தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்க...
Keralam: மூழ்கிய கப்பலில் கால்சியம் கார்பைடு; கடலோர மக்களுக்கு அச்சுறுத்தல்; நீதிமன்றம் கவலை
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியிலிருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் விபத்தில் சிக்கியது.
கப்பல் சாய்ந்த நிலையில் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் கப்பல் மூழ்கியது. எம்.எஸ்.சி எல்சா 3 கப்பல் விபத்தால் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கின. மேலும் கடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இப்போதும் ஆழ்கடலில் கன்டெய்னர்கள் மூழ்கிக்கிடக்கின்றன.
இந்தக் கப்பலில் மொத்தம் 643 கன்டெய்னர்கள் இருந்த நிலையில், இதுவரை வெறும் 72 கன்டெய்னர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கன்டெய்னர்கள் அனைத்தும் இன்னும் கடலின் அடிப்பகுதியிலும், மூழ்கிய கப்பலுக்குள்ளேயும் தான் உள்ளன. மூழ்கிய கப்பலில் 339.2 டன் கால்சியம் கார்பைடு உள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய பருவமழைக் காலத்தில் கடல் சீற்றம் அல்லது வலுவான நீரோட்டங்கள் காரணமாக இவைச் சிதைந்து கரை ஒதுங்கினால், கடலோரப் பகுதிகளில் பெரும் சேதமும் மனித உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுமட்டுமன்றி பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய 70 கன்டெய்னர்களும் பருவமழை தீவிரமடையும்போது உடைந்து கடலில் பரவும் பேராபத்தும் நிலவுகிறது.

கப்பல் மூழ்கிய வழக்கு குறித்து கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு தரப்பாகச் சேர்த்துள்ளது.
இந்த விபத்தின் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கூட்டு ஆய்வு நடத்துவதற்காக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இறுதி அறிக்கை ஜூலை மாத இறுதியில் கிடைக்கும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், கப்பலில் இருந்த டன் கணக்கிலான எண்ணெய் அகற்றப்பட்டுவிட்டதாகக் கப்பல் நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.
அதேசமயம் அந்த நடவடிக்கை எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமாகச் செய்யப்பட்டது என்பதை நிறுவனம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

கப்பல் விபத்தைத் தொடர்ந்து இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை வரும் ஜூன் 23-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கப்பல் விபத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடலோர மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் தலைவர் டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை நீதிமன்றம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இந்தச் சூழலில், மூழ்கிய கப்பலில் உள்ள கால்சியம் கார்பைடு உள்ளிட்ட வீரியமிக்க பொருட்கள் கடலோர மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.




















