"தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும்" - ஆ...
"தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும்" - ஆதவ் அர்ஜுனா
பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் மாளிக்கைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் தொடர் போராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இப்போது அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று விஜய்யின் தவெக கட்சியின் தரப்பில் இருந்து ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோர் அம்பத்தூரில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் ஆதவ் அர்ஜுனா, "தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல், அவர்களுக்கு உணவு வழங்குகிறோம் என்கிறார்கள். இதுதான் பண்ணையார்த்தனம். அவர்களின் பிரச்னையை சரிசெய்யாமல், உணவு வழங்குகிறோம் என பிச்சை போடுவதுபோல பண்ணையார்தனம் செய்கிறார்கள்.
"எங்கள் உணவை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம், எங்கள் வீடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், எங்கள் குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம். அரசு எங்களுக்கான உரிமையை, கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும்" என்கிறார்கள்.

'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு!
மேலும், "எங்களை பணியில் இருந்து தூக்கிவிட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையரை சந்திக்க வேண்டுகோள் வைக்கிறோம். ஆனால், எங்களை தனியார் நிறுவனத்திடம் போய் பேசச் சொல்லி அரசே சொல்லுகிறது" என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
16 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யாமல், இன்று அவர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது அரசு. ஒட்டுமொத்த ஆதி திராவிடர் மக்களுக்கு அநீதி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இதுதான் சமூக நீதியா? இதுதான் அவர்களின் சமத்துவ அரசியலா?
தூய்மைப் பணியாளர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதியைக் கேட்டவுடனே எங்கள் தவெக தலைவர் விஜய் கடந்த 4, 5 நாள்களாக மிகவும் வருத்தத்தில் இருந்தார். உடனே அவர்களை நேரில் சென்று பார்க்க எங்களுக்கு ஆணையிட்டார்.
தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாள்களுக்கு மேல் போராடி வருகிறார்கள். அவர்களை பலமுறை கைது செய்து போராட்டத்தை அடக்கி ஒடுக்க நினைத்தது திமுக அரசு. அவர்கள் இன்னும் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் இருக்கின்றனர். இப்போது நான்கு பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!
கம்யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தூய்மைப் பணியாளர்களுக்காக களத்தில் இறங்கி துணை நிற்க வேண்டும்.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் மாநகராட்சியில் இந்த பிரச்னைகள் இருக்கின்றன.
அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தவெக சார்பில் தலைவர் விஜய்யிடம் கலந்தாலோசித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும், போராட்டம் வெடிக்கும்" என்று கூறியிருக்கிறார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா.


















