செய்திகள் :

Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்?

post image

Doctor Vikatan: என் வயது 45. சளி, இருமல் வரும்போது மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். சில வகை இருமல் மருந்துகள் எந்தப் பக்கவிளைவையும் ஏற்படுத்துவதில்லை. சில இருமல் மருந்துகளோ, கை, கால் நடுக்கம், படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்?


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை
மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

சளி மற்றும் இருமல் மருந்துகள் பொதுவாகப் பல மருந்துகளின் கலவையாகவே இருக்கும். அவற்றில் உள்ள சில கூறுகள் கை, கால் நடுக்கம் (Tremors) மற்றும் இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இருமல் மருந்துகள் பல வகைப்படும்.

ஒருவரின் பிரச்னை மற்றும் உடல்நலம், இருமலின் தீவிரம் என பல விஷயங்களைப் பொறுத்தே அவை பரிந்துரைக்கப்படும். அந்த வகையில்,

1. டீகன்ஜெஸ்டென்ட்ஸ் (Decongestants) ஃபினைல்எஃப்ரின் (Phenylephrine) அல்லது சூடோஎஃபெட்ரின் (Pseudoephedrine) போன்ற டீகன்ஜெஸ்டென்ட்ஸ், மூக்கடைப்பை நீக்க உதவுகின்றன. ஆனால், இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம், மற்றும் சிலருக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (Arrhythmias) அல்லது நடுக்கத்தை ஏற்படுத்தலாம்.

எனவே, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் இவற்றைக் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. பிராங்கோடைலேட்டர்ஸ் (Bronchodilators) சில இருமல் சிரப்களில் டெர்புடலைன் (Terbutaline) அல்லது சல்புடமால் (Salbutamol) போன்றவை கலந்திருக்கலாம். இவை சுவாசக்குழாயைத் தளர்த்தி, சளியை வெளியேற்றவும் மூச்சு விடுவதை எளிதாக்கவும் உதவுகின்றன.

இந்த மருந்துகள் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதால், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் கை, கால்களில் நடுக்கத்தை (Tremor) பக்க விளைவாக உருவாக்கலாம்.

மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

3. ஆன்டிஹிஸ்டமின்ஸ் (Antihistamines) சில ஆன்டிஹிஸ்டமின்களும் சில நேரங்களில் இதயத் துடிப்பை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம், சிலருக்கு நடுக்கத்தைக்கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே, எப்போதுமே நீங்களாக மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த பிறகு உங்களுக்குத் தீவிரமான அல்லது தொடர்ச்சியான நடுக்கமோ, வேறு பக்க விளைவுகளோ ஏற்பட்டால், உடனடியாக மருந்தை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.