"GMTக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)"- நேரக்கணக்கீட்டு முறையை மாற்ற கோ...
Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன்... ஆன்டிபயாடிக் எடுக்கலாமா?
Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது எனக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வருகிறது. ஒன்றிரண்டு முறை மருத்துவரைச் சந்தித்தபோது ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்கள்.
ஒவ்வொரு முறை இன்ஃபெக்ஷன் வரும்போதும் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா.... அதே ஆன்டிபயாடிக் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மெனோபாஸை நெருங்கும் பெண்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படும் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது சகஜம். அவர்களது உடலில் ஹார்மோன் அளவுகள் குறையத் தொடங்குவதால் வெஜைனா பகுதி வறண்டுபோகும். அந்த வறட்சி, சிறுநீர்த் தொற்றுக்குக் காரணமாகலாம்.
உங்களுக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒருவேளை அது சர்க்கரைநோய் பாதிப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுகினால் மட்டுமே அவர் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதைச் சந்தேகித்து அதற்கான டெஸ்ட்டை எடுக்கச் சொல்வார். சர்க்கரைநோய் இல்லாதவர்களுக்கு, அடிக்கடி தொற்று வராமலிருக்க வழிகளைச் சொல்வார்.
யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்படும்போது மருத்துவர் சிறுநீர்ப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்பார். அந்தச் சோதனையில் தொற்றுக்குக் காரணமான கிருமி கண்டுபிடிக்கப்பட்டு அதற்கேற்பவே மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை ஐந்து நாள்கள் முதல் இரண்டு வாரங்கள்வரை தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பார்.
ஆனால், பலரும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த ஒன்றிரண்டு நாள்களிலேயே பிரச்னை சரியானதாக உணர்ந்ததும் மீதமுள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் நிறுத்தி விடுவார்கள். பரிந்துரைத்த நாள்களுக்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் விடும் பட்சத்தில் அடுத்த முறை அதே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் அந்த நபரின் உடலில் வேலை செய்யாது.

பொதுவாக ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கும்போது குறைவான வீரியத்திலிருந்துதான் தொடங்குவார்கள். அந்த மருந்து வேலை செய்யவில்லை என்ற நிலையில்தான் அதன் தீவிரம் அதிகரிக்கப்படும்.
ஆன்டிபயாட்டிக்கை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் பாதியிலேயே நிறுத்தும்போது அடுத்த முறை பாதிப்போடு வரும்போது அந்த நபருக்கு அதே மருந்து வேலை செய்யாது. வேறுவழியே இன்றி, வீரியமான ஆன்டிபயாடிக்கைப் பரிந்துரைக்க வேண்டி வரும். இது யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு மட்டுமல்ல, சளி இருமல் உள்ளிட்ட எந்த விதமான தொற்றுக்குப் பரிந்துரைக்கும் மருந்துக்கும் பொருந்தும்.
மருத்துவர் ஒருமுறை பரிந்துரைத்த மாத்திரைகளை, அடுத்தடுத்த முறை பிரச்னை வரும்போதும் நீங்களாகவே எடுத்துக்கொள்வதும் ஆபத்தானது. போனமுறை வந்த அதே காரணத்தால்தான் இந்த முறையும் இன்ஃபெக்ஷன் வந்ததா என்று தெரியாமல் நீங்களாக மாத்திரைகளைத் தொடர்வது பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, உங்களுக்கு அடிக்கடி இந்தப் பிரச்னை வருவதை மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள். சர்க்கரைநோய்க்கான டெஸ்ட்டை எடுத்துப் பாருங்கள். இவற்றை அடிப்படையாக வைத்து மருத்துவர் உங்களுக்கான சிகிச்சையை முடிவு செய்வார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















