செய்திகள் :

My Lord Review: கிட்னி திருட்டிற்கு எதிரான சாமானியனின் போராட்டம்; படமாகவும் வெல்கிறதா மை லார்ட்?

post image

கோவில்பட்டி, மைப்பாறையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் முத்து சிற்பியும் (சசிகுமார்), அவரது மனைவி சுசிலாவும் (சைத்ரா) இறந்து போய்விட்டதாக அரசால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்று, ஊடகத்தைத் தன் பக்கம் கவனிக்க வைக்கிறார் முத்துசிற்பி. அதனால், காவல் நிலையத்தில் வைத்து, அவரை அடித்து உதைக்கிறது போலீஸ்.

 My Lord Review | மை லார்ட் விமர்சனம்
My Lord Review | மை லார்ட் விமர்சனம்

இச்சூழலில், சென்னையில் மிகப்பெரிய அதிகாரமும், பணமும் படைத்த சுஜாதாவின் (ஆஷா சரத்) சிகிச்சைக்குச் சிறுநீரகம் தேவைப்பட, அதற்கு மருத்துவ ரீதியாக முத்து சிற்பியின் சிறுநீரகம் பொருந்துகிறது. அதனால், அவரிடமிருந்து சிறுநீரகத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக வாங்க கிருஷ்ணா (ராம்குமார் பிரசன்னா) என்பவர் முயல்கிறார்.

முத்து சிற்பி தம்பதிக்கு ஏன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, முத்து சிற்பியின் சிறுநீரகம் வாங்கப்பட்டதா, உண்மையில் சுஜாதா யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது ராஜுமுருகன் இயக்கியிருக்கும் 'மை லார்ட்' திரைப்படம்.

பணமும் அதிகாரமுமற்று, அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் சாமானியனாகத் தோற்றத்திலும், உடல்மொழியிலும் கச்சிதம் கூட்டுகிறார் சசிகுமார். ஆனால், அப்பாவித்தனம், காதல், இயலாமை, கோபம் என மாறிக்கொண்டே இருக்கும் எமோஷன் முகத்தில் வழக்கமான சசிகுமாரே பெரும்பாலும் வந்து போவது மைனஸ்!

பயமும், காதலும் ஒருசேரக் கலந்திருக்கும் முகத்தோடு, படத்தின் பதைபதைப்பைத் தாங்கி நிற்கும் சைத்ரா, உடல்மொழியாலேயே எமோஷனைக் கடத்தி படத்தின் சொத்தாக மாறியிருக்கிறார்.

பார்வையாலேயே கதாபாத்திரத்திற்கான கம்பீரத்தையும், மிடுக்கையும் கடத்தியிருக்கிறார் ஆஷா சரத். கொங்கு வட்டார வழக்கில் பேசி, ஆங்காங்கே வரும் காமெடி மீட்டரைக் குறைய விடாமல் பார்த்துக்கொள்ளும் ராம்குமார் பிரசன்னாவின் பங்களிப்பு பெரிய ப்ளஸ்.

 My Lord Review | மை லார்ட் விமர்சனம்
My Lord Review | மை லார்ட் விமர்சனம்

குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், வசுமித்ரா, அருள் எழிலன், கோபி நயினார் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் கரிசல் கிராமத்தின் வெக்கையும், அதன் இயல்பான எளிமையும் படத்தின் எதார்த்தத்திற்கு உரமூட்டுகின்றன. எமோஷன் காட்சிகளில் சத்யராஜ் நடராஜனின் பரபரப்பில்லாத படத்தொகுப்பு கைகொடுத்தாலும், மையக்கதையிலிருந்து கருத்துச்சாலைக்கு இண்டிகேட்டர் போடாமல் தாவியோடும் காட்சிகளுக்குக் கண்டிப்பு காட்டத் தவறுகிறார்.

ஷான் ரோல்டன் இசையில், எல்லாப் பாடல்களும் திரையோட்டத்தோடு வந்து, கரிசல் நிலத்தின் பருத்தியாகச் சுகம் கூட்டுகின்றன. காமெடி, எமோஷன், பரபரப்பு என எல்லா நிலத்திலும் தேவையான மகசூலை எடுத்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை.

பிரதான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, நேராகக் கதைக்குள் நுழைக்கிறது திரைக்கதை. காதலும், எளிமையும் மிகுந்த முத்து சிற்பி - சுசிலாவின் கதை விரிகிறது.

சின்ன சின்ன கலாட்டா, அழகான காதல், வல்லாளாரின் போதனை என நகர்ந்து, படம் பேசும் சமூக அவலத்தைத் தொடுகிறது. ஆனாலும், எதார்த்தத்தை மீறி, துணைக் கதாபாத்திரங்கள் கருத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது துருத்தல்.

 My Lord Review | மை லார்ட் விமர்சனம்
My Lord Review | மை லார்ட் விமர்சனம்

கடும் வறுமையின் காரணமாக ஏழைகளிடம் சட்டவிரோதமாக சிறுநீரகம் வாங்கும் கும்பல், அவர்களுக்கே தெரியாமல் திருடும் கும்பல், அந்த வலைப்பின்னல்கள் செயல்படும் முறை, அரசின் கட்டமைப்பும் மாஃபியாக்களும் கைகோர்க்கும் இடம், ரேஷன் கார்டு வாங்கப் போராடும் அவலம் என இடைவேளை வரை அழுத்தமாகக் கதையின் மையத்தைப் பேசுகிறது திரைக்கதை.

அவற்றைச் சுட்டிக்காட்டும் வசனங்களும் நெருப்பாகத் தெறிக்கின்றன. சில செயற்கைத்தனங்கள் எட்டிப் பார்த்தாலும், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பும் இடைவேளைக் காட்சி நச்!

மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும் பாடு, ஆஸ்பத்திரியில் தம்பதிகள் செய்யும் கலாட்டா எனக் கதையிலிருந்து விலகியோடும் காமெடி காட்சிகள் இரண்டாம் பாதியின் பாதி வரை ஓடுகின்றன. அவற்றிலும் பாதியே க்ளிக் ஆகியிருக்கின்றன.

மீண்டும் சிறுநீரகத் திருட்டிற்கு எதிரான சட்டப்போராட்டத்திற்குள் நுழையும் திரைக்கதை, தேவையான நிதானத்தையும் தெளிவையும் கொடுக்காமல் கடகடவென ஓடுகிறது. அதனால், அரசு vs சாமானியன் என்ற வீரியமான மையக்கதை தேவையான அழுத்தத்தைத் தராமல் போகிறது.

மேலும், இவ்வளவு ஊடகப் புகழ்பெற்ற முத்து சிற்பியை ஏன் இத்தனை அபாயகரமான முயற்சிக்குத் தேர்ந்தெடுக்கிறார்கள், தொடக்கத்தில் அப்பாவித்தனமாகவும் பிற்பாடு விவரம் தெரிந்த தைரியசாலியாகவும் எப்படி முத்து சிற்பி கதாபாத்திரம் மாறுகிறது போன்ற பிரதான லாஜிக் ஓட்டைகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

இவற்றைத் தாண்டி, உணர்வுபூர்வமான இறுதிக்காட்சி நேர்த்தியாகக் கைகூடி, மிதமான சிலிர்ப்பைத் தருகிறது.

 My Lord Review | மை லார்ட் விமர்சனம்
My Lord Review | மை லார்ட் விமர்சனம்

சமகால சமூக அவலத்தைப் பேசும் மையக்கதை கவனிக்க வைத்தாலும், அதைத் தெளிவான திரைக்கதையில் திடமாகச் சொல்லியிருந்தால், இந்தச் சாமானியனின் தீர்ப்பு இன்னும் உரக்கக் கேட்டிருக்கும்.

Balu Mahendra: அழியாத கோலங்கள் `டு' தலைமுறைகள் - பாலுமகேந்திரா திரைப்பயணம் ஒரு பார்வை!

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர். ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், இயக்குநராக 23 படங்களை அவர் இயக்கி இருக்கிறார். அவரின் நினைவு நாளான இன்று (பிப்.13) அவர் இய... மேலும் பார்க்க

மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி சித்தியால் வளர்க்கப்படுகிறார். சித்தி ஏற்பாடு செய்யும் திருமணத்தில் துளியும் விருப்பமில்லாத சாரு, அங்கிருந்து எவரையாவது காதலித்து வெ... மேலும் பார்க்க

Pookie: "ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்"- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் 'பூக்கி'... மேலும் பார்க்க

Mrunal Thakur: `பிப்.14 ஆம் தேதி எனக்கு திருமணமா?' - மிருணாள் தாகூர் விளக்கம்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் 'India Today' ஊ... மேலும் பார்க்க