சேலம்: `56 அடி உயரம்’ - பிரமாண்ட ராஜமுருகன் சிலை பிரதிஷ்டை!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் அருள்மிகு ராஜ முருகன் சிலை 56 அடியில் பிரம்மாண்ட அமைக்க திட்டமிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முருகன் சிலை அமைக்கப்பட்டபோது முனியப்பன் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் சிலையை மாற்றி அமைக்க முடிவு செய்தது.
பின்னர் ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. தற்போது கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டது, பக்தர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட ராஜமுருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் நேற்றைய தினம் காலை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தி, தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராஜ முருகனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பெரிய கிரேன் வாகனம் மூலமாக முருகன் சிலைக்கு அருகே சென்று மகா கும்பாபிஷேக தீர்த்தம் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜமுருகனை வழிபட்டனர். பின்னர் தீர்த்தம் மீது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

















