Kumbh Mela: ``இது தெய்வீக இணைப்பின் தருணம்..'' -கும்பமேளாவில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இக்கும்பமேளாவிற்கு உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அதோடு, உலக தலைவர்கள் கும்பமேளாவிற்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கும்பமேளாவிற்கு குடும்பத்தோடு வந்து புனித நீராடினார். இன்று பிரதமர் நரேந்திர மோடி கும்பமேளாவிற்கு வந்தார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கங்கை ஆற்றில் படகில் சென்று பார்வையிட்டார்.
அவர் படகில் சென்றபோது கரையில் நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிரதமரை நோக்கி கையசைத்தனர். அவர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடியும் உற்சாகமாக கையசைத்தார். படகில் திரிவேணி சங்கமத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி காவி சட்டை அணிந்து திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினார்.
பாதுகாப்பான முறையில் அங்கு கட்டப்பட்டு இருந்த கயிற்றை பிடித்துக்கொண்ட மற்றொரு கையில் ருத்ராட்ச மாலையுடன் மந்திரங்களை ஓதியபடி பிரதமர் நரேந்திர மோடி புனித நீராடினார். அதோடு சூரியனையும், கங்கை, யமுனை, சரஸ்வதியையும் வழிபட்டார். கரையில் இருந்து புரோகிதர்கள் மைக் மூலம் மந்திரங்களை உச்சரித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைக்காண ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். இதையடுத்து பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள அனுமான் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், கும்பமேளாவில் கலந்து கொண்டதற்காக தான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக குறிப்பிட்டார்.
இது தெய்வீக இணைப்பின் ஒரு தருணம், இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மற்றவர்களைப் போலவே, நானும் பக்தி உணர்வால் நிரப்பப்பட்டேன். கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அருளட்டும்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் பிரயக்ராஜ் நகரில் 5500 கோடி மதிப்புள்ள 167 திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்று கும்பமேளாவிற்கு வருவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,'' டெல்லி சட்டமன்ற ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்கவேண்டும்''என்று குறிப்பிட்டு இருந்தார்.