பெயரே இல்லாத ரயில் நிலையம்; மஞ்சள் பலகை மட்டுமே அடையாளம் - சுவாரஸ்யத் தகவல்
நஞ்சுள்ள பாம்புகள் எவை? பாம்பு கடித்தால் மரணத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? - நிபுணர்கள் விளக்கம்
மழைக்காலத்தில் மக்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் ஒன்று பாம்புகளின் தொல்லை. இருசக்கர வாகனம், கார், குளிர்சாதனப் பெட்டி போன்ற பல இடங்களில் சென்று பதுங்கி இருப்பதாக பல செய்திகளை நாள்தோறும் கேட்க நேரிடுகிறது.
முக்கியமாக இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை கடித்துவிட்டதாகவும், குழந்தைகளின் காலணிகளுக்குள் புகுந்துள்ளதாகவும் கேள்விப்படும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இப்படி பல சம்பவங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு நஞ்சுள்ள பாம்புகளை முறையாக அடையாளம் காணும் அறிவு அவசியம்.
நான்கு வகை பாம்புகள்
பொதுவாக இந்தியாவில் மனிதர்களைக் கொல்லக்கூடிய அளவு நஞ்சுள்ள பாம்புகளை நாய்ப்பாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவரியன், சுருட்டைவிரியன் என்று நான்கு வகையாகப் பிரிப்பதாக ஒரு கருத்து உண்டு.
இது தொடர்பாக கோவை வனக்காப்பாளர் வினோத் அவர்களிடம் கலந்தாலோசித்தோம். அவர் கூறுகையில்,
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நஞ்சுள்ள பாம்புகளைப் பிரித்தால் பத்து வகையான பாம்புகள் இருக்கும். ஆனால் இதில் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அதிகம் வரக்கூடிய பாம்புகள் என்றால் இந்த நான்கு வகைதான்.

நகர்ப்புறம், கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் இந்த வகைப் பாம்புகள் தென்படுகின்றன. மேலும், அதிக அளவில் மனிதர்களைக் கடிப்பதில் இந்த நான்கு வகைகளும் காரணமாக இருப்பதால், இவற்றைத் தனியாகப் பிரித்து வைத்திருக்கிறோம். இவற்றைத் தாண்டியும் நஞ்சுள்ள பாம்புகள் உண்டு.
அவை மனிதர்களைக் கடித்து கொன்றதற்கான பதிவுகள் ஏதும் இல்லாததாலும், மனிதர்கள் வசிக்கும் இடங்களில் இந்த பாம்புகள் மிகவும் அரிதாகத் தென்படுவதாலும், இவற்றை நாம் தவிர்த்துவிடுகிறோம்,” எனத் தெளிவுபடுத்தினார்.
நஞ்சுள்ள பாம்புகளை அடையாளம் காண முடியுமா?
நஞ்சுள்ள பாம்புகளை பொதுமக்கள் கண்ணால் பார்த்து அடையாளம் காண முடியுமா என்பது குறித்து விசாரித்தபோது, “நாம் மக்களுக்கு அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; அனுபவமின்றி அடையாளம் காண்பது சிரமமே தான்.

நஞ்சற்ற பாம்புகள் சில நேரங்களில் தங்களைத் தற்காத்துக்கொள்ள நஞ்சுள்ள பாம்புகளைப் போல காட்டிக்கொள்கின்றன. உதாரணமாக, பச்சை நாகன் என்ற நஞ்சற்ற பாம்பு தற்காப்புக்காக நாகப்பாம்பு போல தலையை விரிக்கும்; இதனால் மக்கள் அதை நாகப்பாம்பு என்று தவறாக நினைத்துவிடுகிறார்கள்.
அதேபோல, வெள்ளிக்கோல்வரியன் உடலில் கோடுகள் இருப்பதால் அதை கட்டுவரியன் என்று தவறாக நினைப்பார்கள். கோடு இருந்தால் கட்டுவரியன், தலையை விரித்து காட்டினால் நாகப்பாம்பு, சுருண்டு கிடந்தால் சுருட்டைவிரியன் என்று மக்களிடத்தில் பல குழப்பங்கள் நிலவுகின்றன," என்று அவர் கூறினார்.

இந்தக் குழப்பங்களைத் தாண்டி நஞ்சுள்ள பாம்புகளை சரியாக அடையாளம் காண முடியுமா என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக முடியும். நாகப்பாம்பின் கண்களுக்கு கீழ் மை வைத்ததைப் போல கருப்பாக இருக்கும்; அதன் அடிவயிற்றில் இரண்டு கருப்புப் பட்டைகள் இருக்கும். அதன் தலையும் கழுத்தும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரே உறுப்பு போல இருக்கும். மக்கள் நாகப்பாம்போடு குழப்பிக்கொள்ளும் சாரைப்பாம்பிற்கு உடல் பெரிதாகவும் தலைப்பகுதி சிறிதாகவும் இருக்கும்," என்றார்.
கட்டுவிரியன்
மேலும், "கட்டுவிரியன் ஒரு இரவாடிப் பாம்பு. இரவில் அது வெளியில் வந்தாலும்கூட அதன் உடல் ஒளிர்வது தெரியும். உடல் முழுக்க வெள்ளைப் பட்டைகள் இரண்டு இரண்டாகக் காணப்படும் மற்றும் தலைப்பகுதியில் கோடுகள் இல்லாமல் முழுவதும் கருப்பாக இருக்கும். மிக முக்கியமாக, கட்டுவரியன் பாம்புக்கே உள்ள தனியடையாளம் - அதன் நடுமுதுகில் இருக்கும் செதில்கள் வரிசையாக அறுகோண வடிவில் சற்று பெரிதாகத் தெரியும்," என்று கூறினார்.

கண்ணாடி விரியன்
அடுத்ததாக கண்ணாடிவிரியனைப் பற்றி, "தலையிலிருந்து வால் வரை கண்ணாடியால் ஆன சங்கிலியால் பிணைக்கப்பட்ட தோற்றமே அதன் பெயருக்குக் காரணம். கண்ணாடிவிரியனின் மிக முக்கியமான அடையாளமாக அதன் மூக்கிற்கு மேல் அம்புக்குறி போட்டதைப் போல இரண்டு வெள்ளைக் கோடுகள் இருக்கும்," என்றார்.

சுருட்டைவிரியன்
கடைசியாக சுருட்டைவிரியனைப் பற்றி, "ஒன்றரை அடி மட்டுமே வளரக்கூடிய இந்தப் பாம்பின் தலையின் மேல் ‘பிளஸ்’ குறி இருக்கும். நாம் தவறுதலாக அதன் அருகில் சென்றால், அது அச்சத்தில் செதில்களை உரைக்கும்; அதன் செதில்கள் கரடுமுரடாக இருப்பதால் ஒரு சத்தத்தை உருவாக்கும். அந்தச் சத்தத்தின் மூலம் இதை அடையாளம் காணலாம்," என்றார்.
மேலும், "இந்த நான்கு பாம்புகள்தான் நம் குடியிருப்புப் பகுதிக்குள் அதிகம் உலாவும் நஞ்சுள்ள பாம்புகள். இவற்றைத் தாண்டி வெகு சில பாம்புகள் லேசான நஞ்சுள்ளவையாக இருக்கும்; அவற்றால் நம் உயிருக்கு தீங்கு இல்லை. மற்ற பாம்புகள் அனைத்தும் நஞ்சற்ற பாம்புகளே," என்றும் கூறினார்.
பாம்பு கடித்த இடத்தை வைத்து நஞ்சுள்ள பாம்பின் கடி என்று தெரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, "நஞ்சுள்ள பாம்புகளுக்கு இரண்டு விஷப் பற்கள் இருக்கும். அந்தப் பற்களின் அடையாளம் ஒன்றோ இரண்டோ தென்படும் என்று கூறுவார்கள்; அல்லது அது வெறும் கீறலாகக் கூட இருக்கலாம். இருப்பினும், அடையாளம் தெரியாத பாம்பு கடித்திருந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் செல்வதே சிறந்த முடிவாகும்," என்று பதிலளித்தார்.
`பாம்பு கடி, பாதி மரணங்களுக்குக் காரணம்'
மேலும் இது தொடர்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக பாம்பு பிடித்து வரும் சகாதேவன் கூறுகையில், "பாம்பு கடித்தவுடன் அச்சப்படுவதுதான் பாதி மரணங்களுக்குக் காரணம், சிலர் கடித்தது தெரியாமல் இருப்பதனால் பதட்டப்படாமல் இருப்பார்கள், அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்போது உயிர் பிழைக்கிறார்கள்.”
மற்றும், "பாம்பு கடித்தவுடன் நேரத்தைச் சிலர் வீணடிப்பார்கள், அருகில் இருக்கும் மருத்துவமனைக்குப் போகாமல், பெரிய மருத்துவமனைக்குச் செல்ல நினைப்பார்கள், இப்படி அலட்சியமாக இருப்பதே உயிர் பலிக்குக் காரணம்.
என்ன பாம்பு என்று தெரிந்துகொள்ளவேண்டியது இரண்டாவதுபட்சம் தான், மருத்துவமனைக்கு எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய்விடவேண்டும், மருத்துவர்கள் ஒரு இரத்தப் பரிசோதனையில் பாம்பு விஷத்தின் வகையை கண்டறிந்துவிடுவார்கள்." என்றும் கூறினார்.

பாம்பு பிடிப்பவர்கள் பலர் நஞ்சுள்ள பாம்புகளை கையாளும் விதத்தைப் பற்றிக் கூறிய சகாதேவன், "பாம்பு பிடிக்கும் பலர் ஒருசில முறை பாம்பு பிடித்ததும் விஷப் பாம்புகளை அலட்சியமாக கையாள துவங்கிவிடுவார்கள். அது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. விஷப்பாம்புகளை நாம் கையால் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதற்கான உபகரணங்களோடும் பாதுகாப்போடும் தான் அணுகவேண்டும்." என்றார்.
முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
இறுதியாக மழைக்காலத்தில் பாம்புகள் தொடர்பாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு,
"மழைக் காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீடு அசுத்தமாக இருந்தால் எலிகள் வரும் அதனை பிடிக்க கண்டிப்பாக பாம்புகள் வரும், காலணிகளைத் தரையில் வைக்காமல் இரண்டு மூன்று அடி உயரத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
இரவு நேரத்தில் மின்விளக்குகளோடு வெளியில் வரவேண்டும், துரதிஷ்டவசமாக பாம்பு கடித்துவிட்டால் புரளிகளை நம்பி தவறான முதலுதவிகள் செய்யாமல் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்." என்று நிறைவு செய்தார்.
முடிவாக,"ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு விஷத்துக்கான மருந்து இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும், பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புறத்து மக்கள் தான், இதனைத் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்பவர்களும் கைதேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
- கோகுல் சரண்















