`அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?
தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது.
நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் கூட அடிக்காமல் படுதோல்வியடைந்தது.
இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி (நவம்பர் 22) கவுகாத்தியில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய தென்னாபிரிக்கா அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் ஆல்ரவுண்டர் சேனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இவ்வாறிருக்க, நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சேனுரான் முத்துசாமி சதம் அடித்து 206 பந்துகளில் 109 ரன்களுடன் அவுட்டானார்.
இதுதான் சேனுரான் முத்துசாமிக்கு சர்வதேச கரியரில் முதல் சதமாகும்.
சேனுரான் முத்துசாமி 1994-ல் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் இந்திய வம்சாவளி முத்துசாமிக்கும், வாணி மூடேலிக்கும் மகனாகப் பிறந்தார்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாத்தா பாட்டி, இவர் பிறப்பதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
சேனுரான் முத்துசாமியின் உறவினர்கள் இன்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கின்றனர்.

சேனுரான் முத்துசாமி சிறுவயதாக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்ததால் தாய் வாணி ஒற்றை ஆளாகக் குடும்பச் சுமை மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆளாக்கினார்.
கிளிஃப்டன் கல்லூரியில் (Clifton College) படித்த சேனுரான் முத்துசாமி, குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் (University of KwaZulu-Natal) சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, மீடியா அண்ட் மார்கெட்டிங்கில் நிபுணத்துவமும் பெற்றார்.
கல்வியில் கவனம் செலுத்திய அதேவேளையில் பள்ளிப் பருவம் முதலே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி உள்ளூர் போட்டிகளில் தனக்கான இடத்தை உருவாக்கினார் சேனுரான் முத்துசாமி.
உள்ளூர் போட்டிகளில் 11 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை குவாசுலு-நடால் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆனாலும் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த சேனுரான் முத்துசாமிக்கு இறுதியாக 2013-ல் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்து அழைப்பு வந்தது.

அதையடுத்து, உள்ளூர் போட்டியில் 2015-16 சீசனில் டால்பின்ஸால் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒப்பந்தம் ஆன சேனுரான் முத்துசாமி, 2016-17 சீசனில் நைட்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் டால்பின்ஸால் அணியில் 181 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார்.
ஆனால், அதன் பிறகு அவரின் பேட்டிங் சற்று குறைந்தது. அதேவேளையில் அவரின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டது. இந்த மாற்றம் அவரை ஆல்ரவுண்டராக வேறொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது.

இதுகுறித்து அவருடைய அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் 2019-ல், ``அவரது பேட்டிங் சற்று குறைந்திருக்கிறது. ஆனால், அவரின் பந்துவீச்சு அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது" என்று கூறினார்.
அதே ஆண்டில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில் ஆல்ரவுண்டராக சேனுரான் முத்துசாமி இடம்பிடித்தார்.
அந்தத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தனது சர்வதேச கரியரின் விக்கெட் எண்ணிக்கையை கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கித் தொடங்கினார்.
இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் அதுவும் விராட் கோலியை அவுட்டாக்கியது அவரின் சர்வதேச கரியருக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது.

ஆனாலும், தென்னாப்பிரிக்கா அணியில் கேஷவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோரின் இருப்பால் தொடர்ச்சியாக அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை.
2019-ல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமானாலும் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டுதான் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானார்.

எப்படி இவரின் சர்வதேச கரியர் இந்திய மண்ணில் பிரபலமாகத் தொடங்கியதோ, அதேபோல அவரின் சர்வதேச கரியரின் முதல் சதம் இந்தியாவில் வந்ததன் மூலம் தன் கரியரில் மேலும் ஒரு சிறப்பான தருணத்தை உருவாக்கியிருக்கிறார்.
ஓர் இந்திய வம்சாவளியாக, தமிழனாக தென்னாபிரிக்க அணியில் நீண்டகாலம் ஆடி உலக அரங்கில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க சேனுரான் முத்துசாமிக்கு வாழ்த்துகள்!


















