குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
Lock Down Review: 'பாலியல் வன்கொடுமையை இப்படியா அணுகுவது?' - எப்படி இருக்கு இந்த த்ரில்லர்?
அப்பா (சார்லி), அம்மா (நிரோஷா), பாட்டி, தங்கையுடன் வாழும் அனிதா (அனுபமா பரமேஸ்வரன்) பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருக்கிறார். வேலை கிடைத்தாலும், இரவுநேரப் பணியாகவும், வெளியூர் பணியாகவுமே கிடைக்க, அவற்றை ஏற்க மறுக்கிறார் அவரின் அப்பா.
இந்நிலையில், வேலை தேடும் படலத்தில், தோழியின் அழைப்பின் பேரில், பெற்றோருக்குத் தெரியாமல் இரவுநேர பார்ட்டி ஒன்றுக்குச் செல்கிறார் அனிதா. அங்கே முதல் முறையாக மது அருந்தும் அவர், போதையில் நடனமாடி, மயக்கமாகிறார்.

சில நாள்களில், தான் கருவுற்றிருப்பதை அறியும் அனிதா அதிர்ச்சியாகிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ள 'லாக் டவுன்' படத்தின் கதை.
இறுக்கம், ஆற்றாமை, கோபம், பதற்றம், மனதைப் பிழியும் குற்றவுணர்ச்சி எனப் பெரும்பாலும் உணர்ச்சிப் பெருக்குடன் வலம் வரும் அனிதா கதாபாத்திரத்தின் ஆழத்தை அறிந்து, அதற்குத் தேவையானதை அளித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார்.
தங்களின் அனுபவத்தால் சார்லி, நிரோஷா பலம் சேர்க்கின்றனர். பிரியா வெங்கட், ராஜ்குமார் ஆகியோரின் நடிப்பு ஆங்காங்கே ஓவர்டோஸ் ஆகிறது.

நெருக்கமான தெருக்கள், இரவு நேர லைட்டிங் போன்றவற்றைக் கையாண்ட விதத்தில் கே.ஏ. சக்திவேலின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கிறது. இரண்டாம் பாதிக்குத் தேவையான திரைவேகத்தைக் கொண்டுவந்திருக்கும் படத்தொகுப்பாளர் வி.ஜே. சாபு ஜோசப், முதல் பாதியில் பல காட்சிகளைத் துண்டு துண்டாக மிதக்கவிட்டிருக்கிறார்.
என்.ஆர். ரகுநந்தன், சித்தார்த் விபின் கூட்டணியின் இசையில், பாடல்கள் ஈர்க்கவுமில்லாமல், தொந்தரவும் செய்யாமல் கடந்து போகின்றன. ஆனால், த்ரில்லருக்கான எரிபொருளை ஊற்றி, இரண்டாம் பாதியை முடுக்கிவிட்டிருக்கிறது இக்கூட்டணி.
மிடில் க்ளாஸ் குடும்பம், கட்டுக்கோப்பான பெற்றோர், வேலை தேடும் படலம், காதல் தொல்லைகள் என நிதானமாக, புதுமையே இல்லாத காட்சிகளால் தொடங்கும் திரைக்கதை, முதல் பாதியின் பெரும் பாதியைக் கடந்த பிறகுதான் மையக்கதையையே தொடுகிறது.
வழக்கமான காட்சிகளே வரிசைக்கட்டி வந்தாலும், நடிகர்களின் பங்களிப்பு அவற்றை ஓரளவிற்குக் காப்பாற்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு விறுவிறுவெனப் பற்றும் திரைக்கதை, பரபரப்பைக் கச்சிதமாகக் கடத்துகிறது.

அனுபமாவின் மனப்போராட்டம், கொரோனா லாக் டவுன், சட்டவிரோத கருக்கலைப்பு கும்பல்கள் எனக் காட்சிகள் திக் திக்கென நகர்ந்தாலும், சிறிது நேரத்திலேயே அதீத சாகசங்களை நோக்கி அனுபமா கதாபாத்திரம் நகர்கிறது. அதுவரை இரக்கத்தைச் சம்பாதித்து வைத்திருந்த அக்கதாபாத்திரம், ஒருகட்டத்தில் பார்வையாளர்களிடமிருந்து விலகிவிடுகிறது.
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைத் தேடும் பாதையையோ, அக்கொடுமையிலிருந்து சட்டபூர்வமாகவும், மனரீதியாகவும் ஒரு பெண் மீண்டுவரும் பாதையையோ திரைக்கதை தேர்ந்தெடுக்காமல், வெறுமென பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளியாக்கி, அவரைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளும் பிற்போக்குப் பாதையையே திரைக்கதை கையிலெடுத்திருக்கிறது.
தன் மகள் காதல் திருமணம் செய்ததால், லிவ்விங்ஸ்டன் குடும்பம் எடுக்கும் துயர முடிவும், அதை ரொமாண்டிஸைச் செய்து, அதற்குக் காரணமாக மகளைக் குற்றஞ்சாட்டும் கிளைக்கதையும் அபத்தம்.
பெற்றோர்களில் நியாயமில்லாத அதீத கண்டிப்பையும் ரொமாண்டிஸை செய்திருப்பது அபத்தப் பட்டியலை நீளமாக்குகிறது. இறுதிக்காட்சி வரை குற்றவாளி யார் என்ற கேள்விக்குள்ளேயே போகாமல், பெண் இரவு நேரத்தில் வெளியில் போவதே குற்றங்களுக்கான காரணம் என்ற வகையில் முடித்திருப்பது இயக்குநரின் அரசியல் போதாமையையே காட்டுகிறது.

மொத்தத்தில், திரைக்கதை ஆங்காங்கே பதைபதைக்க வைத்தாலும், கதையின் பேசுபொருளிலிருக்கும் போதாமைகளும், அபத்தங்களும் இந்த 'லாக் டவுனை' பார்வையாளர்களிடமிருந்து தனித்திருக்க வைக்கின்றன.

















