Delimitation: "இது வாழ்வா, சாவா போராட்டம்; அதனால்..." - சந்திப்புக்கு பிறகு ஸ்டா...
"DMKவிற்குத் துரோகம் செய்த Congress, DMKவைப் பார்த்து துரோகம் செய்கிறது என்கிறது" - வானதி சீனிவாசன்
கோவையில் பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
முருக பக்தர்களுடைய கோரிக்கையைப் புறந்தள்ளி நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், கூட அதற்கு அவமரியாதை செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்றால், நாங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வோம் என்கின்ற மமதையில் இருந்த தமிழக அரசுக்குச் சரியான பாடத்தை உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதற்கு பின்னால்தான் ஒரு பெண் ஆட்சியருக்கு நீதி கிடைக்கும் என்றால், சாதாரண பெண்கள் அவர்களுடைய நிலை என்னவாகும்? சினிமா வசனம் மாதிரியே, தேர்தல் பிரசாரத்தில் அண்ணனாக இருக்கிறேன், மாமனாக இருக்கிறேன், மச்சானாக இருக்கிறேன் என்னென்ன கதை விட்டார்.
முதல்வர் உங்க குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு இதுபோன்று நடந்து இருந்தால் இப்படித்தான் பொறுமையா? அமைதியாக வேடிக்கை பார்ப்பீர்களா? இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு அவமானம் என்று பார்க்க வேண்டும்.
த.வெ.க ஆட்சி செயல் இழந்த ஆட்சியாக மாறிக் கொண்டு உள்ளது. தன்னுடைய சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வைக் கண்டிக்க முடியாமல், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல், டெல்லியில் இருந்து ஒரு மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கி, உயர்நீதிமன்றம் கூறியதற்குப் பின்னால்தான் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், ஆளுங்கட்சியில் இருக்கின்ற தலைவருக்கு, முதலமைச்சர் என்ன வேலை?
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி கொண்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் மிரட்டப்பட்டு இருக்கலாம், அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து இருக்கலாம், ஆனாலும் கூட ஒரு பெண் பாதிக்கப்பட்டு அவர் வெளிப்படையாகச் சட்ட நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவருக்கு உரிய நீதி கிடைக்கும் என்பது அடிப்படை. ஆனால் சமுதாயத்தில் என்ன நினைப்பார்கள் என்று பல்வேறு மனத் தடைகளைத் தாண்டித்தான் ஒரு பெண் புகார் அளிக்க வேண்டிய வர உள்ளது.

தூய சக்தி என்று ஆட்சிக்கு வந்தவரின் ஆட்சியில் ஒவ்வொரு மட்டத்திலும் இன்று ஊழலும், லஞ்சமும் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. அதனால் தூய்மையான ஆட்சி என்று சொல்வதற்கு எந்தவித அருகதையும் இல்லாத ஆட்சியாக ஜோசப் விஜய்யின் ஆட்சி மாறிக் கொண்டு உள்ளது.
தொகுதி மறுவரயறை மசோதா வந்த போது எதிர்த்தவர்கள் எல்லாரும் கூட நாளை நடக்கக் கூடிய சிறப்புக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் இதற்காக ஆதரவு கொடுத்து இருப்பதற்கு நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலங்களுக்கு ஏற்கனவே உள்ள எண்ணிக்கையில் ஒரு சதவீதம் கூட குறைக்காமல் தொகுதிகளுடைய எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது. தி.மு.க-விற்குத் துரோகம் செய்துவிட்டு த.வெ.க கூட்டணிக்குச் சென்ற காங்கிரஸ், தி.மு.க வைப் பார்த்து துரோகம் செய்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள். தி.மு.க ஆதரவோடு, தி.மு.க. பணத்தில் ஜெயித்து விட்டு தி.மு.க-வுக்குத் துரோகம் செய்து விட்டு சென்றவர்கள் எல்லாம் தி.மு.க வை பார்த்து இன்று துரோகம் என்று பேசுகிறார்கள் என்ன அநியாயம் இது?” என்றார்.















