`கருணாநிதியும், ஸ்டாலினும் தமிழ் பெயர்களா?' - திருமாவளவன் பேச்சுக்கு நயினார், டி...
MSME: US வரியால் பெரும் பாதிப்பு; வேறு சந்தைகளை தேட 'இந்த' அறிவிப்புகள் வேண்டும்|மத்திய பட்ஜெட் 2026
இந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் துறைகளில் ஒன்று - சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை.
இந்தத் துறைக்கான அறிவிப்பு எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விளக்குகிறார் See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த்.
"இந்தியாவின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை உற்பத்தியில் கிட்டத்தட்ட 36 சதவிகிதமும், ஏற்றுமதியில் 45 சதவிகிதமும் பங்களிக்கிறது.
முக்கியமாக, 11 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
அமெரிக்காவின் வரிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU), நியூசிலாந்து உடனான புதிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTA) மத்தியில், இந்த பட்ஜெட் வெறும் கடனுதவி சார்ந்ததாக இல்லாமல், உலகளாவிய வர்த்தகத் திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

2024–25 மற்றும் 2025–26 பட்ஜெட்டுகளில் இந்தத் தொழில்துறையின் வகைப்பாட்டைச் சீரமைத்தல், கடன் கிடைப்பதற்கான சலுகைகளை விரிவாக்குதல், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கான கிரெடிட் கார்டுகள் மற்றும் BharatTradeNet போன்ற ஏற்றுமதி ஊக்குவிப்பு கட்டமைப்புகளில் கவனம் செலுத்தப்பட்டன.
இதனால், பணப்புழக்கம் மேம்பட்டாலும், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு சரியாக பேமென்ட் கிடைக்காதது போன்ற வர்த்தக அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் முழுமையடையவில்லை.
இப்போதுள்ள சவால்
இப்போது அமெரிக்கா உயர்த்தியுள்ள வரியினால் (சில துறைகளில் 25%- 50% வரை) ஜவுளி, தோல் மற்றும் ரத்தினக் கற்கள் சார்ந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறைகள் பாதித்துள்ளன.
இதனால், இந்தத் துறையினர் வேறு சந்தைகளைத் தேடி வருகின்றனர். அப்படி ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியா சந்தைகளை நோக்கி நகரும்போது, லாப வரம்பு அழுத்தம் மற்றும் இணக்கச் செலவுகள் (Compliance Costs) பெரும் சவாலாக உள்ளன.

இன்றைய உலகச் சந்தைகள் ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை) தரநிலைகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தக வசதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால், இந்திய நிறுவனங்களுக்குச் சர்வதேசச் சான்றிதழ்கள் பெறுவதிலும், ஏற்றுமதி காப்பீட்டிலும் முறையான கட்டமைப்பு ஆதரவு இன்னும் தேவைப்படுகிறது.
இதை மத்திய அரசு எளிதாக்க வேண்டும்.
எதிர்பார்ப்புகள்...
1. சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறை வர்த்தக மீளுருவாக்க நிதி (Trade Resilience Fund) - உலகளாவிய சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளப் பிரத்யேக நிதி ஒதுக்கீடு.
2. FTA மூலம் பலனடைய சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி செய்வதற்கான திட்டம்.
3. புதிய நாடுகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் மானியங்கள்.
4. BharatTradeNet போன்ற டிஜிட்டல் வர்த்தகச் செயல்பாடுகளை எளிமையாக்குதல்.
5. Industry 4.0 & ESG திறன் மேம்பாடு - நவீனத் தொழில்நுட்பம் மற்றும் பசுமைத் தரநிலைகளுக்கான பயிற்சி அளித்தல்.
2026–27 பட்ஜெட் சிறு, குறு, நடுத்தரத் தொழில்துறைகளை வெறும் பிழைப்பு மட்டத்திலிருந்து (Survival) உலகளாவிய போட்டித்தன்மைக்கு (Global Competitiveness) உயர்த்த வேண்டும்.
வர்த்தகத் திறன், உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமே இது சாத்தியமாகும்".












