ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; 2...
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்; கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; 2 பேர் கைது
கேரள மாநிலம் கோழிக்கோடு - அடிவாரம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் புதுப்பாடி மேற்கு கைதப்பொயில் பகுதியைச் சேர்ந்த கே.கே.அனீஷ் என்கிற குட்டன் (38).
அதே பேருந்தில் கிளீனராகப் பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சஜித் என்கிற அக்கு (24). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 20 வயது பட்டியலின இளம்பெண்ணுக்கும், இவர்கள் இருவருக்கும் இடையே அறிமுகம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை, சாலையோரத்தில் வழிமறித்த இவர்கள், அவருக்கு போதைப்பொருள் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.
பின்னர், அப்பெண்ணை ஒரு லாட்ஜிற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனைத் தங்களது செல்போனில் ஆபாச வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். அந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, அப்பெண்ணை இவர்கள் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இளம்பெண்ணைப் பேருந்தில் ஏற்றிக்கொண்டு தாமரச்சேரி அடிவாரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்தை நிறுத்தி, பேருந்துக்குள்ளேயே வைத்துப் பலமுறை பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவர்களின் தொடர் சித்ரவதையைத் தாங்க முடியாத அந்த இளம்பெண், முதலில் கொடுவள்ளி காவல் நிலையத்திலும், பின்னர் காக்கூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
மேலும், இவர்கள் தவிர வேறு சிலரும் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர்களை நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அப்பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, தாமரச்சேரி டி.எஸ்.பி கே.ஏ.போஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த அனீஷ் மற்றும் சஜித் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.
கைதான இருவரும் தாமரச்சேரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.





















