குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
`வேளச்சேரியில் போட்டியிடுகிறாரா விஜய்?' எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை தொகுதி தேர்வு செய்த வரலாறு!
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல்,விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் தவெக போட்டியிடவில்லை.
2026 சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக களத்தில் இறங்குகிறது தவெக. அந்தக் கட்சிக்கு சமீபத்தில்தான் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேட்பாளர் தேர்வுக்கான பணிகள் கட்சியில் மிகத் தீவிரமாக நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வரும் தேர்தலில் அக்கட்சி சார்பில், கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள், சமூக சேவகர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சென்னை வேளச்சேரியில் போட்டியிட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதற்கு முன்பும் இதேபோல பல தொகுதிகளின் பெயர்கள் அடிபட்டன. முதன்முதலில் மதுரை வடக்கு தொகுதியில் விஜய் போட்டியிடப்போவதாக போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர் தவெகவினர்.
தொடர்ந்து, த.வெ.கவின் முதல் மாநாட்டுக்கு மக்களை அழைக்கும் விதமாக, ’2026-ன் மதுரை வடக்குத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் தலைவர் விஜய் அழைக்கிறார்’ என போஸ்டர் ஒட்டி பரபரப்பைக் கிளப்பினர். அதேபோல, தர்மபுரியில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டமொன்றில், தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா ''2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

இந்த மண் அதியமான் பிறந்த மண். அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று சி.எம் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தர்மபுரியில் தான் போட்டியிடுவேன் என்று விஜய் சொல்லி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்று தான் அதை வெளியிடுகிறேன்'' என பரபரப்பைக் கிளப்பினார்.
அதோடு, தூத்துக்குடி, நாகப்பட்டனம், இராமநாதபுரம் என கடல் பகுதியை ஒட்டிய இந்த மூன்றில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது எனவும் தகவல் வெளியானது.
அதுமட்டுமில்லாமல், ஜோதிடரின் அறிவுரைப்படி வி சென்டிமென்டில் விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, விருத்தாசலம், வில்லிவாக்கம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் களம் காணலாம் என்கிற தகவல்கள் கூட வெளியாகின.
அவ்வளவு ஏன் சமீபத்தில், கோவையில் விஜய்க்கு எழுந்த வரவேற்பைப் பார்த்து, கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட விஜய் முடிவே செய்துவிட்டார் என்கிற தகவல்கள்கூட வெளியாகின. கடந்தாண்டு மே மாதத்தில், மதுரை மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்து, விஜய்யை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றிகள் என்று தவெகவினர் ஒட்டிய போஸ்டர் அரசியல் களத்தில் பேசுபொருளானது.
தொடர்ந்து, திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடப் போகிறார். அதனால்தான் அங்கே பிரசாரத்தைத் தொடங்கினார் எனச் சொல்லப்பட்டது. இந்தவரிசையில் தற்போது வேளச்சேரி வந்து சேர்ந்திருக்கிறது. அதற்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.

முதலில் ஜோதிடர் அறிவுரைப்படி, வி சென்டிமென்டில் வேளச்சேரி வந்திருக்கிறது. அடுத்ததாக, முதல் தலைமுறை வாக்காளர்கள், சென்னையிலேயே செட்டிலாகிவிட்ட ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், பெண்களின் வாக்குகள்.
கணிசமான சிறுபான்மையினர் வாக்குகள், அடுத்ததாக, எப்போதும் மாற்றத்தை வரவேற்கும் மக்களாக வேளச்சேரி மக்கள் இருப்பது (மக்கள் நீதி மய்யம் 23000 வாக்குகள், நாம் தமிழர் 14000 மக்கள்), 2011 முதல் உருவாக்கப்பட்ட தொகுதியாக இருப்பதால் எந்த ஒரு தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு தனிப்பட்ட முறையில் பெரியளவில் செல்வாக்கு இல்லாமல் இருப்பது, தொடர்ச்சியாக மழை, வெள்ள பாதிப்புகளால் ஆளும் தரப்பின் மீதான அதிருப்தி என பல காரணங்களைச் சொல்லி வேளச்சேரியில் போட்டியிடலாம் என விஜயிடம் அறிவுறுத்துவதாகச் சொல்லப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, திரைத்துறையில் இருந்து வந்து அரசியல் கட்சி தொடங்கி, விஜய்க்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன் தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலில் தொகுதியை எவ்வாறு தேர்வு செய்தனர் என்று பார்ப்போம்.
எம்.ஜி.ஆர் - அருப்புக்கோட்டை
எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருக்கும்போது 1967,71 என இரண்டு தேர்தலிலும் சென்னையில் உள்ள பரங்கிமலை தொகுதியில்தான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அவர் அதிமுகவைத் தொடங்கியபிறகு, 1977 தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆருக்கு 1950-ல் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில்தான்.

1972-ல் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதும் அதனைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்திய மதுரை ரசிகர்கள், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கும் காரணமாக இருந்தார்கள். முதல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திண்டுக்கல்லும் அப்போது மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதனால்தான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதுரையைச் சுற்றியே எடுத்தார் எம்.ஜி.ஆர். அதிக கிராமங்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்ததால் அருப்புக்கோட்டைய டிக் அடித்து, 29,378 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியையும் பெற்றார் எம்.ஜி.ஆர்
சிவாஜி - திருவையாறு
திமுக, காங்கிரஸில் பயணித்த சிவாஜி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை 1989-ல் தொடங்கினார். முதல் தேர்தலில், திருவையாறு தொகுதியில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜா அணியில் நின்று தேர்தலைச் சந்தித்தார். நாகர்கோவில், இராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் பரிசீலனையில் இருந்தபோதும், திருவையாறு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சிவாஜி, விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அவரின் பூர்விகம் தஞ்சை மாவட்டம்தான்.

அவருக்கு அங்கு அதிகமான ரசிகர்களும் இருந்தார்கள். அவர் சார்ந்த சமூக மக்களும் அதிகமாக இருக்கும் தொகுதி என திருவையாறில் போட்டியிட்டு, 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அப்போது இளைஞராக சிவாஜியைத் தோற்கடித்த துரை.சந்திரசேகரன் தான் தற்போதும் திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.
விஜயகாந்த் - விருத்தாச்சலம்
அடுத்ததாக, 2005-ல் மதுரையில் கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 -ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலில் களமிறங்கினார். கட்சி தொடங்கிய அதே மதுரையில்தான் விஜயகாந்த் போட்டியிடப் போகிறார் என்கிற தகவல்கள் முதலில் வெளியாகின. ஆனால், கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் தொகுதியைத் தேர்வு செய்தார் விஜயகாந்த்..,

திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்த நிலையில், அந்தக் கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழுத் தலைவரான கோவிந்தசாமியை எதிர்த்துக் களமிறங்கினார் விஜயகாந்த்..,விஜயகாந்த்துக்கு கடலூர் மாவட்டத்தில் ரசிகர்கள் அதிகம். அதனால்தான், இந்தாண்டு தேர்தலுக்கான மாநாட்டைக்கூட கடலூரில் நடத்தினார் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா.
அதேவேளை, விஜயகாந்த் படம் வெளியாகும்போது தமிழ்நாட்டிலேயே அதிக கலெக்ஷன் விருத்தாச்சலத்தில்தான் ஆகியிருக்கிறது. அதனடிப்படையில் அந்தத் தொகுதி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியையும் பதிவு செய்தார்.
கமல்ஹாசன் - கோவை தெற்கு
அதேபோல, 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்கினாலும் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. அவர், 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கினார்.
அதற்கு, கட்சி தொடங்கப்பட்ட நாள்முதலாகவே நல்ல வரவேற்பு, களத்தில் இறங்கி வேலை செய்ய முன்னணித் தளபதிகள் இருந்ததோடு நாடாளுமன்றத் தேர்தலில் சென்னைக்குப் பிறகு நல்ல வாக்குகளையும் பெற்றுக்கொடுத்த தொகுதியாகவும் கோவை விளங்கியதால், கோவையில் ஒரு தொகுதி என்பது முதலில் முடிவானது..

ஆனால், நகர்ப்பகுதியில் இருப்பதோடு, குறைந்த பரப்பளவையும் கொண்ட தொகுதியாக இருந்ததால், கோவை தெற்கு தேர்வு செய்யப்பட்டது. காரணம், தமிழகம் முழுவதும் கமல்ஹாசன் பரப்புரை செய்யவேண்டியிருந்தது .
அதுமட்டுமல்ல, கமல் முதலில் சென்னையில் உள்ள வேளச்சேரி அல்லது ஆலந்தூரில் போட்டியிடப்போகிறார் என்கிற தகவல்கள்தான் வெளியாகின ஆனால் போட்டியிடவில்லை. அதேவேளை, வேளச்சேரியில் மற்றொரு நடிகரான வாகை சந்திரசேகர் 2016 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2026 தேர்தலில் விஜய் அங்கு போட்டியிடுவாரா, போட்டியிட்டால் வெற்றி வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!













