எங்களுக்கு இது மற்றொரு நம்பமுடியாத சாதனை.
களத்தில் இருக்கும்போது என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப் பொறுத்தவரை எங்கள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறது.

நமக்கு முன் என்ன இருக்கிறது என்பதற்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறோம். எங்களின் ஆட்டம் மேம்பட்டிருக்கிறது. என்ன செய்ய முயற்சிக்கிறோம், அதில் தங்களின் பங்கு என்ன என்பதில் அணியினர் தெளிவாக இருக்கிறார்கள்.
தங்களுடைய நாளில் அணிக்காக எதையும் செய்ய முடியும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. பென்ச்சிலிருந்து அணிக்குள் வரும் சேனுரான் முத்துசாமி உள்ளிட்ட வீரர்கள் போட்டியை வென்றெடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு அணியாக நல்ல நிலையில் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் செயல்படும் விதம் எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
வெளிப்படைத்தன்மை மற்றும் உரையாடல் ஆகியவை எந்தவொரு அணியிலும் முக்கியமான விஷயம்.
ஒரு கேப்டனாக, சில நேரங்களில் பந்துவீச்சாளர்களின் கைகளில் இருந்து பந்தை எடுப்பது மிகவும் கடினம். எல்லோரும் தொடர்ந்து பந்து வீச விரும்புகிறார்கள்.

எங்களிடம் 150 ரன்கள் அடிக்கும் வீரர்கள் இல்லை. ஆனால் 60, 70 ரன்கள் அடிக்கும் நான்கைந்து வீரர்கள் இருப்பார்கள்.
சைமன் ஹார்மரைப் பொறுத்தவரை 2015-ல் இந்தியாவில் ஆடிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஒரு வீரராக, சுழற்பந்து வீச்சாளராக அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது" என்று கூறினார்.
இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி தங்களின் முதன்மையான வேகப்பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடாவை இரண்டு போட்டியிலும் பென்ச்சில் அமர வைத்து தொடரை வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












.jpeg)






