`ஒரு நம்பர் பிளேட் விலை ரூ.1.17 கோடியா?' - ஹரியானாவில் நடந்த ஏலமும் வைரல் வாகன ந...
``செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்'' - அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 'மகளிரின் உழைப்பால் மலரட்டும் திருச்சுழி!’ என்ற இலக்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சொந்த முன்னெடுப்பில் நடத்தி வரும் மூன்று நாள் இலவச மகளிர் தொழிற்பயிற்சி முகாமில் 15 வயது முதல் 70 வயது வரையுள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் சிறு தொழில், உணவுப் பொருள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, அழகுக் கலை உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மகளிர் சுயத்தொழில் முகாமை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மூலம் தனது கனவிற்கு உயிர் கொடுத்த பெண்ணை பாராட்டினார்.
நேற்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்பில் கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி பங்கேற்றார். இவர் சிறு வயது முதலே காவல்துறை அதிகாரியாக ஆகவேண்டும் என்ற இலக்குடன் முயற்சி செய்து வந்துள்ளார்.
ஆனால் உயரக் குறைபாடு காரணமாக காவல்துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில் சேர முடியவில்லை. மேலும் வறுமையால் படிப்பும் தடைபட்ட நிலையில், தற்போது TNPSC குரூப்-4 தேர்வு எழுதி அரசு பணி பெற முயற்சித்து வருகிறார்.
தனது பழைய கனவை நினைவுகூர்ந்த முத்துலட்சுமி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானே காவல்துறை சீருடையில் இருப்பது போலவும், “என் பெயர் முத்துலட்சுமி, நான் காவல்துறை அதிகாரி” என்று பேசுவது போல ஒரு சிறிய வீடியோவை உருவாக்கினார்.
இந்த வீடியோவைப் பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு மிகுந்த மகிழ்ச்சியுடன் கைதட்டி உற்சாகப்படுத்தினார். உடனடியாக முத்துலட்சுமியை மேடைக்கு அழைத்து பாராட்டிய அமைச்சர், கண்ணீருடன் வந்த முத்துலட்சுமியை பாராட்டி, விரைவில் அரசு பணியை பெறுங்கள் என்று சல்யூட் அடித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின் பேசிய தங்கம் தென்னரசு,
“நகரங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் கிராமப்புறங்களுக்கும் வரவேண்டும். தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மகளிர் தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் மகளிர் கைவசப்பட வேண்டும்.
நமக்கான வேலை முன்னேற்றம் நமக்கான தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது ஆரம்பகால பயிற்சி அடுத்தகட்ட பயிற்சிகள் விரைவில் தொடங்கும். இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் மகளிர் பொருளாதாரத்தில் உயரமுடியும்" எனத் தெரிவித்தார்.















