Vijay: '''நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்"- ...
Doctor Vikatan: ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்... கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா?
Doctor Vikatan: முடி வளர்ச்சி குறைவாக உள்ள பலரும் இன்று ஹேர் எக்ஸ்டென்ஷன் எனப்படும் சிகிச்சையைச் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். அந்தச் சிகிச்சையைச் செய்து கொண்டால், முடி வளர்ச்சி அதிகரிக்குமா.... ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சை கூந்தலுக்குப் பாதுகாப்பானதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

ஹேர் எக்ஸ்டென்ஷன் (Hair extension) சிகிச்சைகள் குறித்து பலருககும் பலவிதமான கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகளே தவறானது என நினைக்க வேண்டியதில்லை. சரியான நபர்களிடம் பாதுகாப்பான முறையில் செய்துகொள்ளும்போது அதில் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆனால், ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்துகொள்வதென முடிவு செய்துவிட்டால், அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதல் விஷயம், நீங்கள் செய்துகொள்கிற ஹேர் எக்ஸ்டென்ஷன் ரொம்பவும் இறுக்கமாக, அசௌகர்ய உணர்வைத் தருவதாக இருக்கக்கூடாது. கூந்தலுக்குப் போகிற ரத்த ஓட்டத்தைத் தொந்தரவு செய்யும்படி இருக்கக்கூடாது. சிலவகை ஹேர் எக்ஸ்டென்ஷன்கள், 'ஸ்டிக் ஆன்' டைப்பில், அதாவது ஒட்டி எடுக்கும் விதத்தில் வருகின்றன. அவற்றை உபயோகித்துவிட்டு, அகற்றும்போது, மண்டைப்பகுதியில் புண்கள், கட்டிகள் போன்றவை வரக்கூடாது. பயன்படுத்தப்படுகிற பசையானது தரமாக இருக்க வேண்டும். அலர்ஜியை ஏற்படுத்தக்கூடாது.
சில வகை ஹேர் எக்ஸ்டென்ஷன்களில் குட்டிக்குட்டி மணிகள் போன்று முடியோடு சேர்த்துக் கோத்தது போல செய்யப்படும். அப்படிச் செய்யும்போது, அது உங்கள் முடியை இழுக்கும் படி இருக்கக்கூடாது. அப்படியிருந்தால் 'டிராக்ஷன் அலோபேஷியா' (traction alopecia) என்ற பிரச்னை வரலாம். அதாவது கஷ்டப்பட்டு வளர்க்கும் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்பட்டால், மீண்டும் மீட்டெடுக்க முடியாது. முன்னந்தலை, உச்சந்தலை போன்ற இடங்களில் முடி உதிர்வு ஏற்படலாம். அந்த இடத்தில் மறுபடி முடி வளரச் செய்ய நீண்டகாலம் எடுக்கலாம்.

ஹேர் எக்ஸ்டென்ஷன்களை தொடர்ச்சியாகவும் பயன்படுத்தக்கூடாது. அதுவும் உங்கள் கூந்தலை பெரிய அளவில் பாதிக்கும். எனவே, எப்போதாவது ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து கொள்ளலாம். ஒரு முடி வளர, கிட்டத்தட்ட 45 நாள்கள் ஆகும். அந்த இடைப்பட்ட நாள்களில் உங்கள் தன்னம்பிக்கை குறையாமல் இருக்கவும், தோற்றப் பொலிவை மேம்படுத்திக் காட்டவும் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து கொள்ளலாம், தவறில்லை. ஆனால், அது சரியாகச் செய்யப்பட வேண்டியது மிக மிக முக்கியம்.
தலைவலி, அரிப்பு, அலர்ஜி, சிவந்துபோவது போன்ற பிரச்னைகள் இருந்தால் கவனம் தேவை. ஹேர் எக்ஸ்டென்ஷனை சரியாகப் பராமரிக்க வேண்டியதும் முக்கியம். ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சையானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாது. கூந்தலை பலப்படுத்தாது. கூந்தல் பாதிப்பை சரி செய்யாது. அதெல்லாம் சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள், முறையான பராமரிப்பு, கூந்தல் சுகாதாரம் போன்றவற்றால் மட்டுமே சாத்தியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















