நடிகை கடத்தல், பாலியல் தொல்லை; வீடியோ பதிவு - திலீப்-க்கு எதிரான வழக்கின் தீர்ப்...
நடிகை கடத்தல், பாலியல் தொல்லை; வீடியோ பதிவு - திலீப்-க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தர். அப்போது அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை வீடியோவாக பதிவுசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய போலீஸார் இதில் நடிகர் திலீபுக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறிந்தனர். துபாயில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் திலீப், நடிகை காவியாவுடன் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். அதுபற்றி திலீபின் முதல் மனைவி மஞ்சு வாரியரிடம் பிரபல நடிகை கூறியிருக்கிறர். இதையடுத்து மஞ்சு வாரியாருக்கும் திலீபிற்கும் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்தானது.

இதையடுத்து நடிகர் திலீப், நடிகை காவியா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் பிரபல நடிகையை பழிவாங்கவே பல்சர் சுனி மூலம் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மொத்தம் 9 பேர் குற்றவாழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில் முதலில் பல்சர் சுனியும், 8-வது இடத்தில் நடிகர் திலீப் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் பிரின்ஸிபல் செசன்ஸ் கோர்டில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நடிகையை அவமானப்படுத்தும் விதமாக பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுப்பதற்காக இந்த கடத்தல் நடந்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கின. 261 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 1700 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8-ம் தேதி (டிச.8) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்ற பல்சர் சுனிக்கு நடிகர் திலீப் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூட்டு பாலியல் தொல்லை, பெண்மையை களங்கப்படுத்துதல், ஆதாரங்களை அழித்தல், ஆபாசமாக படம்பிடித்து பகிர்தல் உள்ளிட்டவைகளில் சதித்திட்டம் தீட்டியதாகவும் திலீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எட்டரை ஆண்டுகளுக்குப்பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



















