MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டகாசம்!
இப்போதெல்லாம் நம்ம ஊரில் சந்து பொந்து, இண்டு இடுக்கிலெல்லாம் டிராஃபிக் போலீசார் ஸ்வைப் மிஷினுடன் நின்றுகொண்டு போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சாலையில் நடந்து சென்றவர் ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நம் ஊரில் அல்ல, மத்தியப் பிரதேசத்தில்.
மத்தியப் பிரதேசம் பன்னா மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளியான சுஷில்குமார் சுக்லா, தன் வீட்டு நிகழ்ச்சிக்கு வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து வரப் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குச் சாலைப் போக்குவரத்தைக் கண்காணித்துக்கொண்டிருந்த போலீசார் சுக்லாவை நிறுத்தி "ஹெல்மெட் ஏன் போடவில்லை?" என்று கேட்க, "நடந்து செல்வதற்கும் ஹெல்மெட் அணிய வேண்டுமா?" என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். அதைப் பற்றி கவலைப்படாமல், அதட்டலாக 300 ரூபாய் அபராதம் செலுத்தக் கூறியுள்ளனர். முடியாது என்ற சுக்லாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளின் பிறந்த நாள் விழாவுக்குச் செல்லவேண்டும், விட்டு விடுங்கள் என்று அங்கிருந்த போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். அதன் பின்பு இரக்கப்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர் ஒன்றின் பதிவு எண்ணில் சுக்லா பெயரில் ஹெல்மெட் வழக்குப்பதிவு செய்து 300 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.
இதனால் மனம் நொந்துபோன சுக்லா, ஊரிலுள்ள உறவினர்களிடம் தனக்கு நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளார். அதோடு பன்னா மாவட்ட எஸ்.பி-யிடம் புகாராகக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த எஸ்.பி, தற்போது சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மத்தியப் பிரதேசம் முழுவதும் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.