கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01
Doctor Vikatan: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் ‘ice dunk’ சீக்ரெட்; சருமத்தைப் பளபளப்பாக்குமா?
Doctor Vikatan: நடிகை ப்ரியங்கா சோப்ரா தன் முகத்தின் வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தைப் பளபளப்பாக்கவும் ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீரில் முகத்தை நனைக்கும் 'ஐஸ் டங்க்' (ice dunk’) முறையைப் பின்பற்றுவதாக வீடியோ பகிர்ந்துள்ளார். இந்தச் சிகிச்சை சருமத் துவாரங்களை டைட் செய்து, முகத்தைப் பொலிவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிகிச்சை உண்மையிலேயே பலன் தருமா... எல்லோரும் பின்பற்றலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

நடிகை ப்ரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ள இந்த 'ஐஸ் டங்க்' சிகிச்சை சமூக ஊடகங்களில் டிரெண்டிங்காக இருக்கிறது. இதில் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. ஐஸ் வாட்டரின் அதீத குளிர்ச்சியானது, நம் ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும். இதனால் முகத்தில் உள்ள வீக்கம் (Puffiness) மற்றும் அழற்சி (Inflammation) குறைகிறது.
மேக்கப் போடுவதற்கு முன்போ அல்லது காலையில் தூங்கி எழுந்தவுடனோ முகத்தை ஐஸ் தண்ணீரில் கழுவும்போது, அது சருமத்திற்குப் புத்துணர்ச்சியையும், ஆரோக்கியமான பொலிவையும் உடனடியாகத் தருகிறது. பருக்கள் உள்ள சருமத்திற்கு (Acne-prone skin), இது தற்காலிகமாக எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால், இது அந்தத் தருணத்திற்கு மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை கவனத்தில் கொள்ளவும். நீண்டகால அடிப்படையில் இது சருமத்திலோ அல்லது ஆரோக்கியத்திலோ பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. உடலின் செயல்பாடுகளையோ அல்லது சருமப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணங்களையோ மாற்றாது.
இதில் உள்ள பாதங்களையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கான 'ஸ்கின் பேரியர் லேயர்' (Skin barrier layer) இதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம். சருமத்தில் அதிகப்படியான வறட்சியையும் (Dryness) மற்றும் தோல் உரியும் தன்மையையும் (Flakiness) இது உண்டாக்கக்கூடும்.

முகம் சிவந்து காணப்படும் 'ரோசேஷியா' (Rosacea) போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த ஐஸ்வாட்டர் சிகிச்சை எடுப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னை இருப்பவர்களுக்கு, இது மெலனோசைட்டுகளை (Melanocytes) தூண்டி சருமத்தை மேலும் கருமையாக்க வாய்ப்புள்ளது.
நமது முகத்தின் சருமப் பகுதியில் நுண்ணிய துவாரங்கள் இருக்கும். சைனஸ் (Sinusitis) பாதிப்பு உள்ளவர்கள் திடீரென இப்படி அதீத குளிர்ச்சியான ஐஸ் தண்ணீரைப் பயன்படுத்தும்போது அது அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சைனஸ் பாதிப்பைத் தீவிரப்படுத்தலாம். தலைபாரத்தை ஏற்படுத்தலாம். எனவே, சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆவதையோ, பிரபலங்கள் செய்வதைப் பார்த்தோ, இத்தகைய சிகிச்சைகளை கண்மூடித்தனமாக எல்லோரும் பின்பற்றக் கூடாது. எப்போதாவது ஒருமுறை மேக்கப் போடுவதற்கு முன்பு மட்டும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து செய்வது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















