செய்திகள் :

Mali: முதல் முறையாக தனிநாட்டைக் கைப்பற்றும் அல்-கொய்தா; ஆப்பிரிக்காவை சூழ்ந்துள்ள ஆபத்து!

post image

அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றி ஆளும் வெற்றியை நெருங்கியிருக்கிறது. வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதன் இணைப்பு அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) பரந்த பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. விரைவில் தலைநகர் பமாகோவைக் கைப்பற்றும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அல்-கொய்தாவின் 40 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றும் தருணமாக இது இருக்கலாம்.

அல்-கொய்தாவின் நிழல் அரசு

கடந்த சில மாதங்களாக வடக்கு மாலியில் இருந்து தெற்கு நோக்கி தங்கள் பிடியை இறுக்கி வருகின்றனர். முக்கிய சரக்கு வாகனங்களின் பாதைகளைக் கைப்பற்றியுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் நகருக்குள் வரமுடியாமல் எண்ணெய், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சந்தைகள் மூடப்பட்டு வருகின்றன.

jnim aq flag

அவர்கள் சாலைகளில் செக்‌போஸ்ட்கள் அமைத்து வரி வசூல் செய்து வருவதாகவும், கிராமப்புறங்களில் தற்காலிக நீதிமன்றங்களை உருவாக்கி நிழல் அரசாங்கமாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மாலியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஜெனரல் அசிமி கோய்டா தலைமையிலான ராணுவக் குழு, நாடு முழுவதும் ஒழுங்கை ஏற்படுத்த முடியாமல் திணறி வருகிறது.

தற்போதைய ஆட்சி மேற்கத்திய நாடுகளிடமிருந்து விலகி இருப்பதுடன், வெளிநாட்டு ஆயுதக் குழுக்களையும் சார்ந்துள்ளது. குறிப்பாக ரஷ்யாவுடனான தொடர்புகள் காரணமாக, பிரான்ஸ், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளின் ஆதரவை மாலி இழந்துள்ளது.

Mali Map

அல் கொய்தாவின் தந்திரம்

JNIM அமைப்பின் 6,000 ஆயுதமுள்ள வீரர்கள் மாலி, புர்கினா பசோ மற்றும் நைஜரில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தலைநகருக்கு சரக்கு வாகனங்கள் செல்லும் சாலைகளை துண்டிப்பது, பற்றாக்குறை ஏற்படுத்துவது, அரசின் கிராமப்புற மக்களை அணுகுவததை கடினமாக்குவது, வணிகத்தை கட்டுப்படுத்துவது மற்றும் புதிய விதிகளை தானாகவே உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் யுத்தத்தை முன்னெடுக்கின்றனர்.

மாலி ஜனாதிபதி அசிமி கோய்டா
மாலி ஜனாதிபதி அசிமி கோய்டா

போர் மூலம் அல்லாமல், கிராமப்புற தகராறுகளைத் தீர்த்து மக்களைக் கைக்குள் கொண்டுவருவது மற்றும் பொருளாதாரத்தை படிப்படியாகக் கைப்பற்றுவதன் மூலம் தங்கள் ஆளுகையைப் பரப்பி வருகின்றனர். கிராமப்புறங்களில் அல் கொய்தாவின் ஆயுதக் குழுக்கள் நடைமுறை அதிகாரிகளாக இயங்கி வருகின்றனர்.

அல் கொய்தா தொடர்ந்து முன்னேறி தலைநகர் பமாகோவைக் கைப்பற்றினால், முதல்முறையாக அமெரிக்காவால் தீவிரவாதக் குழு என அறிவிக்கப்பட்ட இயக்கம், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில் ஆட்சியமைக்கும். இது தீவிரவாத இயக்கத்தை வெகுவாக பலப்படுத்தும் மற்றும் உலகெங்கும் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தர உறைவிடத்தை வழங்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட மாலி

மாலியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. 2.3 கோடி மக்கள் தொகை (2023 நிலவரப்படி) கொண்ட நாட்டில், 80 லட்சத்துக்கும் அதிகமானோர் அத்தியாவசிய தேவைகளுக்காக போராடி வருகின்றனர் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக காத்திருக்கின்றனர்.

Russia - Mali Alliance

தீவிரவாதிகளின் தாக்குதல்களால் இந்த ஆண்டில் மட்டும் 2,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் தீவிரவாத இயக்கங்களின் மோதலால் வடக்கு மற்றும் மத்திய மாலியில் இருந்து தெற்கு பகுதிக்கு குடியேறி வருகின்றனர். பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் தெற்கு மாலியிலும் மருத்துவமனைகள் மருந்துப் பொருட்கள் இல்லாமல் பற்றாக்குறையில் உள்ளன. சரக்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள நிலை தொடர்ந்தால், நாடு முழுவதும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மாலியின் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளது. தலைநகரில் பல தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன. பணவீக்கம் அதிகரித்துள்ளது. அரசு அடிப்படை சேவைகளைக் கூட வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. சர்வதேச நாடுகளின் உதவியின்றி, அண்டை நாடுகள் தங்களது சொந்த நெருக்கடிகளில் மூழ்கியிருப்பதால், மாலி இந்த போராட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் துணை ராணுவ அமைப்புகள் மாலியில் JNIM-க்கு எதிராக சண்டையிட்டாலும், அது போதுமானதாக இல்லை. எனினும் தலைநகர் பமாகோவில் இன்னும் சண்டை முடியவில்லை. மாலியின் ஜுண்டா அரசாங்கம் பயங்கரவாதிகளை வெற்றிகொள்ள எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது பெரும் கேள்விக்குறி. தற்போதைய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள ரஷ்யா உதவ முன்வந்துள்ளது. ஆனால் அல்-கொய்தாவின் தந்திர யுத்தங்களுக்கு எதிராக இந்த கூட்டணி செயல்பட முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.