செய்திகள் :

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?!

post image

அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது.

தனக்குக் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியப் பணத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரனுக்கு, சிகிச்சை செய்யத் திட்டமிடுகிறார். பென்ஷன் பணம் தடையில்லாமல் விரைவாகக் கிடைப்பதற்கு எந்த வழக்குகளிலும், பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கிறார் பாஸ்கரன்.

ஆனால், அந்த நேரத்தில் அவருக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்னை, அவரின் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறது.

Kuttram Purindhavan Review
Kuttram Purindhavan Review

இந்தப் பிரச்னை பேரனின் சிகிச்சையைப் பாதித்துவிடுமோ என்கிற பயத்தில் அதை மறைக்க முயல்கிறார். அதனால் மீளமுடியாத குற்றவுணர்ச்சியிலும் அவர் சிக்கிக் கொள்கிறார்.

மற்றொரு பக்கம், டி.எஸ்.பி-க்கு ஓட்டுநர் வேலை செய்யும் காவல் அதிகாரி கௌதம் (விதார்த்), அவருடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முயல்கிறார்.

இந்தப் பிரச்னை பாஸ்கரனை எங்குக் கொண்டு செல்கிறது, குற்றவாளியை கௌதம் கண்டுபிடித்தாரா என்பதை ஏழு எபிசோடுகளில் சொல்லியிருக்கிறது சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ் வெப் சீரிஸ்.

பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம் கோரும் விஷயங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. மனதளவில் பதற்றமிருந்தாலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் கட்டுப்படுத்தும் இடத்திலும், தான் செய்த தவற்றை உணர்ந்து இரும்பாகி நிற்கும் இடத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் என நிரூபித்திருக்கிறார் பசுபதி.

பொறுமை, ஆற்றாமை, அப்பாவித்தனம் என தன் கதாபாத்திரத்திற்குச் சகல உணர்வுகளையும் தந்திருக்கிறார் விதார்த். காவல் துறையில் இருக்கும் அதிகாரப் படிநிலைகளின்படி, உயரதிகாரிகள் அவர்களைவிடப் பதவி குறைந்தவர்களைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்களையும் பிரதிபலிப்பவராக நடிப்பில் பரிதாபங்களைச் சம்பாதித்து, ஸ்டார்களை வாங்கிக் குத்திக்கொள்கிறார். வெல்டன் விதார்த்!

Kuttram Purindhavan Review
Kuttram Purindhavan Review

பாஸ்கரனின் துணைவியாக வரும் லிசி ஆண்டனி பயத்துடனும் பதைபதைப்புடனும் சீரிஸின் இறுதி வரை நடித்து, கதாபாத்திரத்தைப் பொறுப்பாகக் கரை சேர்க்கிறார்.

மகளை எண்ணி ஏங்கும் லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, தன் நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமானதாக மாற்றியிருக்கிறார். அதுவும் ‘மெர்சி எங்க போனா மெர்சி, எப்போ வருவ!’ எனத் துயரமிகுந்த வசனத்தைப் பேசும் இடங்களில் பார்ப்போர் இதயங்களைக் கனமாக்கிவிடுகிறார்.

இவர்களைத் தாண்டி ஜெயக்குமார், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, மறைந்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சிறிய அறைக்குள் நிகழும் டிராமாவை ஃப்ரேம்-க்குள் புகுத்திய விதம், வீட்டிற்குள் இரவு நேர உணர்வைக் கூட்டக் கையாண்டிருக்கும் லைட்டிங், கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளருக்குக் கடத்தக் கையாண்ட நுணுக்கம் என ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாட்ஷா நேர்த்தியான பணியை எங்கும் பிசகாமல் செய்திருக்கிறார்.

த்ரில் உணர்வுடனே திரைக்கதையை நகர்த்தி, ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என அடுக்கிக் கதை சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன்.

Kuttram Purindhavan Review
Kuttram Purindhavan Review

ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் இவரின் கத்திரி செய்திருக்கும் மேஜிக்குகள் அடுத்தடுத்த எபிசோடுகளைத் தொடர்ந்து பார்க்க வைக்கும் வகையில் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என், பின்னணி இசையால் த்ரில்லூட்டி, காட்சிகளை வீரியப்படுத்த முயன்று, அதில் வாகையும் சூடுகிறார்!

குற்றவாளியைத் துப்புகளால் கண்டறியும் வழக்கமான க்ரைம் சீரிஸ் ஒன்லைனையே இயக்குநர் செல்வமணி முனியப்பனின் இந்த சீரிஸும் பின்பற்றியிருக்கிறது. ஆனால், அந்தக் களத்திற்குள் நம்மைத் த்ரில்லுடனும், பதைபதைப்புடனும் நகர்த்தும் விதத்தில் திரைக்கதையை ஆழமாகப் பின்னிக் கவனம் ஈர்க்கிறார்.

நாம் சாதாரணமாகக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் வசனங்களிலும், பொருட்களிலும்கூட சிறு சிறு குறியீடுகளை எவ்விதத் துருத்தலும் இன்றிச் சேர்த்து, அதன் மூலம் ட்விஸ்ட்களுக்கு 'லீட்' எடுத்த விதம் நல்லதொரு எழுத்து. அதில் டீடெய்லிங் கூட்டிய விதமும் சிறப்பு!

Kuttram Purindhavan Review
Kuttram Purindhavan Review

ஆனால், ஓரிரு இடங்களில் அந்த ட்விஸ்ட்களுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளால் சர்ப்ரைஸ் மீட்டரிலிருந்து விலகி சுவாரஸ்யத்தைக் குறைத்துக் கொள்கின்றன.

அதே சமயம், இடைப்பட்ட இரண்டு எபிசோடுகள் ஒரே நேர்கோட்டில் மீண்டும் மீண்டும் பயணிக்கும் தட்டையான கதையாக விரிவது மைனஸ். ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகளிலேயே அதைச் சரிசெய்து, பரபரப்புடன் நகரும் த்ரில் மற்றும் எமோஷனல் காட்சிகளால் பிஞ்ச் வாட்ச் செய்யத் தூண்டுகிறார்கள்.

ஃப்ளாஷ்பேக் கதைகளை இரு பார்வையில் சொல்லும்போது அதற்கெனத் தனித்தனி இடங்களை எடுத்துக்கொள்ளாமல் 'பேரலல்' கோணத்தில் கோர்வையாகச் சொன்ன ஐடியாவுக்கு க்ளாப்ஸ்!

Kuttram Purindhavan Review
Kuttram Purindhavan Review

'நான் எவ்வளவு கெட்டவன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!', உள்ளிட்ட சில வசனங்கள், பலவற்றை நமக்கு உணர்த்துவதோடு கதைக் கருவுக்கும் ஆழம் சேர்கின்றன.

பெரும்பாலான இடங்களில் லாஜிக் விஷயங்களைப் பக்குவமாகக் கையாண்டிருப்பதெல்லாம் ஓகே! ஆனால், முக்கியக் குற்றவாளி, தான் நிகழ்த்தும் கொடூரச் செயல்களிலிருந்து எப்படி அத்தனை பக்குவமாகத் தப்பிக்கிறார்? அவருக்கு எப்படி பாஸ்கரனைப் பற்றிய விஷயங்கள் தெரியவருகின்றன? ஓர் இடத்தில்கூட சிக்காமல் அவர் தப்பிக்கும் ரகசியம் என்னவோ? இது போன்ற லாஜிக்கற்ற விஷயங்களைக் கொடுத்து நம்மை ஏமாற்றும் குற்றத்தை நிகழ்த்துவது ஏனோ!

அதேபோல குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை முதிர்ச்சியாகவும், கவனமாகவும் அணுகாதது தவறான போக்கு. அதைக் காட்சிப்படுத்துவதில் இன்னுமே கண்ணியம் காட்டியிருக்கலாம்.

பேசும் அரசியல் சார்ந்த ஒரு சில குறைகள் இருப்பினும் அடர்த்தியான எழுத்தாலும், நல்ல திரையாக்கத்தாலும் இந்த ‘குற்றம் புரிந்தவன்’ நம்மை பிஞ்ச் வாட்ச் செய்ய வாஞ்சையாக அழைக்கிறான்.

அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு!

தனது குக்கிராமத்தின் முதல் டாக்டரான பவளமுத்து (சரண்), நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான்.ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழு... மேலும் பார்க்க

AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான்" - கமல் இரங்கல்

தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார்.ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ... மேலும் பார்க்க