ஜப்பானில் புதிய வகை `நீல சாமுராய்' ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு - மாறிவரும் கடல் நீர...
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' ; ராஜினாமா, மெளனம், திடீர் குழப்பம்" - செங்கோட்டையன் ரவுண்டிங்!
அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை ஆதவ் தரப்பு சந்தித்து பேசி தவெகவில் இணையும் சூழலை ஏற்படுத்தியதாக பனையூர் வட்டாரத்தினர் தகவல் சொல்கின்றனர்.
'தவெகவில் இணைகிறீர்களா?'
இந்நிலையில், நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை கிளம்பிய போதும் சென்னையில் வந்திறங்கிய போதும் விமான நிலையத்தில், 'தவெகவில் இணைகிறீர்களா?' எனும் கேள்விக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் மௌனமாக கடந்து சென்றார்.
ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு வந்து சேர்ந்த செங்கோட்டையன் இன்று காலை 8:30 மணியளவில் இனோவா காரில் வெளியே புறப்பட்டார். மீடியாக்கள் சூழ்ந்திருப்பதை அறிந்த செங்கோட்டையன் அப்படியே யூடர்ன் அடித்து வீட்டுக்கு திரும்பிவிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனின் வீட்டுக்கு வந்து சந்தித்தார். வெளியே வந்தவர் செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லும் மனநிலையில் இருப்பதை உறுதி செய்தார். அடுத்ததாக பெங்களூரு புகழேந்தி வந்தார். செங்கோட்டையனை சந்தித்து சில நிமிடங்கள் பேசியவர், 'அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் கூறிவிட்டுதான் செல்வார்.' என பொதுவாக கூறினார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கோட்டையனின் இனோவா கார் தலைமைச் செயலகத்தை நோக்கி செல்ல தயாரானது. செய்தியாளர்கள் சூழ காரில் ஏறிய போதும், 'ராஜினாமா செய்யப்போகிறேன் என்றோ...தவெகவில் இணையப்போகிறேன் என்றோ...' எதையும் கமிட் செய்யவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி மௌனமாக சென்றுவிட்டார்.
'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...'
செங்கோட்டையனின் அந்த '9393' பேன்சி நம்பர் காரை ஊடகத்தினரின் வண்டிகள் பாலோ செய்தது. பீச் ரோட்டில் செங்கோட்டையனின் வண்டி ஏற, அவர் ஜெ.சமாதிக்கு செல்கிறாரோ எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், ஜெ.சமாதியையும் தாண்டி சென்ற செங்கோட்டையனின் கார் தலைமைச் செயலகத்தில் சபாநாயகரின் அறை அருகே இருக்கும் கேட்டில் நுழைந்தது. சபாநாயகர் அறைக்குள் நுழையும் போதும் மைக்குகள் செங்கோட்டையனை துரத்தின. அப்போதும் அவர் எதுவும் பேசவில்லை. அப்பாவுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, 'ஒரு நாள் பொறுங்களேன்...சொல்றேன்...' என சைகையில் ஊடகத்தினரை நோக்கி மெசேஜ் கொடுத்தார்.

அப்பாவு - செங்கோட்டையன் மீட்டிங் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு நீண்டது. இடையில் அமைச்சர் சேகர் பாபுவும் அப்பாவு அறைக்கு வந்து செங்கோட்டையனிடம் சில நிமிடங்கள் பேசிச் சென்றார். 45 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்த செங்கோட்டையன், அப்போதும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் கூட்டதை பிளந்து கொண்டு காரில் ஏறியவரிடம், 'அதிமுக கொடியை இன்னும் கழட்டவில்லையா...' என கேட்டதற்கும் எந்த ரியாக்சனும் இல்லாமல் சென்றார். தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட செங்கோட்டையன் எம்.எல்.ஏக்கள் விடுதியில் சில மணி நேரமாக இருக்கிறார்.
செங்கோட்டையன் நாளை விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவதுதான் திட்டம் என்கின்றனர் ஒரு தரப்பில். இடையில், அதிமுக அதிருப்தியாளர்களை திமுகவில் இணைக்கும் அசைன்மென்டை கையிலெடுத்திருக்கும் சேகர் பாபு உட்பட சிலரும் செங்கோட்டையனை சந்தித்து முக்கியமான சில விஷயங்களை பேசுவதால், செங்கோட்டையன் கடைசி நிமிட குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர். செங்கோட்டையன் எப்போது மௌனம் கலைப்பார்? அப்போது தான் அனைத்து வெட்ட வெளிச்சமாகும்.















