"தூய்மைப் பணியாளர் பிர்ச்னையைக் கேட்டு விஜய் வருத்தம்; போராட்டம் வெடிக்கும்" - ஆ...
`ரூ.50 லட்சத்துக்கு ஆடம்பர பைக் கேட்டு ரகளை' - மகனை கம்பியால் அடித்துக்கொன்ற தந்தை
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வஞ்சியூரைச் சேர்ந்தவர் வினயானந்த் (52). இவரது மகன் ஹிருத்திக்(28).
ஹிருத்திக் ஆடம்பர பைக் வேண்டும் பெற்றோரிடம் தகராறு செய்துவந்தார். தொல்லை தாங்கமுடியாமல் லோன் எடுத்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக் வாங்கி கொடுத்தனர் பெற்றோர்.
இதற்கிடையே அக்டோபர் மாதம் 21-ம் தேதி தனது பிறந்த நாளுக்கு முன்பு 50 லட்சம் ரூபாய்க்கு இரண்டு ஆடம்பர பைக்குகள் வாங்கித்தரவேண்டும் என ஹிருத்திக் பெற்றோருக்கு தொல்லை கொடுத்துவந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி ஆடம்பர பைக் கேட்டு பெற்றோரிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அரிவாளால் தந்தையை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து குழி தோண்ட பயன்படுத்தும் கம்பியால் தனது மகனின் தலையில் பலமாக அடித்தார் வினயானந்த்.
இதில் படுகாயம் அடைந்து மயங்கிய ஹிருத்திக்கை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் தந்தை வினயானந்த்.
பின்னர் மகனை தாக்கியதாககூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார் வினயானந்த். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆடம்பர பைக் கேட்டு ஹிருத்திக் அவ்வப்போது பெற்றோரை தாக்கிவந்ததைத் தொடர்ந்தே தந்தை கம்பியால் அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துவந்த ஹிருத்திக் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். இதையடுத்து தந்தை மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
ஆடம்பர பைக் கேட்டு அடம்பிடித்த மகனை தந்தையே அடித்து கொலைசெய்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

















