BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு...
`காலையில் சிறுமி கடத்தல், மாலையில் ரயில் நிலையத்தில் பிச்சை' - பதறிய பெற்றோர்; பகீர் பின்னணி
மும்பையில் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் சில டாக்டர்களே நேரடியாக ஈடுபட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள மேக்வாடியில் வசிப்பவர் சுக்ராம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது 9 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள். சுக்ராம் தனது உறவினர்கள் துணையுடன் மகளை தேடி வந்தார். பிற்பகல் 1 மணிக்குத்தான் சிறுமி காணாமல் போனாள்.
காணாமல் போன சிறுமி அந்தேரி ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை சுக்ராமின் உறவினர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் சுக்ராமிற்கு தகவல் தெரிவித்தனர். அதுவும், சிறுமி காணாமல் போன அன்று மாலை 7 மணிக்குச் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.
இதுகுறித்து சுக்ராம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். அச்சிறுமியுடன் 17 வயது பெண் ஒருவர் இருந்தார். அவர்தான் சிறுமியை பிச்சை எடுக்க வைத்திருந்தார்.

அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து சுக்ராம் கூறுகையில்,
“எனது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள். சில மணி நேரம் கழித்து, எனது மகள் ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை எனது உறவினர்கள் பார்த்து தகவல் கொடுத்தனர். உடனே சென்று அவளை மீட்டோம்.
எனது மகளுடன் இருந்த நபர் எங்களது பகுதியைச் சேர்ந்தவர்தான். எனது மகளிடம் விசாரித்தபோது, விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்லேட் கொடுத்து, காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வரும்படி கூறியிருந்தார்.
அவள் சேகரித்து வந்த பாட்டில்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்துள்ளார். அதோடு ‘பசிக்கிறது, வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று எனது மகள் கூறியபோது, அவளை மாகிம் தர்காவிற்கு அழைத்து சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து அந்தேரி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்துள்ளார்.
எப்படி பிச்சை எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துள்ளார்,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
சிறுமியை கடத்திய பெண்ணிடம் விசாரித்த போது, பல குழந்தைகளை இதுபோன்று பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்தது. பெற்றோரிடம் ‘விளையாட அழைத்து செல்வேன்’ என்று கூறி அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்துள்ளது.
குழந்தையை கடத்தி ரூ. 6 லட்சத்திற்கு விற்பனை
மும்பையில் 5 வயது குழந்தையை கடத்திச் சென்று விற்பனை செய்தது தொடர்பாக பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை சாந்தாகுரூஸ் வகோலா பகுதியில் வசிக்கும், மனநிலை பாதித்த சாந்தா என்ற பெண் அங்குள்ள ஒரு ஆட்டோவில் தனது 5 வயது மகளுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகளை அதிகாலை 1 மணிக்கு யாரோ கடத்திச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, குழந்தை நவி மும்பையில் பெண் டாக்டர் விருந்தா சவான் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. விருந்தா சவானின் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது கட்டிடத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்த ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த துப்புரவு பணியாளர் மூலம் குழந்தையின் சித்தப்பா லாரன்ஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளர் ஷேக் ஆகியோர் துணையுடன் குழந்தையை கடத்தி ரூ. 6 லட்சத்திற்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
குழந்தையை மீட்டு, பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.



















