Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா? - ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆய்வும் மருத்துவர் விளக்கமும்!
வடித்த சாதம் வீணாவதைத் தடுக்க நம் முன்னோர்கள் மீதி இருக்கும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கஞ்சி போல குடிக்கும் பாரம்பரியப் பழக்கத்தை வைத்திருந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய உணவில் இன்றும் முக்கிய இடம் பழைய சோறு கஞ்சிக்கு உண்டு. சாதத்தை இரவு இயற்கையாக மண் பானையில் புளிக்க வைத்து மறுநாள் சாப்பிடும் இந்த உணவு, எளிமையும் சத்தும் மிகுந்தது.
பழங்காலத்தில் விவசாயிகளும் உழைப்பாளர்களும் உடல் சக்தி பெறவும், வெயில் காலங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொள்வது வழக்கம். பழைய சோறு கஞ்சி செரிமானத்திற்கு எளிதானது மற்றும் நொதித்தல் முறையில் உருவாகும் பழைய சோறு கஞ்சியில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பழைய சோறு கஞ்சி நம் முன்னோரின் "உணவே மருந்து" என்னும் கருத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பழைய சோறு கஞ்சியின் மருத்துவ நன்மைகளை அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளன.
புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் பொதுவிநியோகத் திட்ட அரிசி போன்றவற்றைச் சமைத்து, மண் பானையில் 8 முதல் 14 மணி நேரம் வரை புளிக்க வைப்பதன் மூலம், உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் உருவாகின்றன.
இந்தப் புளிப்புச் செயல்முறையில் புரோபயாட்டிக்ஸ் மற்றும் போஸ்ட்பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாகுகின்றன.
இது குறித்து டாக்டர் ஃபாரூக் அப்துல்லாவிடம் பேசினோம்...
``பழைய சோறானது நொதித்தல் முறைக்கு உள்ளாகும்போது Lactobacillus, Lactococcus lactis, Weisella, Pediococcus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
நீண்ட காலமாகக் குடலில் ஏற்படும் அழற்சி (inflammation) காரணமாக உருவாகும் Inflammatory Bowel Disease (IBD) நோய் மற்றும் வாய் முதல் மலவாய் வரை செரிமானப் பாதையின் எந்தப் பகுதியிலும் அழற்சி ஏற்படுத்தி உருவாகும் Crohn's Disease போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவு பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொண்டால் நல்ல பாக்டீரியாக்களின் விளைவுகளின் மூலம் நோயின் தன்மையையும் அறிகுறியையும் கட்டுப்படுத்தலாம்.
சாதாரணமாக அரிசியில் இருக்கும் இரும்புச்சத்தை விட நொதிக்க வைக்கும்போது அவை 20 மடங்கு அதிக இரும்புச்சத்தாக உயர்கிறது. பொருளாதார நலிவுற்ற மக்கள் மற்றும் கர்ப்பகால இரத்தக்குறைபாடு (anaemia) பிரச்சினையைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சரியான அளவு, அதாவது தினசரி 100 கிராம் அளவு எடுத்துக் கொள்வதால் இரும்புச் சத்து உயரும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கவனிக்க வேண்டியது, இதனை கூடுதலான உணவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மாத்திரைகளுக்கு மாற்றாக அல்ல.
அறிந்துகொள்ள வேண்டியவை!
என்னதான் பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" அதுபோலவே பழைய சோற்றிலும் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்கள் அதிகமாகவே உள்ளதால், என்னதான் இரும்புச்சத்து அதிகமாக இருந்தாலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நோயை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும்.
ஹீமோகுளோபின் A1c -8 க்குக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகள் பழைய சோறு கஞ்சியின் நன்மைகள் அறிந்து சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.
ஹீமோகுளோபின் A1c -8 க்கும் அதிகமாக இருப்பவர்கள் அதிகமாகப் பழைய கஞ்சியை உட்கொள்ளும்போது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் குறைவான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பழைய சோறு கஞ்சியின் நன்மைகளை அனுபவித்துக் கொள்ளலாம்" என்று மருத்துவர் ஃபாரூக் அப்துல்லா தன் கருத்தைத் தெரிவிக்கிறார்.




















