smriti mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா ...
smriti mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இன்று காலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள்.
உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஸ்ரீனிவாஸும் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை உறுதி செய்த ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் மிஷ்ரா, “இன்று காலை ஸ்ரீனிவாஸ் காலை உணவு உண்ணும்போதே உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
சாதாரணமாக இருக்குமென்று கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தோம். ஆனால் நிலைமை மேலும் மோசமானதால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார். ஸ்மிருதி தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமான பாசப் பிணைப்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்பா முழுமையாக குணமடையும் வரை திருமணத்தைப் பற்றி யோசிக்க முடியாது என்று அவர் உறுதியாக முடிவெடுத்துவிட்டார். அதன்படி இன்று நடைபெறவிருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களும் அவர் முழுமையாக சரியாகும் வரை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாங்கள் அனைவரும் இந்தச் சூழலில் அதிர்ச்சியில் உள்ளோம். அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.


















