'மூன்றாவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு' - சென்னை உயர் நீ...
தேனி ஏலக்காய் மாலை; நல்லி பட்டு சால்வை - பிரதமருக்காக தயாரான எடப்பாடி; மோடி சொன்ன மெசேஜ்!
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், "முதலில், இந்தப் பொதுக்கூட்டம் மதுரையில் நடத்துவதாகத்தான் ஏற்பாடானது. அதற்காக, மதுரை பாண்டிக் கோயில் அருகே இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் உச்சத்தில் இருந்ததால், 'மதுரை வரை பிரதமர் வந்துவிட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லவில்லை என்றால் சங்கடமாகிவிடும். சென்னையிலேயே நடத்திக் கொள்ளலாம்' என்று பா.ஜ.க சீனியர்கள் வலியுறுத்தினர். அதன்பின்னரே, சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக மூன்று இடங்கள் பார்க்கப்பட்டு, மதுராந்தகம் அருகேயுள்ள 30 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தோம். அ.தி.மு.க-வைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மரகதம் குமரவேல் உள்ளிட்டோர்தான் அதற்கானப் பணிகளை விரைவாகச் செய்து முடித்தனர்.
பொதுக்கூட்டத்திற்கு நாள் குறித்தபோதே, 'இது தேசிய ஜனநாயகக் கூட்டணியோட பொதுக்கூட்டமாக இருந்தாலும், அ.தி.மு.க பொதுக்கூட்டம் மாதிரிதான் நம்ம ஆட்கள் திரண்டு வரணும்...' என்று உத்தரவு போட்டுவிட்டார் எடப்பாடி. அதற்கேற்ப, வடமாவட்டங்களிலுள்ள நிர்வாகிகளுக்கெல்லாம் அறிவுறுத்தல் சென்றது. பிரதமர் மோடியை மேடையில் கெளரவிப்பதற்காக, தேனியிலிருந்து சிறப்பு ஏலக்காய் மாலையை வரவழைத்தார். அ.தி.மு.க ஐ.டி விங்கின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யனிடம், 'பிரதமர் சாமியார் மாதிரிப்பா... விரதமெல்லாம் கடுமையாக இருக்கிறவரு. ஏ கிரேடு ஏலக்காய் மாலையாக பார்த்து வாங்குங்க..' என்று ஸ்டிக்ட்டாகச் சொல்லிவிட்டார். நல்லி சில்க்ஸிலிருந்து நயமான பச்சை பட்டு சால்வையும் ரெடி செய்யப்பட்டது.

மதுராந்தகம் ஹெலிபேடில் பிரதமரை வரவேற்ற எடப்பாடி, மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையில், சுமார் பத்து நிமிடங்கள் சில நிர்வாகிகளுடன் பிரதமரைச் சந்தித்துப் பேசினார். அதன்பின்னரே மேடைக்கு இருவரும் வந்தனர். 'கூட்டம் நல்லா திரண்டிருக்கே...' என்று பிரதமர் கேட்க, 'உங்களுக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க. தி.மு.க-வைப் பத்தி நீங்க என்ன பேசப் போறீங்கனு கேட்க மக்கள் ஆர்வமாக இருக்காங்க..' என்று ஆங்கிலத்தில் எடப்பாடி சொல்ல, இருவரும் கலகலத்தனர். கூட்டத்தை முன்னின்று நடத்தியது பா.ஜ.க தான் என்றாலும்கூட, வடமாவட்டங்களிலுள்ள அ.தி.மு.க நிர்வாகிகளெல்லாம், ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலிருந்தும் தலா ஐந்தாயிரம் பேரை பொதுக்கூட்டத்திற்கு திரட்டி வந்தனர்.
பொதுக்கூட்ட மேடையிலேயே டி.டி.வி.தினகரனை அருகே அழைத்து, 'இந்தக் கூட்டணியில் நீங்கள் இணைந்ததற்கு சந்தோஷப்படுகிறேன். உங்களுக்கு உரிய மரியாதை கூட்டணியில் நிச்சயம் அளிக்கப்படும்' என்று வாழ்த்தினார் மோடி. கூட்டம் முடிந்து புறப்படுவதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் தங்கமணியை அருகே அழைத்து, அவரது முதுகில் செல்லமாக மோடி அடித்தது பலரது புருவங்களையும் உயர்த்தியது. 2017-லில் தொடங்கி, பா.ஜ.க கூட்டணியைவிட்டு அ.தி.மு.க வெளியேறியது வரையில், டெல்லியுடன் நல்ல இணக்கமாக இருந்தவர் தங்கமணி. அ.தி.மு.க ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் துறை ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் பிரதமருடன் நேரில் பேசியிருக்கிறார். அந்த அறிமுகத்தில்தான், அவரது முதுகில் செல்லமாக அடித்து வாழ்த்தினார் மோடி..." என்றனர் விரிவாக.
மதுராந்தகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, "இன்னும் நான்கு மாதங்கள்தான்... நீங்கள் முதல்வராக பதவியேற்கும் விழாவில் நான் நிச்சயம் கலந்துக்கொள்வேன். அதற்கேற்ப எல்லோரும் உழையுங்கள்..." என்று எடப்பாடியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருக்கிறாராம் மோடி.















