பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட கா...
"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" - உச்ச நீதிமன்றம்
இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் நாட்டின் உண்மையான கட்டுமானக் கற்கள் (Building Blocks) என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் "தேசத்தை உருவாக்குபவர்கள்" என்றும் உச்ச நீதிமன்றம் புகழாரம் சூட்டியுள்ளது.
சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் 2023-ல் வெறும் ரூ.2.42 லட்சமும், பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 2024-ல் அதனை ரூ.8.43 லட்சமாகவும் உயர்த்தியிருந்தது. இதனை எதிர்த்து, கடந்த 2001 நவம்பர் 25 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள்,``சாலை விபத்தில் உயிரிழிந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.8.4 லட்சத்திலிருந்து ரூ.62.78 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளைக் கணக்கிடுவதற்காக, இல்லத்தரசிகளின் மாதாந்திர உத்தேச வருமானத்தை ரூ.30,000 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு இல்லத்தரசி தன் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகச் செய்யும் தியாகமும் உழைப்பும், அது உணர்வுப்பூர்வமாகவோ அல்லது உடலுழைப்பாகவோ இருந்தாலும், அவை நான்கு சுவர்களுக்குள் முடிந்துவிடுவதில்லை.
அதன் தாக்கம் மிகவும் பரந்தது. இன்று கணவரின் உழைப்பிற்கும், நாளை குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் இல்லத்தரசிகளே அடித்தளமாக விளங்குகின்றனர்" எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தீர்ப்பை எழுதிய நீதிபதி சஞ்சய் கரோல், ``ஒரு இல்லத்தரசியின் மரணம் என்பது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமேயான இழப்பல்ல. மகளை இழந்து தவிக்கும் அவர்தம் பெற்றோர், வீட்டில் உணவு, மருந்து, மருத்துவமனை உதவிகள் மற்றும் காலை நேரத்து தேநீர் என எல்லாவற்றிற்கும் அந்தப் பெண்ணையே சார்ந்திருக்கும் மாமனார்-மாமியார் என ஒட்டுமொத்த குடும்பமும் இதனால் எல்லையற்ற துயரத்திற்கு ஆளாகிறது.
இத்தகைய உணர்வுப்பூர்வமான இழப்புகளை வெறும் கணிதக் கணக்கீடுகளால் மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது. இனிவரும் காலங்களில், விபத்தில் இல்லத்தரசிகள் உயிரிழக்க நேரிட்டால், Loss of domestic care என்ற தலைப்பின் கீழ் விபத்து தீர்ப்பாயங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கூடுதலாக ரூ.30,000 தனித்தொகையாக வழங்க வேண்டும்.

மேலும், இல்லத்தரசி வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவர் ஈட்டும் மாதாந்திர வருமானத்துடன் இந்த ரூ.30,000 கூடுதலாகச் சேர்க்கப்படும். சம்பாதிக்கும் நபர்கள் இல்லத்தரசிகளைச் சார்ந்து வாழ்கிறார்களே தவிர, இல்லத்தரசிகள் யாரையும் சார்ந்து இல்லை என்பதே நிதர்சனம். அதனால்தான் 'Housewife' என்ற சொல் மாற்றப்பட்டு, பன்முகத்தன்மையைக் குறிக்கும் 'Homemaker' என்ற தகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் உயிரியல் ரீதியானது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் 'மனித மூலதனத்தை' உருவாக்குவதில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. குழந்தையின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய், ஒழுக்கம், பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்.
வீட்டில் ஆண்கள் தங்களது வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்த இல்லத்தரசிகளின் மனரீதியான ஆதரவே காரணம். உலகில் தினமும் 1,600 கோடி மணிநேரம் பெண்கள் வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். இந்தியாவின் GDP 15 முதல் 17 சதவீதம் பெண்களின் இந்த அங்கீகரிக்கப்படாத உழைப்பிலிருந்தே கிடைக்கிறது என்று 2019 நேரப் பயன்பாட்டு ஆய்வு (Time Use Survey) குறிப்பிட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.




















