நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளி...
Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது பால் குடிக்கக் கூடாது என்று சொல்லப்படுவது உண்மையா?!
Doctor Vikatan: யாருக்காவது சளி பிடித்திருந்தால் பால் குடிக்கக் கூடாது என்று சொல்வதைக் கேட்கிறோம். பால் குடித்தால் சளித் தொந்தரவு அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை...?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அறிவியல் ஆய்வுகளின்படி, பால் குடிப்பதற்கும் உடலில் சளி (Mucus) அதிகமாக உருவாவதற்கும் எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை. பால் குடிப்பதால் புதிதாக சளி உருவாவதோ அல்லது இருக்கும் சளி அதிகரிப்பதோ கிடையாது.
ஆனாலும், காலங்காலமாக இப்படி ஒரு தவறான கருத்து மக்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலில் உள்ள கொழுப்புச்சத்து நமது எச்சிலைச் சற்று தடிமனாக்கலாம், இதனால் சளி அதிகமாக இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுமே தவிர, பால் நேரடியாக சளியை உண்டாக்குவதில்லை. பால் குடிக்கும்போது அதன் வெப்பநிலை மிக முக்கியம். குளிர்ச்சியான பாலைக் குடிக்கும்போது, அந்தக் குளிர்ச்சியால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. மிதமான சூட்டில் பால் குடிப்பது தொண்டைக்கு இதத்தைத் தரும். அதே போல கடைகளில் கிடைக்கும் ஃப்ளேவர்டு மில்க்கில் (flavoured milk) சேர்க்கப்படும் சில பொருள்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதுவும் சளி போன்ற உணர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சிலருக்கு பால் அலர்ஜி இருக்கலாம். அவர்களுக்கு பால் உள்ளிட்ட பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் குடிப்பவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் அல்லது சளி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்துப் பருகும் பழக்கம் உள்ளது. இது பாலில் உள்ள கொழுப்பை உடல் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுவதுடன், தொண்டை வலிக்கும் மருந்தாக அமைகிறது. தங்கப்பால் (Golden Milk) என்ற பெயரில் இது வெளிநாடுகளில்கூட பிரபலமாக இருக்கிறது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















