``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் த...
புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!
ஆலயம் சென்று வழிபடுவது அருள் சேர மட்டுமல்ல. பொருள் பெறவும் வாழும் இந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளவும்தான். ஒவ்வொரு ஆலயமும் தனித்துவமான நலன்களை வழங்கும் சிறப்பைக் கொண்டே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஓர் ஆலயத்தை இன்று தரிசிக்கலாம். அந்த ஆலயம் கண் பிணிகளைப் போக்குவதோடு நோய்நொடிகளையும் நீக்கும் சிறப்பினைக்கொண்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே அமைந்துள்ள திருக்களம்பூர் கதலிவனநாதர் ஆலயமே அது. சுமார் ஆயிரம் ஆண்டுப் பழைமை கொண்ட ஆலயத்தின் தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமானது.

தலபுராணம்
பாண்டிய மன்னர் ஒருவன் போர் செய்யத் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு காட்டுப்பகுதி வழியாகச் சென்றான். மன்னன் பயணித்த குதிரை புயல்போல் பாய்ந்து சென்றது.
அப்போது வாழைத்தோப்புகள் அடந்த ஒரு பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் மன்னனின் குதிரையின் வேகம் குறையவில்லை. குதிரையின் பாய்ச்சலில் நிலத்தில் இருந்த ஏதோ ஒன்றின் மீது அதன் குளம்பு பட்டது. அதனால் குதிரைக்கும் காலி வலி ஏற்படநின்றுவிட்டது.
மன்னன் எது குதிரையைத் தடுக்கியது என்று பார்க்க அங்கே ரத்தம் பெருகிக்கொண்டிருப்பதைக் கண்டு திகைத்தான். எதிலிருந்து ரத்தம் பெருகுகிறது என்று மண் விலக்கிப் பார்க்க அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதையும் அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் பீறிடுவதையும் கண்டு அதிர்ந்துபோனான்.
குதிரையில் குளம்பு பட்டத்தில் லிங்கம் சிதைவுற்றிருப்பதையும் கண்டான். அந்தக் கணத்தில் மன்னனின் கண்பார்வையும் பறிபோனது. மன்னன் அழுது புலம்பினான். ஈசனிடம் தன் பிழைபொறுக்குமாறு வேண்டினான்.
ஈசன் மனம் உருகினார். "இங்கே ஓர் ஆலயம் எழுப்பு. உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்’’ என்று அருளினார்.
மன்னன் அவ்வாறே செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்க அடுத்த கணம் அவரின் பார்வை மீண்டது. சொன்னபடியே மன்னன் அழகிய ஆலயம் ஒன்றை அங்கே எழுப்பினான். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இன்றும் லிங்கத்தின் மேல் குதிரையின் குளம்படிபட்ட வடுக்களை தரிசிக்கலாம்.
இந்தக் கோயிலின் மூலவர், தீராத நோய்களையும் தீர்த்துவைப்பவர் என்பதால் இவருக்கு ஸ்ரீவைத்தியநாத சுவாமி என்கிற திருநாமம் உண்டாயிற்று.
கதலி என்றால் வாழை. வாழை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டதால், 'கதலிவனேஸ்வரர்' என்ற திருப்பெயரும் இங்குள்ள இறைவனுக்கு உண்டு.
வால்மீகி முனிவர் இங்கே தபோவனம் அமைத்து இருந்ததாகவும் தாயார் சீதாதேவி கர்ப்பிணியாக இருந்த காலத்தில் இங்கு வந்து தங்கியதாகவும் சொல்கிறார்கள்.
ஆதிசங்கரரும் திருக்களம்பூர்த் திருத்தலத்துக்கு வந்து வழிபட்டுள்ளார். இங்கே அம்பாள் சந்நிதி இல்லை என்பதை அறிந்தவர், ஆலயத்துக்கு எதிரிலேயே ஸ்ரீதிருவளர் ஒளி ஈஸ்வரர், ஸ்ரீசௌந்தரநாயகி திருக்கோயிலை எழுப்பினாராம்.
தொடர்ந்து ஸ்ரீகதலிவனேஸ்வரர் ஆலயத்தில் அம்பாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த அம்பாளுக்கு, 'ஸ்ரீகாமகோடீஸ்வரி' என்ற திருப்பெயரும் உண்டு.

ஸ்ரீராமரின் பிள்ளைகளான லவகுசர் இங்கேயே அவதரித்தனர் என்றும் ஸ்ரீராமர் நடத்திய அசுவமேத யாகத்துக்காக அனுப்பிய குதிரையை லவனும் குசனும் இங்கேதான் கட்டிப்போட்டனர் என்றும் தலபுராணம் சொல்கிறது.
மேலும் ராம - லவ குச யுத்தமும் இங்கே நடைபெற்ற இறுதியில் தன்னோடு போரிடுபவர் யார் என்பதை அறிந்த குழந்தைகள் யுத்தத்தை நிறுத்தி அவரைப்பணிந்துகொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது நிறைவில் வால்மீகி மூலம் லவனும் குசனும் தன் மைந்தர்கள் என்பதை அறிந்தார் ராமன். இருவரும் இணைந்து அங்கே ஒரு விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இன்று அந்த விநாயகர் இந்த ஆலயத்தில் கன்னிமூல கணபதியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மருந்தாகும் பஞ்சாம்ருதம்
இங்கே பிராகாரத்தில் உள்ள வாழை மரங்களும் சுயம்புதான் என்கிறார்கள். இந்த வாழை மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. ஆனாலும் அவை நன்கு வளர்கின்றன. அதேபோல வெளியில் இருந்து வாழைக்கன்றுகளை கொண்டு வந்து வளர்க்கும் வழக்கமும் இல்லை. அப்படியே வைத்தாலும் அவை வளராது என்கிறார்கள்.
இந்த வாழைமரத்தின் காய், பூ, தண்டு, பழம் அனைத்தும் சிவார்ப்பணமே என்றும் பிறர் அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்கிறார்கள். இங்கு விளையும் பழங்களைக் கொண்டு செய்யப்படும் பஞ்சாமிர்தம் நோய் தீர்க்கும் மாமருந்து என்பது பக்தர்கள் கருத்து.

பிரார்த்தனை விசேஷங்கள்
திருமணம் ஆகாத ஆண்களோ பெண்களோ, வியாழக்கிழமைகளில் இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பாயசம் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். பின்னர் இறைப் பிரசாதமாகத் தரப்படும் பாயசத்தைக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையின் பலனாக விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கருத்துவேற்றுமையால் பிரிந்துபோன தம்பதியர் மீண்டும் வாழ்க்கைத் துணைவருடன் இணையவேண்டி, இந்த ஆலயத்தை 108 முறை வலம் வந்து, நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்து வழிபடுவதோடு, குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கவேண்டும். இந்த வழிபாட்டின் பலனாக தம்பதியருக்குள் ஒற்றுமை உண்டாகும். பிரிந்த தம்பதியர் மனம் ஒருமித்து வாழ்வார்கள் என்பது ஐதிகம்.
திருமணம் முடிந்து வெகுகாலம் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் அவசியம் வழிபடவேண்டிய ஆலயம் இது. குழந்தை வரம் வேண்டுவோர் தம்பதி சமேதராக இங்கு வந்து வாழைக்காய்களைப் பலியாகச் சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிணிகளால் அவதிப்படும் அன்பர்கள், வைத்தியநாத சுவாமிக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், விபூதி, பால் ஆகிய பொருள்களை அபிஷேகம் செய்து, பின்னர் அந்தப் பிரசாதங்களைச் சாப்பிட, நோய்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.



















