குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
Exclusive: `பன்னீர்செல்வத்தின் அரசியல் நாடகம்; விஜய்க்கு பதிலடி ஏன்?' - செல்லூர் ராஜூ அதிரடி பேட்டி
தமிழக அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. வலுவாக இருந்த திமுக கூட்டணியில் காங்கிரஸ் போக்கு காட்டிக்கொண்டிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்திருப்பது அந்த கூட்டணிக்கு வலிமை சேர்த்திருக்கிறது.
இத்தனை நாட்கள் கூட்டணி கணக்குடன், ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல் அமைதிகாத்து வந்த அதிமுகவும் தவெகவும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், அதிமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...
``தேர்தல் பணிகள் எப்படி செல்கிறது, கள நிலவரம் எப்படி உள்ளது?''
``தேர்தல் பணிகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியைத்தான் விரும்புகிறார்கள் என்பது களத்தில் தெரிகிறது."

``ஆரம்பத்தில் விஜய்யை ஆதரித்துப் பேசிய நீங்கள் இப்போது தவெக-வை கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே?''
``புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிறார் என்ற அடிப்படையில், வரவேற்றோம். ஆளுங்கட்சியும், அரசும் அவரை எதிர்க்கும்போது, புதியவர்களும் வர வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்களுக்கு சப்போர்ட்டாக பேசியவர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார். நாங்கள் வரவேற்றோம் என்பதற்காக, அவர்கள் பேசுவது அனைத்தையும் அதிமுக தாங்கிக்கொண்டிருக்குமா? அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் விமர்சிக்கிறோம்."
``தவெக உங்கள் கூட்டணிக்கு வரும் என்று இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, அதற்கு வாய்ப்பில்லை என்றதும் விமர்சிக்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே?"
``இல்லை. அப்போது கூட்டணி என்ற எதிர்பார்ப்பே எங்களிடம் இல்லை. கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் நேரத்திற்கான ஏற்பாடுதான். எங்கள் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும்போது ஆளும் கட்சியாக இருந்த கலைஞர் பல நெருக்கடிகளைக் கொடுத்தார். அதையெல்லாம் சமாளித்துதான் கட்சியை வளர்த்தெடுத்தார் எம்.ஜி.ஆர். அதேபோல விஜய்க்கும் நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதே என்ற அடிப்படையில்தான் ஆதரவாக பேசினோமே தவிர, கூட்டணிக்காக அப்படி பேசவில்லை"
``எதிர்க்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுகவைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர புதிய கட்சியான தவெகவை விமர்சிப்பது சரியான போக்கு இல்லை என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே?''
``செங்கோட்டையன் பற்றி நான் பேச விரும்பவில்லை. அதிமுகவால் அடையாளம் பெற்று, பலமுறை அமைச்சராக இருந்தவர் இப்போது கட்சியைப் பற்றி விமர்சிப்பது முறையல்ல. அவர் ஒரு பச்சோந்தி. அதிமுகவில் இருக்கும் வரைதான் அவருக்கு மதிப்பு; கட்சியை விட்டுப் போனவர்கள் எங்களுக்குக் கால் தூசிக்குச் சமம்."
``ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தற்போதைய நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
``அவரின் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? உண்மையிலேயே அவர் கட்சியில் இணைய விரும்பினால் நேரடியாகச் சேலத்திற்கோ அல்லது சென்னைக்கோ எடப்பாடியாரைப் பார்த்திருக்கலாம். அதைவிடுத்து, ஊடகங்களில் பேசுவதன் நோக்கம் மக்கள் மத்தியில் இரக்கத்தைப் பெறுவதற்காகத்தான். அது அரசியல் நாடகம்."
``ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கை இந்த தேர்தலில் அதிகம் எதிரொலிக்கிறது. அதுகுறித்த உங்களின் பார்வை?"
``தமிழ்நாட்டு மக்கள் ஒரு கட்சி ஆட்சியைத்தான் விரும்புவார்களே தவிர, கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள்!"
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் விரிவான பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்.













