BHEL 10 % Down Why? | 500% Tariff விதிக்கப்போகிறாரா Trump? |Russia | Metal secto...
Vijay: '''நம்மள கலாய்ச்சிட்டாங்க, அதனால அதைப் பண்ண வேண்டாம்'னு விஜய் சொன்னார்"- கோரியோகிராபர் அசோக்
விஜய்யின் படங்களில் எப்போதுமே இன்ட்ரோ பாடல்கள் முக்கியமானதாக இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு அந்தத் தொடக்கப் பாடல், கொண்டாட்டத்துடன் நடனமாட வைக்கும்.
அப்படி கொண்டாட்டத்தைக் கொடுக்கக் கூடியதாக அமைந்த விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் ஏராளம். 'போக்கிரி பொங்கல்', 'வாடா வாடா தோழா', 'ராமா ராமா' என விஜய்யின் பல தொடக்கப் பாடல்களைக் கோரியோ செய்தவர், கோரியோகிராபர் அசோக் ராஜா.

சமீபத்தில், மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்த 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராபர்கள் பலரும் விஜய்யின் ஹிட் பாடல்களுக்கு ஒன்றிணைந்து பெர்ஃபார்ம் செய்திருந்தார்கள்.
கோரியோகிராபர் அசோக் ராஜாவும் அங்கு சென்று அதிரடியான நடன பெர்ஃபார்மென்ஸ் ஒன்றைக் கொடுத்திருந்தார். சென்னை திரும்பியிருக்கும் அவரைச் சந்தித்தோம்.
விஜய்யுடனான அவருடைய ஃப்ளாஷ்பேக் பக்கங்களைப் புரட்டித் தெரிந்துகொள்ள பல கேள்விகளைக் கேட்டோம்.
மலேசியா இசை வெளியீட்டு விழாவில் கோரியோகிராஃபர்ஸ் அனைவரும் இணைந்து விஜய்க்காக நடனமாடி இருந்தீர்கள்! அதற்கான ஐடியா யாருடையது? அனைவரும் விஜய் சாரிடம் ஒரு லெட்டர் கொடுத்திருந்தீர்களே! அதில் என்ன குறிப்பிட்டிருந்தீர்கள்?
ஆடியோ லாஞ்ச்ல நாங்க அனைவரும் சேர்ந்து பெர்ஃபாம் பண்ணினதுக்கு காரணம் பிரபு தேவா மாஸ்டர்தான். அவருடைய ஐடியாதான் அது. நாங்க எல்லோரும் சேர்ந்து மேடையில நடனமாடப் போறோம்னு விஜய் சாருக்குத் தெரியும். ஆனா, எப்படியான வகையில அது இருக்கப் போகுதுனு அவருக்குத் தெரியாது.
நாங்க ஆடத் தொடங்கும்போது, எல்லோரும் போய் அவருக்கு லெட்டர் கொடுத்தோம். அதுல அவங்க அவங்க விஜய் சார்கிட்ட சொல்ல விரும்பின விஷயங்களை எழுதியிருந்தாங்க. நான் 'என்றும் அன்புடன்'னு அந்த லெட்டர்ல எழுதிக் கொடுத்தேன். ஆடியோ லாஞ்சுக்கு அடுத்த நாள் அவரைச் சந்திக்கிறதுக்கு வாய்ப்புக் கிடைச்சது.
அப்போ அவர் 'ரொம்ப எமோஷனலாக இருந்தது அசா'னு சொன்னாரு. விஜய் சார் எப்போதுமே என்னை செல்லமாக அசானுதான் கூப்பிடுவாரு. இப்போதும் அதை மறக்காமல் என்னை அப்படியே கூப்பிட்டாரு. அந்தச் சந்திப்பின்போது என்னைக் கட்டிப்பிடிச்சு அவருடைய அன்பை வெளிப்படுத்தினதுல எனக்குள்ள அவ்வளவு சந்தோஷம்.
என் மீது எப்போதும் அவருக்கு அக்கறை இருக்கும். கடைசி படத்துல அவரோட வொர்க் பண்ண முடியலனு வருத்தமிருக்கு. ஆனா, மறுபடியும் அவர் நடிக்க வரணும்னு எனக்கு ஆசையாக இருக்கு.
இசை வெளியீட்டு விழாவில, நான் கோரியோ பண்ணின 'போக்கிரி பொங்கல்' டான்ஸை விஜய் சார் ஆடுவார்னு யாரும் எதிர்பார்க்கல. எதிர்பார்க்காத விஷயம், அன்றைக்கான விழாவின் ஹைலைட்டாக மாறிடுச்சு.

'போக்கிரி' படத்தில் விஜய்யையும் பிரபு தேவாவையும் நடனமாட வைத்தது எப்படி?
விஜய் சார் எப்போதுமே டான்ஸ் மீது ஆர்வம் கொண்டவர். 'போக்கிரி' படத்துல பல நடனங்கள் நான் ஐடியாவாக யோசிச்சு வச்சிருந்தோம். பிரபு தேவா மாஸ்டரோட இன்புட்ஸ் சிலவற்றை கொடுத்தாரு. அதன் மூலமாகதான், 'போக்கிரி பொங்கல்' ஸ்டெப்பைக் கொண்டு வந்தோம்.
எனக்கு அந்தப் பாடல் நல்லா பேர் வாங்கிக் கொடுத்தது. அதுல ஒரு காட்சியில பிரபு மாஸ்டரை நடனமாட வைக்கணும்னு எனக்குள்ள யோசனை இருந்தது. விஜய் சார்கிட்ட அதைப் பத்தி சொன்னதும், அவரும் ஹேப்பியாகி 'உண்மையாவா அசா, முடியுமா?'னு கேட்டாரு.
அவருக்குமே பிரபு மாஸ்டர் அந்தப் பாடல்ல டான்ஸ் பண்ணனும்னு விருப்பம் இருந்தது. நான் பிரபு மாஸ்டர் ஹீரோவா நடிச்சப் படத்துக்கு கோரியோ பண்ணியிருக்கேன். அவர் டைரக்ட் செய்யுற படத்துல அவரை டான்ஸ் பண்ண வைக்கணும்னு ரொம்ப ட்ரை பண்ணினேன்.
இந்த ஐடியாவை அவர்கிட்ட சொன்னப்போ 'போ பா! நான் டைரக்டர். இதுக்கு விஜய் சார் ஒத்துக்கணும்'னு சொன்னாரு. நான் பெர்மிஷன் வாங்கிட்டேன்னு சொன்னதும்தான் அவரும் டான்ஸ் செய்ய ஒத்துக்கிட்டாரு. பிறகு, ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான ட்ரெஸ் கொண்டு வந்து அந்தப் பாடல் காட்சியை எடுத்தோம்.
சொல்லப்போனால், அந்தக் காட்சியை விஜய் சாரை மட்டுமே வச்சு நான் ஏற்கெனவே எடுத்துட்டேன். பிறகு, பிரபு மாஸ்டர் ஓகே சொன்னதும் மறுபடியும் ரீ ஷூட் பண்ணினேன்.
உங்களுக்கும் விஜய்க்குமான நட்பு எங்கிருந்து தொடங்கியது?
நான் அவருடைய 'விஷ்ணு', 'தேவா' படங்கள்ல அசிஸ்டண்டாக வேலை பார்த்திருக்கேன். அவருடைய 'அடடா அலமேலு' பாடல்ல நான் அசிஸ்டண்டாக வேலை பார்க்கும்போது, ஒரு காமெடி சொல்லி நான் சிரிக்க வச்சிட்டேன். அங்கிருந்துதான் நானும் விஜய் சாரும் க்ளோஸ் ஆனோம்னு சொல்லலாம்.
இன்னொரு முக்கியமான விஷயமிருக்கு கேளுங்க! டெல்லி பக்கத்துல நடந்த 'நினைத்தேன் வந்தாய்' படப்பிடிப்பு தளத்துக்குப் போகும்போது ஒரு விபத்து ஏற்பட்டிருச்சு. என் முகத்துல பயங்கர காயம் ஏற்பட்டிருச்சு. உடனடியாக விஜய் சாரும், எஸ்.ஏ.சி சாரும் என்னைப் பார்க்க ஹாஸ்பிடல் வந்தாங்க.
அங்க எனக்கு சரியாக ட்ரீட்மெண்ட் பார்க்கல. சென்னைக்கு வந்து மறுபடியும் எனக்கு சர்ஜரி செய்ய வேண்டிய நிலைமை வந்துடுச்சு. அப்போ, விஜய் சார் அவருக்குத் தெரிஞ்ச ஹாஸ்பிடல்ல சேர்த்து, என்னுடைய ட்ரீட்மெண்டுக்குப் பெரும் உதவிகளைப் பண்ணிக் கொடுத்தாரு.
பிறகு, அவருக்கு நான் 'ஷாஜகான்' படத்துலதான் முதன்முதலாக மெலடி சாங் கோரியோ பண்ணினேன். பிறகு, 'திருமலை' படத்துல 'வாடியம்மா ஜக்கம்மா' கோரியோ பண்ணினேன். அதுக்கு தமிழக அரசின் மாநில விருது அப்போ கிடைச்சது.

'போக்கிரி'யைத் தொடர்ந்து 'வில்லு' தொடக்கப் பாடலிலும் பிரபு தேவாவை நடனமாட வைத்தது எப்படி? அதிலும் குஷ்புவை நடனமாட வைத்திருப்பீர்களே!
'போக்கிரி' போலவே 'வில்லு' இன்ட்ரோ பாடலும் பிரமாண்டமா வரணும்னு நான் திட்டமிட்டேன். மறுபடியும் அந்தக் காம்போவைக் கொண்டு வர விரும்பினேன். அப்படிதான் அது அமைஞ்சது. அந்தப் பாடல்ல வர்ற ஃபீமேல் லிரிக்ஸ்ல ஒரு நல்ல ஆர்டிஸ்ட் டான்ஸ் பண்ணினா, நல்லா இருக்கும்னு யோசிச்சேன்.
அந்த நேரத்துல எனக்கு 'கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலை' பாடல் நினைவுக்கு வந்தது. இந்தப் பாடல்ல குஷ்பு மேடமும் டான்ஸ் பண்ணினால் இன்னும் சிறப்பாக இருக்கும்னு ஐடியாவை பிரபு மாஸ்டர்கிட்ட சொன்னேன்.
அவரும் ஹேப்பியாகி 'என்னுடைய ஃப்ரெண்ட்தான் அவங்க. நான் பேசுறேன்'னு அவர் குஷ்பு மேம்கிட்ட பேசினாரு. அவங்களும் வந்து பயங்கரமாகக் கலக்கிட்டாங்க! நாங்க சொல்லாத சில மூவ்மெண்ட் பண்ணி, அந்த ஸ்டெப்பை வேற லெவலுக்குக் கொண்டு போயிட்டாங்க. ஆனால், நீங்க அங்க விஜய் சார் போட்ட நடனத்தைக் கவனிக்கணும்.
முட்டி போட்டு அப்போ ஒரு ஸ்டெப் போடுவாரு. அது அவ்வளவு ஈஸி கிடையாது. அவ்வளவு சிரத்தைப் போட்டு விஜய் சார் டான்ஸ் பண்ணினாரு.

விஜய்க்கு நீங்கள் கோரியோ செய்த அனைத்துப் பாடல்களிலும் ஒரு கேமியோ செய்துவிடுவீர்கள்! ஏன் 'சொன்னா புரியாது' பாடலில் மிஸ் ஆகிவிட்டது?
(சிரித்துக்கொண்டே...) அப்போ 'தமிழ்ப் படம்' வந்திருந்தது. அந்தப் படத்துல நடிகர்களோட கோரியோகிராஃபர்ஸும் நடனமாடுறதைக் கிண்டல் பண்ணியிருந்தாங்க. அதுக்குப்பிறகு நான் மற்ற படங்கள்ல நடனமாடுறதைத் தவிர்த்துட்டேன். ஆனா, விஜய் சார் படத்துல டான்ஸ் பண்ணிடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்.
விஜய் சாருமே 'வேண்டாம் அசா! நம்மள கலாய்ச்சு விட்டாங்க. வேண்டாம்'னு சொல்லிட்டாரு. அதனாலதான் அந்தப் பாடல்ல நான் கேமியோ செய்யல.
முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.




















