Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உ...
Fei-Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஓரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! - யார் இந்த AI உலகின் `ராஜமாதா'?
எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் 'ராஜமாதா' என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி.
யார் இந்த ஃபெய் - ஃபெய் லி?
சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார்.

கல்லூரி படிப்பு
வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.
ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி
2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து 'இமேஜ்நெட்' என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும்.
இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது.
இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின.

'குயின் எலிசபெத்' ஃபெய் - ஃபெய் லி
லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு 'World labs' என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர்.
நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள 'குயின் எலிசபெத்' பட்டத்தையும் பெற்றுள்ளார்.

















