குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
Karuppu Pulsar Review: கமர்சியல் ஹீரோவை ஓடவிடும் பல்சர் பைக்; மைலேஜ் தருகிறதா இந்தப் பேய்ப் படம்?
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் தசரத ராஜா (தினேஷ்), வாட்டர் ப்யூரிஃபையர் அமைத்துத் தரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
தங்கை, நண்பர்கள் எனக் குறுகிய வட்டத்தில் இருக்கும் இவருக்கு மேட்ரிமோனி மூலம் காதல் வந்து சேர்கிறது. காதலியிடம் தானொரு கருப்பு நிற பல்சர் பைக் வைத்திருப்பதாக பொய் சொல்லிவிடும் தசரத ராஜா, உண்மையாக அந்தப் பைக்கை வாங்கிவிட தீவிரமாக அலைந்து திரிகிறார்.

அந்தச் சமயத்தில் அவருக்கு ஒரு அமானுஷ்ய பைக் கிடைக்கிறது. அந்தப் பைக்கின் பின்னணி என்ன? அதனால் தசரதனுக்கு என்னென்ன சிக்கல்கள் வருகின்றன என்பதுதான் இந்த 'கருப்பு பல்சர்' படத்தின் கதை.
காதல், ஆக்ஷன், காமெடி, தங்கை மீதான பாசம் எனப் படத்தின் அனைத்து கமர்ஷியல் பக்கங்களிலும் வழக்கமான தினேஷாக வந்து போகிறார்.
ஆங்காங்கே ஓவர்டேக் செய்யும் செயற்கை முகப்பாவனைகளையும், சீரில்லாத வசன உச்சரிப்பையும் கண்டும் காணாமலேயே ரவுண்டு போய் முடித்திருக்கிறார். நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ் வழக்கமான காதல் வழித்தடத்திலேயே '8' போட்டிருக்கிறார். அதிலும் ஜஸ்ட் பாஸ் மட்டுமே!

வில்லன்களாக வரும் மன்சூர் அலி கான், ப்ரின்ஸ் அர்ஜை திசை தெரியாத பக்கங்களில் வண்டியை ஓட்டி விபத்துக்குள்ளாகி தடயமே தெரியாத அளவுக்குக் காணாமல் போயிருக்கிறார்கள்.
நண்பராக வரும் ப்ராங்க்ஸ்டர் ராகுல், அபத்தமான இரட்டை அர்த்த வசனங்கள், கடி ஜோக் ரக ஒன்லைனர்கள் ஆகியவற்றால் வெறுப்பையே சம்பாதிக்கிறார்.
இரவு நேரக் காட்சிகளிலும், திகில் ஆட்டம் காண்பிக்கும் இடங்களிலும் தேர்ந்த லைட்டிங்கைக் கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், சில ஷாட்களை சட்டகத்திற்குள் அடக்குவதில் நேர்த்தியான பணியைச் செய்யத் தவறியிருக்கிறார்.
சோதிக்கும் காமெடி, காதல் உருட்டல் ஆட்டங்கள், 'பாட்ஷா' பிளாஷ்பேக் எனக் குண்டு குழிகள் நிறைந்த காட்சிகளைக் கோர்வையாகக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சசி தக்ஷா. இசையமைப்பாளர் இன்பராஜ் ராஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாகவே கதைக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
திகில், ஆக்ஷன், பிளாஷ்பேக் போன்ற காட்சிகளில் எட்டிப் பார்க்கும் பின்னணி இசையிலும் உயிரில்லை! ஜல்லிக்கட்டு காட்சிகளின் கிராபிக்ஸும் அமெச்சூர் வடிவிலேயே திரையேறி திமிறுகிறது.

ஆசையுடன் வாங்கும் பைக், அதிலிருக்கும் அமானுஷ்யம், அதற்குப் பின்னிருக்கும் ஜல்லிக்கட்டு பிளாஷ்பேக் என்பவையாக இந்த 'கருப்பு பல்சர்' படத்தின் திரைக்கதையை ஓட்டியிருக்கிறார் இயக்குநர் முரளி க்ரிஷ். ஆனால், தொடக்கம் முதலே நம்மைச் சோதிக்கும் காமெடிகள், வழக்கொழிந்து போன காதல் கெஞ்சல் மிஞ்சல்கள், துளியும் பயமுறுத்தாத அமானுஷ்யங்கள் எனச் சரிவான பாதையிலேயே இந்தப் பல்சர் வண்டி நகர்கிறது.
இப்படியாக அடம்பிடித்து நீண்ட பயணத்திற்குப் பிறகே கதைக்குள் செல்லத் தொடங்குகிறது. ஆனால், அடுத்த நிமிடமே மறுபடியும் கதையிலிருந்து வெளியே ஜம்ப் அடித்து நம்முடன் கண்ணாமூச்சி ஆடுகிறது இந்த பல்சர் பேய்.
இதற்கிடையில் நொடிக்கொரு முறை ஒன்லைனர்களை அடுக்கி நம்மைச் சோர்வாக்கி 'உஷ்...' சொல்லவும் வைக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்குப் பின்னிருக்கும் கதை, திகில் விஷயங்களின் கதை என எதிலும் முழுமையில்லாதது, எக்கச்சக்கமான சந்தேகங்களை எழுப்பும் லாஜிக் மீறல்கள் என இந்தத் திரைக்கதை முட்காட்டுக்குள் கட்டுப்பாடில்லாமல் பயணித்து, இறுதியில் பஞ்சர் ஆகியிருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தலித் மக்களைப் பங்கேற்க விடாத கதைகளைப் பேசும் இடத்தில் க்ளாப்ஸ் வாங்கினாலும், அதை மேம்போக்காக மட்டுமே தொட்டுப் போகிறது இந்தப் படம்.
திரையாக்கம், திரைக்கதை என எதிலும் சோபிக்காத இந்த 'கருப்பு பல்சர்' தேவையான மைலேஜ் தராமல் நமக்குச் செலவை மட்டுமே வைக்கிறது.

















