Gold Rate: ரூ.1.06 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு - இன்றைய வ...
மகாராஷ்டிரா தேர்தல்: 'நிலம், கார், வெளிநாட்டுப் பயணம்' - வாக்குறுதிகளை வாரி வழங்கும் வேட்பாளர்கள்!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தேர்தல் நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் வேட்பாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். புனே மாநகராட்சியில் சிவசேனா வேட்பாளர் ஒருவர் தனக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் வேட்புமனுவைக் கிழித்துச் சாப்பிட்ட சம்பவம் கூட நடந்திருக்கிறது.
புனே மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு இலவசங்களையும், பரிசுகளையும் வாரி வழங்கி இருக்கின்றனர்.
புனே ஒன்றாவது வார்டில் தேசியவாத காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் சசி திங்ரே தனது வார்டில் வசிக்கும் பெண்கள் 11 பேருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குத் தலா 1100 சதுர அடி நிலம் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.
இது குறித்து சசி கூறுகையில், ''நிலம் கொடுக்கும் திட்டத்தை ஒரு சமூக மேம்பாட்டு நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமே தவிர, அது ஒரு சலுகையாகக் கருதப்படக் கூடாது.

இது வாக்குகளை வாங்குவது பற்றியது அல்ல, மாறாக நில உரிமை மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் வழங்குவது பற்றியது'' என்று தெரிவித்தார்.
புனே வகோலி பகுதியில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் குலுக்கல் முறையில் தம்பதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை 5 நாள் தாய்லாந்திற்கு சுற்றுலா அழைத்து செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
புனே விமன்நகர் பகுதியில் போட்டியிடும் சாக்ஷி பிரேர்னா பெண்களுக்கு போட்டி நடத்தி அதில் வெற்றி பெறும் பெண்களுக்கு பைதனி சேலை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
கார் பரிசு
10வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் 500 பெண்களுக்கு இலவசமாக சைக்கிள் கொடுத்து இருக்கிறார். கிரண் பாட்டீல் என்ற வேட்பாளர் பெண்களுக்கு தையல் மெஷின் வழங்கி இருக்கிறார். திலிப் பாட்டீல் என்ற வேட்பாளர் இலவச இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியில் போட்டியிடும் சங்கேத் பர்னே என்ற வேட்பாளர் பாலிவுட் பிரமுகர்களை அழைத்து வந்து பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதில் பங்கேற்ற 5 ஆயிரம் பேரில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பிம்ப்ரியில் போட்டியிடும் அஸ்வினி என்ற வேட்பாளர் கிரிக்கெட் போட்டிகளை ஏற்பாடு செய்து ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்து இருக்கிறார்.
இந்த இலவசங்கள் குறித்து நகர கொள்கை வல்லுநர் ஜோதி கனடே கூறுகையில், "ஜனநாயகத்தில் வாக்காளர்களை நுகர்வோராகவும், தேர்தலை முதலீடுகளாகவும் கருதும் அணுகுமுறையை இது காட்டுகிறது" என்றார்.
மும்பையிலும் வேட்பாளர்கள் கோயில்கள், சாதி சங்கங்கள், சமூக அமைப்புகளுக்குக் கணிசமாகப் பணத்தை வாரி வழங்கி வருகின்றனர். அதோடு சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களைச் சரிக்கட்டும் வேலையிலும் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரசாரத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்
வாக்காளர்கள் சமூக ஊடகங்களிலும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தப் பிரசாரத்தில், வேட்பாளர்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரங்களாகத் தோன்றி, சரளமாக மராத்தியில் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஸ்பைடர்-மேன் போன்று வேட்பாளர்கள் தோன்றி சமூக ஊடகங்களில் வாக்கு சேகரிக்கின்றனர்.
சிவசேனா சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தான் 'ஸ்பைடர்-மேன் அல்ல, ஒரு சாதாரண மனிதன்' என்று வலியுறுத்தும் அவர், தனது வார்டின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உழைப்பதாக உறுதியளித்துள்ளார்.
பாப் பாடகர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்களும் இதுபோன்று பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இது போன்ற சில வீடியோக்கள் 12 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளன.












