Bank account-ல ரூ.1,20,000 உங்ககிட்ட இருந்தா... நீங்க உஷார்?! | #EmergencyFund
IPL: ``வண்டி ஓட்டுவதைக் குறைச்சிட்டு சினிமாவுக்கு வாங்க'' - டிடிஎஃப் வாசன் குறித்து போஸ் வெங்கட்
யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன் 'IPL' ( Indian Penal Law) என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கி இருக்கிறார்.
நடிகர்கள் கிஷோர், போஸ் வெங்கட், நடிகை அபிராமி ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது.

அதில் பேசிய போஸ் வெங்கட், "இந்தப் படம் இன்னும் எனக்கு கொஞ்சம் சினிமாவைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.
அற்புதமான அரசியல் ஒன்று இந்தப் படத்தில் இருக்கிறது. கிஷோர் சார் எதார்த்தமான ஒரு நடிகர்.
அவரிடம் ஒரு துளி திமிர் கூட இல்லை. கொஞ்சமாவது திமிர் இருக்க வேண்டும்.
திமிர் இருந்தால் தான் மனிதன். அப்படி இல்லையென்றால் அவன் கடவுள். திமிர் இல்லாத ஒரு நடிகரை நான் பார்த்திருக்கிறேன் என்றால் அது கிஷோர் சார் தான்.
இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் வெற்றி அடைவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
நான் சந்தித்த பல பஞ்சாயத்துகளில் டிடிஎஃப் வாசன் பஞ்சாயத்தும் ஒன்று. டிடிஎஃப் வாசனின் அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது.
டிடிஎஃப் வாசன் 'IPL' படத்தில் நடிப்பதை என்னிடம் ஏர்போர்ட்டில் ஒருவர் கேட்கிறார் என்றால் யூடியூப்பர்கள் சினிமாவிற்கு வருவது எந்த விதத்தில் தவறாக இருக்கும்.
ஒரு தியேட்டருக்கு 100 பேர் வந்து படம் பார்க்கவேண்டும். அந்த 100 பேரை யாரெல்லாம் தியேட்டருக்கு அழைத்து வருகிறார்களோ? அவர்கள் எல்லோரும் ஹீரோதான்.
அந்தவகையில் டிடிஎஃப் வாசனிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. டூ வீலர் எல்லாம் ஓட்டுங்கள்.
ஆனால் சட்டப்படி, அரசுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஓட்டுங்கள். போலீஸ் மற்றும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் வண்டி ஓட்டுங்கள்.
இருந்தாலும் வண்டி ஓட்டுவதைக் குறைத்துக்கொண்டு சினிமாவிற்கு வாருங்கள். உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என பேசியிருக்கிறார்.

















