செய்திகள் :

Rs.100 CUT MOTION; மேட்டூர், தஞ்சாவூருக்கானது: மெட்ராஸ் மாகாண கவுன்சில் - விவாதங்கள்| அணை ஓசை 18

post image

காவிரி மேட்டூர் அணை திட்டம் செயலாக்கம் அடைந்தபோது பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் அப்போது நாடு இருந்தது அனைவரும் அறிந்ததே! இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த பல சமஸ்தானங்களில் பெரிய மாகாணமாக விளங்கியது “மெட்ராஸ்”. “ஜஸ்டிஸ் கட்சி” எனப்படும் “நீதிக்கட்சி” ஆங்கிலேய அரசுக்கு ஆதரவான நிலை எடுத்தும், காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாகவும் மெட்ராஸ் மாகாண கவுன்சில் (MADRAS LEGISLATIVE ASSEMBLY) செயல்பட்டது. 1920 லிருந்து நீதிக்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் பங்கு பெற்றனர். கவுன்சிலில் மொத்தம் 132 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் 34 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். மற்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரட்டை ஆட்சி முறை என்ற வகையில் இந்த சட்டமன்றம் செயல்பட்டது.

மெட்ராஸ் சட்டமன்றத்தில் நடந்த பல்வேறு விவாதங்கள்

“காவிரி - மேட்டூர் அணை திட்டம்” செயல்படுத்த துவங்கியதிலிருந்து கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணும் வரை பல்வேறு சமயங்களில் மெட்ராஸ் சட்டமன்றத்தில் இது குறித்து நடந்த பல்வேறு விவாதங்கள் மிகுந்த சுவாரசியமானவை. இது குறித்து ‘தமிழ்நாடு சட்டமன்ற நூலகத்தில்’ அனுமதி பெற்று அங்கு சென்று நேரடியாக தகவல்களை திரட்டி, அவை சுருக்கமாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சென்ற நூற்றாண்டில், இந்த மேட்டூர் அணை திட்டம் செயலாக்கம் பெறுவதற்கு அரசு சார்பில் சட்டமன்றத்தில் கவுன்சிலின் செயற்குழு உறுப்பினரும் “லா மெம்பர்” (LAW MEMBER) பொறுப்பு வகித்தவருமான சர்.சி.பி ராமசாமி அய்யரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிய வருகிறது.

1921 ஆம் வருடம் தொடங்கி அணை கட்டுமான கால வரிசைக்கேற்ப, ஆண்டு வாரியாக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் உறுப்பினர்களின் விவாதங்களும் அப்படியே தரப்பட்டுள்ளன.

இந்த சட்டமன்ற விவாதங்களில் பலர் பங்கெடுத்து பேசியிருந்தாலும் கோயம்புத்தூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.வெங்கடரமண அய்யங்கார் (சி.வி.வி), V.C.வெள்ளிங்கிரி கவுண்டர், நாச்சிமுத்து கவுண்டர், சேலத்தைச் சேர்ந்த எல்லப்பா செட்டியார் போன்றவர்களின் பங்கு அளப்பரியது.

சிக்கனமாக அணை கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் மேலோங்கி இருந்தது அவர்களின் உரைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது.

இந்த விவாதங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் தான் நடைபெற்று ஆவணங்களாக பதிவாகி இருந்தது. தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் மெட்ராஸ் ஆவணக் காப்பகம் போன்ற இடங்களில் தேடி எடுத்த அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து இங்கு வரிசைப் படுத்தியுள்ளேன்.

இனி வரிசைக்கிரமமாக மெட்ராஸ் சட்டமன்ற நிகழ்வுகளில் 1921 முதல் 1936 வரையிலான காலத்தின் உள்ளே நுழைவோம்.

1921 ஜனவரி 12ஆம் நாள் ஒரு வரலாற்று நிகழ்வாக மெட்ராஸ் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இது இந்திய அரசாங்க சட்டம் 1919 அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய ஜனநாயக கட்டமைப்பின் தொடக்கமாக அமைந்தது. இந்தக் கோட்டை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இந்திய மண்ணில் கட்டப்பட்ட முதல் கோட்டை ஆகும்.

இந்திய மக்களின் அரசியல் பங்கேற்புக்கான முதல் படியாக இக்கூட்டம் அமைந்தது எனலாம். “ராயல் ஹைனஸ் டியூக் ஆஃப் கன்னாட்” (கன்னாட் கோமகன்) இங்கு ஆற்றிய உரை இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சியின் ஆரம்ப கால நிகழ்வை வெளிக்கொணரும் முக்கிய ஆவணமாகும்.

மெட்ராஸ் சட்டமன்றத்தில் “காவிரி-மேட்டூர் திட்டம்” குறித்த அதிகாரப்பூர்வ உரையாடல் முதன்முறையாக 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பதிவாகியுள்ளது.

உறுப்பினர் T. சோமசுந்தரம் முதலியார், மேட்டூர் அணைத் திட்டம் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்ற கேள்வியை எழுப்பினார். மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைத்திட்டம் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டு வருவதால், இது குறித்து மெட்ராஸ் அரசாங்கத்திற்கும் மைசூர் தர்பாருக்கும் இடையே தொடர்ந்து முறைசாரா விவாதங்கள் நடைபெற்று வருவதாலும் மாநிலச் செயலாளர் (SCRETARY OF STATE) இன்னமும் ஒப்புதல் அளிக்கவில்லை. மேட்டூர் திட்டப் பணிகள் எப்போது தொடங்கப் பெறும் என்பதை அரசு இப்போது கூறவியலாது என்று கூறியது.

அணை ஓசை

இதன் மூலம் 1921 ஆம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாக மேட்டூர் அணை குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி உறுப்பினர் சி. வி வெங்கடரமண அய்யங்கார் எழுப்பிய ஒரு கேள்வி மூலம் பழைய “நெரிஞ்சிப்பேட்டை- காவிரி நீர்த்தேக்க திட்டமானது” “காவிரி-மேட்டூர் திட்டத்தால்” மாற்றம் பெற்றுள்ளது என்றும் “காவிரி-மேட்டூர் அணை திட்டம்” ஒரு வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தது என்று தெளிவாகிறது.

1922-ல் நீர்ப்பாசன துறை உறுப்பினர் பொறுப்பு வகித்தவர் கே.சீனிவாச அய்யங்கார். இவருக்குப் பிறகு சர்சி.பி.ராமசாமி அய்யர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அந்த வருடமும் “மாநிலச் செயலாளர்” ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மைசூர் கண்ணம்பாடி நீர்த்தேக்கம் குறித்து (கிருஷ்ணராஜ சாகர் அணை என்பது பின்னாளில் மாற்றப்பட்ட பெயர்) மெட்ராஸ் அரசு மற்றும் மைசூர் தர்பார் அரசுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதில் தீர்வு ஏற்பட்ட பிறகு மேட்டூர் அணை திட்டம் குறித்து ஒப்புதல் பெறப்படும் சூழ்நிலை இருந்தது. இது 1924 ஆம் ஆண்டு வரை நீடித்தது.

மேட்டூர் அணை கட்ட மின்சாரம்

1924 பிப்ரவரி 18-ம் தேதி மைசூர் தர்பார் - மெட்ராஸ் மாகாண அரசுகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இது குறித்து உறுப்பினர் எஸ்.சத்தியமூர்த்தி விரிவான கேள்விகளை சபையில் எழுப்பினார். அரசு அப்போது பல ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்படுவதாக கூறி வெளியிட மறுத்தது.

சிவசமுத்திரம் மின் நிலைய உரிமைகள் மைசூருக்கு வழங்கப்பட்டு மெட்ராஸ் மாகாணம் அதன் மூலம் சாதகமான மின்விநியோகத்தை பெறுவது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பல இடர்ப்பாடுகள் அகன்று மேட்டூர் அணைத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அணை கட்டுவதற்கு தேவையான மின்சாரம் சிவசமுத்திரத்திலிருந்து பெறப்பட்டது.

மின்சாரம்

1924 ஏப்ரல் 1ஆம் தேதி சி.வி வெங்கடரமண அய்யங்கார், காவிரி நீரை கோயம்புத்தூர் மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்தும் சாத்தியம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்காக கீழ்பவானி பாசனத்திட்டம் நடைபெறுவதாகவும் இந்திய அரசு திட்ட மதிப்பீடுகளை அங்கீகரித்த பிறகு உறுதியான பதில் கூற இயலும் என்றும் அரசு சார்பில் சர். சி.பி. ராமசாமி அய்யர் கூறினார்.

கோவை பிரதிநிதிகள் கீழ்பவானியை விட மேல் பவானி திட்டம் அதிக நன்மைகளைத் தரும் என்று வலியுறித்தினர். ஆனால், கீழ் பவானி திட்டம் ஏற்கனவே முன்னேறிய நிலையில் உள்ளதால், மேல் பவானித் திட்டத்தைத் தொடங்கினால் காலதாமதம் ஏற்படுமென சி.பி. ராமசாமி அய்யர் (சி.பி.ஆர்) எச்சரித்தார். காவிரி-மேட்டூர் திட்டம் அமலாகும் போது சி.வி. வெங்கடரமண அய்யங்கார் (சி.வி.வி) கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு காவிரியில் இருந்து ஒரு கால்வாய் கிடைக்கும் வாய்ப்புள்ளதா என வினவினார். “அதை நான் கருத்தில் கொள்வேன்” என்ற பதில் மட்டுமே சி.பி.ஆர் மூலம் கிடைக்கப்பெற்றது.

அப்போது ஆரம்பித்து பலமுறை சி.வி.வி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு காவிரி நீரை கொண்டு செல்ல பல்வேறு முறைகளில் கேள்வி எழுப்பி விடாமல் முயன்றது சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக ஆராயும் போது தெரிய வருகிறது. பல வருடங்கள் இதற்காக போராடினார் என்றே கூற வேண்டும்!

இதன் மூலம் 1924-ல் மேல் பவானி திட்டம் பரிசீலனையில் இருந்தாலும் இறுதியில் மேட்டூர் அணை கட்டவே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது குறித்து இந்தத் தொடரின் முற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் பல்வேறு காரணங்களால் மெட்ராஸ் மாகாண அரசும், இந்திய அரசும் தென்னிந்தியாவில் முதலில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூரில் தான் அணை கட்டுவது என்று முடிவெடுத்து அதை செயல்படுத்த ஆரம்பித்தனர்.

அணை ஓசை

மேட்டூர் அணையின் இடத்தேர்வு குறித்து சி.வி.வி கேள்வி எழுப்பினார். இதன் மூலம் காவிரியின் குறுக்கே மேட்டூரில் தான் அணை கட்ட தீர்மானிக்கப்பட்டது எனவும், மேட்டூருக்கு வடக்கே காவேரிபுரம் என்ற இடத்துக்கு மேலே “செட்டிப்பட்டி” என்ற இடத்தில் அணை அமைக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டது அந்த இடம் நீர்த்தேக்கத்துக்கு பொருத்தமற்றது எனவும், புவியியல் மற்றும் பொறியியல் ரீதியாக மேட்டூர் தளம் சிறந்தது என அதிகாரிகள் உறுதி செய்தனர் என்றும் அவையில் பதிலளிக்கப்பட்டது. அதே சமயம் தொடர்ந்து கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசன வசதி மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவாக அப்போது முன்வைக்கப்பட்டன.

1924. பாசன நீரை கட்டுப்படுத்தவும், நியாயமான விநியோகத்தை உறுதி செய்யவும் ஒரு தனிச் சட்டம் தேவை என்பதை இந்திய அரசு வலியுறுத்தியது. 1906 லிருந்து இந்த கருத்து தொடர்ந்து வந்து, அச்சட்டம் இல்லையெனில் காவிரி நீர்த் தேக்கத் திட்டம் தொடங்க அனுமதி வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்தது.

இந்த கொள்கை துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நீர்த்தேக்கத் திட்டங்களுக்கும் பொருந்தும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த காரணங்களினால் மேட்டூர் அணை திட்டம் 1924 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து தாமதமானது.

இதுவும் நல்லதுக்கு என்று கூறும் நிலை அந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் உறுதியானது. இதனால் திட்ட வடிவமைப்பை மாற்றி உபரி நீர் வெளியேற “F SADDLE” (F சேடில்) என்னும் நீர் வெளியேற்ற அமைப்பு போன்ற புதிய ஏற்பாடுகளுடன் திட்டம் முன்னேறியது. இது குறித்து சென்ற பகுதி ஒன்றில் வாசித்திருப்பதை வாசகர்கள் நினைவு கூறலாம்.

தனிநபர் தீர்மானம்

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை தாக்கல் செய்வது தொடர்ந்து நடைபெறும் நடைமுறை. அரசு இப்படி தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாவுக்கு எதிரான கேள்விகள், ஆட்சேபங்களை எழுப்ப வாய்ப்பினை ஏற்படுத்தி, ஒதுக்க வேண்டிய தொகையிலிருந்து குறைந்தது ரூபாய் 100/- குறைக்கப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வருவார்கள்.

Rs. 100 CUT MOTION

இது ஒரு அடையாள ஆட்சேபம். அப்போது, இது “ரூபாய் 100 கட்-மோஷன்” ( Rs. 100 CUT MOTION) என்று அழைக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்தி கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி வெங்கடரமண அய்யங்கார் பாசனத்திற்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 18,36,100/- என்ற தொகையில் ரூபாய் 100 குறைக்க “கட்-மோஷன்” ஒன்றை 1924 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி கொண்டு வந்தார்.

விவாதம் - AI

அப்போது அவர் பேசும்போது மேட்டூர் அணை திட்டத்தில் கோயம்புத்தூர் சேலம் மாவட்ட நிலங்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

அவரின் கசந்த குரல், “நீரில் நாங்கள் மூழ்குகிறோம்! ஆனாலும் ஒரு துளி நீர் கூட எங்கள் வயல்களுக்கு வரவில்லை. தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் அனைத்தும் நீர் நன்மைகளைப் பெற, கோயம்புத்தூர் வெறுமனே தொந்தரவு மற்றும் சிரமம் மட்டுமே அனுபவிக்கிறது.

“யாரிடம் அதிகம் உள்ளதோ அவர்களுக்கு மேலும் அதிகம் கிடைக்கும் மற்றும் யாரிடம் குறைவாக உள்ளதோ அவர்களிடமிருந்து இருப்பதைக் கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல உள்ளது” என்று சாடினார்.

“கோயம்புத்தூருக்கு கீழ் பவானி திட்டமே சிறந்தது. முதன்மை பொறியாளர் (CHIEF ENGINEER) அதற்கு தீவிர ஆர்வம் காட்டுகிறார். “மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்திலும்” இதற்கான இடம் வைத்துள்ளோம்” என்று சி.பி.ஆர்., நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், ராவ் பகதூர் டி.ஏ.ராமலிங்க செட்டியார் விடாமல், “மேட்டூரில் இருந்து ஒரு கால்வாயை கோயம்புத்தூருக்கு திருப்ப முடியுமா? எங்களின் வறண்ட நிலங்கள் என்றென்றும் பஞ்சத்தில் தவிக்க வேண்டுமா?” என்று கேட்டார். சி.பி.ஆர் நேர்மையாக பதில் உரைத்தார். “நான் எந்த உறுதியும் தர முடியாது. சாத்தியமெனில் செய்வோம்” என்றார்.

டெல்டா பகுதி

மேலும், “மதராஸ் அரசின் நோக்கம் தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள தற்போதைய பாசனப்பணிகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பட்டுக்கோட்டை மற்றும் சில தாலுகாக்களை மேலும் பாசனம் சாத்தியமாக்குவதை உறுதி செய்வதாகும்” என்று வலியுறுத்தி கூறினார்.

இறுதியில் சி.வி.வி தன் தீர்மானத்தை வாபஸ் பெற்றார். ஆனால், அந்த விவாதம் ஒரு உண்மையை வெளிப்படுத்தியது. மேட்டூர் அணை திட்டத்திலிருந்து கோயம்புத்தூருக்கு நீர் வராது என்றும் கோயம்புத்தூர் மக்களுக்கு நம்பிக்கையாய் நிற்கும் ஒரே சாத்தியம் “பவானி திட்டம்” மட்டுமே என்றும் தெரிந்தது!

அந்த விவாதத்தின் சாரம் “மேட்டூர், தஞ்சாவூருக்கானது. கோயம்புத்தூர் பவானிக்காக காத்திருக்கட்டும்” என்பதே!.

1924 ஆகஸ்ட் 18ஆம் தேதி “சட்ட உறுப்பினர்” (LAW MEMBER) சி.பி. ராமசாமி அய்யர் மெட்ராஸ் சட்டமன்றத்தில் மேட்டூர் அணை கட்டும் முன்மொழிவை அறிமுகப்படுத்தினார். மேட்டூர் அணை குறித்த மிக முக்கிய விவாதம் இது!

அணை கட்ட முன்மொழிவு

“காவிரி ஆற்றில் மேட்டூரில் ஒரு நீர்த்தேக்கத்தை கட்டுவதற்கான இந்த முன்மொழிவின் திட்டச் செலவு ரூபாய் 612 லட்சம் கொண்டது. இதன் மூலம் 3,01,000 ஏக்கர் பாசன வசதி மற்றும் பழைய பாசன மேம்பாட்டை உள்ளடக்கியது.

காவிரி வெள்ள நீர் மழைக்காலங்களில் கடலில் வீணாகிறது. அதை சேமிக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. 1910-ம் ஆண்டிலேயே “சர்.ஜான் பென்டன்” ஆய்வு செய்து அணை கட்ட சிறந்த இடம் மேட்டூர் என்று உறுதி செய்தார். பவானி, நெரிஞ்சிப் பேட்டை போன்ற மாற்று திட்டங்களையும் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

நான் நேரடியாக திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்தேன். அப்போது கடலில் வீணாகச் சென்று கலந்த வெள்ளத்தின் அளவு அபரிமிதமாக அதாவது மூன்று மடங்கு மேட்டூர் நீர் தேக்கத்தையும், கூட இரண்டு மடங்கு கண்ணம்பாடி நீர்த்தேத்கத்தையும் கொள்ளும் அளவுக்கு வெள்ள நீர் இருந்தது என்று மதிப்பிட முடிந்தது.

அணை ஓசை

இப்போது, அத்தகைய ஒரு நீர்த்தேக்கம் இருந்தால் மற்றும் இது இயற்கைக்கு மாறான நிலைமைகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டிருந்தால் இதுபோன்ற வெள்ள சேதார நிகழ்வை தடுத்திருக்கலாம். இனிமேல் இதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தற்காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டு நடந்தது அடுத்த ஆண்டும் நடக்கலாம். அவை நீண்ட காலமாக நடக்கவில்லை என்றாலும், இந்த உபரி நீர் தற்போதைய மற்றும் எதிர்கால பாசனத்திற்காக பயன்படுத்தப்படலாம்."

இந்த உபரி நீர் ஒரு பெரிய கூடுதல் பகுதிக்கு பாசன வசதி வழங்க உத்தரவாதம் அளிக்க முடியும். அதே சமயம் விளைநிலங்களுக்கு சீரான நீர் வளங்கள் சாத்தியம் என்ற கருத்தில் “கர்னல் எல்லீஸ்” வடிவமைத்த திட்டமிது. மேட்டூர் என்ற இடத்தில் வலுவான பாறைகள் உபரி நீர் வெளியேற வசதி மற்றும் குறைவான விவசாய விளைநிலங்கள் நீரில் மூழ்குவது போன்ற அடிப்படை சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் காரணத்தால் குறைந்த இழப்பீடு தரும் நிலை சாதகமானது. திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் சிறப்பு கடன் நிதி ஒதுக்கப்படும். வெள்ள நிவாரண நிதியை காரணம் காட்டி இந்த திட்டத்தை தள்ளிப் போட சில உறுப்பினர்கள் விரும்புவதாக தெரிகிறது. இதற்கும் திட்ட நிதிக்கும் தொடர்பு இல்லை. அது வேறு, இந்த திட்ட நிதி வேறு!” என்று விளக்கம் அளித்து தீர்மானத்தை சபை ஏற்றுக் கொள்வதற்கு பரிந்துரைத்தார், சிபிஆர்.

1892-ல் கையெழுத்தான “மைசூர்-மெட்ராஸ் ஒப்பந்தம்” மெட்ராஸின் உரிமைகளை குறைத்தது மற்றும் புதிய ஒப்பந்தத்தால் பாசன வரம்பு 3,01,000 ஏக்கராக குறைந்துவிட்டது என உறுப்பினர் சத்தியமூர்த்தி கண்டனம் தெரிவித்தார். மேல் நிலை, கீழ்நிலை பாசன உரிமைகள் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்தார்.

அதே சமயம் உறுப்பினர் நடேச முதலியார், “காவிரி நீரை வீணாக்காமல் சேமிப்பது நியாயம். பவானி திட்டத்தையும் உடனே தொடங்க வேண்டும். பாசன நீர் விநியோகத்தில் நான்கு மாவட்டங்களும் சம உரிமை பெற வேண்டும். மேலும் 1924 பெருவெள்ளத்தால் சேதமடைந்த பாசனப்பணிகளை பாதுகாக்க மத்திய அரசிடம் நிதி கோர வேண்டும்” என வலியுறுத்தினார்.

பதிலுரைத்த சி.பி.ஆர் பாசன வரம்பை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் பாசன பழுது பார்க்கும் நிதி வேறு, திட்ட செலவுகள் வேறு என்று மீண்டும் விளக்கமளித்தார். மேலும் மேட்டூர் திட்டம் 14 வருடங்களாக நிலுவையில் உள்ளதால் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த மேட்டூர் திட்டம் இந்திய அளவில் சுக்கர் அணை, பஞ்சாப் திட்டம், ஐக்கிய மாகாண திட்டத்துடன் போட்டியிடுகிறது என்பதால் காலம் தாழ்த்தாமல் இந்த முன்மொழிவு சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதாவது, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு வேறு மாநில அரசுகள் தங்கள் திட்டங்களுடன் மேட்டூர் திட்டத்தோடு போட்டியிடுகிறது. அதனால் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று சி.பி.ஆர்., கோரினார். பவானி திட்டம் ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது என்றும் பின்னர் மேற்கொள்ள முடியும் என நம்பிக்கையும் அளித்தார். மற்ற உறுப்பினர்கள் கோயம்புத்தூர், சேலம் மாவட்ட பாசன உரிமைகளை பாதுகாக்கக் கோரினர். அதற்கு ஒரு கமிட்டி அமைத்து பாசனம் செய்யப்பட வேண்டிய பகுதியின் மாற்றம் மற்றும் சீரமைப்புகளை மாற்ற முடியும் என்று நம்பிக்கை அளித்தார் “லா மெம்பர் சி.பி.ஆர்”.

தற்போதைய அதிகபட்ச நீர் விகிதம் ஏக்கருக்கு ரூபாய் 7 மட்டுமே ஆனால் இந்த திட்டத்தின் காரணமாக தஞ்சாவூர் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 15 வரி கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதிக நீர்விகிதம் மக்கள் தர தயாராக உள்ளனரா என்று கேள்வி எழுப்பிய உறுப்பினர் சத்தியமூர்த்தியின் வாதத்துக்கு, “கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகள் ரூபாய் 20 மற்றும் ரூபாய் 25 வரை செலுத்த உறுதி அளிக்கின்றனர்.

தஞ்சாவூர் மக்கள் ரூபாய் 15 நீர் விகிதம் செலுத்த தயாராக உள்ளனர் என்று கூறி சீரமைப்பு மற்றும் பாசனம் செய்யப்படும் பகுதி குறித்து பொறியியல் கண்ணோட்டத்தில் சாத்தியமானது என்று நிபுணர்கள் கருதுவதற்கு ஏற்ப கமிட்டியின் ஆலோசனையால் நான் வழிநடத்தப்படுவேன்” என்று சி.பி.ஆர் உறுதி அளித்ததை ஏற்று தீர்மானம் சபை முன் வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அணை ஓசை

இந்த முக்கியமான சட்ட முன்மொழிவு தீர்மானத்தில் எஸ்.சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கடரமண அய்யங்கார், முகமது கவுஸ் மான்சாஹிப், ஜி.ராமேஸ்வர ராவ் பந்தலு, வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர், ராவ்பகதூர் சி. நடேச முதலியார், பி.எஸ்.ராஜப்பா, சர்.சி.பி.ஆர் போன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பங்கு பெற்றனர்.

1925-ம் வருடம், காவிரி மேட்டூர் திட்டம் குறித்து மாநிலச் செயலரிடமிருந்து (SECRETARY OF STATE) இறுதி ஆணை அந்த ஆண்டிலும் கிடைக்கவில்லை. மேட்டூர் திட்டத்துக்கு 1925-1926 பட்ஜெட்டில் ரூபாய் 1.3 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வெள்ள பாதிப்பு காரணமாக நிலம் கையகப்படுத்தும் வேலை சாத்தியமாகவில்லை.

இந்திய அரசு, மெட்ராஸ் நீர்ப்பாசன மசோதா நிறைவேற்றம் செய்ய காத்திருந்தது. 1924-ம் வருட இறுதியில், டிசம்பர் மாதம் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் நீர்ப்பாசன மசோதா நிறைவேற்றப்பட்டாலும் (அரசாணை எண் 212 I, 18 மே 1925) சாத்தியக்கூறுகள் முன்வைக்கப் பட்டாலும், இந்த மசோதா 7.10.1925 வரை சட்டமாக அறிவிக்கப்படவில்லை. இதில் ஓர் ஆச்சரியமான செய்தி காரணம் வெளிப்படையாக தெரியவில்லை, அறிவிக்கப்படவில்லை!

இந்த மேட்டூர் திட்டம் மூலம் வருடம் 1,50,000 டன் உணவு பொருட்கள் விளைவிக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்துதல் காரணமாக கிராம மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது சட்டமன்றத்தில் ஒரு வெட்டுத்தீர்மானம் கொண்டு வந்தார் ஓர் உறுப்பினர்.

அறிந்து கொள்ள தொடர்ந்து அவையை கண்காணிப்போம்!

காவிரி நன்னீர் சிறப்பு

இதுதான் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட கடல்சார் வேளாண்மை! - தொல்லியர் அறிஞர் ராஜேஷ்!

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் என்ற மீனவ கிராமத்தின் அருகே அமைந்துள்ளது பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகள். தமிழக அரசால் தொல்லியல் தளமாக அறிவிக்கப்பட்ட பட்டினமருதூருக்கு அருகே உள்ள பனையூரில் ந... மேலும் பார்க்க

ஞாயம் பாடி சொத்து; வெள்ளிப் பணம் மூட்டையில்... | அணை ஓசை 17

மார்ட்டள்ளிஇன்றைக்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்பாகவே மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதிகளிலிருந்து மக்கள் குடி பெயர்ந்து அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளேகால் பகுதியில் உள்ள மார்ட்டள... மேலும் பார்க்க

புலம் பெயர்ந்த மக்கள்: 'விராலிக் கரடு' `மாதையன் கரடு' `உக்கம்பருத்திக் காடு' | அணை ஓசை 16

'விராலிக் கரடு' பெரியண்ணன்மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் மளிகை கடை நடத்தி வரும் திரு. ராஜேந்திரன் தனது டூவீலரில் என்னை அமர்த்திக் கொண்டு சிலரிடம் அழைத்துச் சென்றதில் 'விராலிக் கரடு' பெரியண்ணன் என்பவர... மேலும் பார்க்க

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளைவிடவும், இன்று அதன் மார்பின் மேல் உயர்ந்து நிற்கும் 'பப்ளிக் ஆபீஸ்' கட்டடம் என்று அழைக்கப... மேலும் பார்க்க

'தமிழகத்திலிருந்துதான் தேர்தல் முறை உலகமெங்கும் சென்றது'- தொல்லியல் துறை சி.சுதாகர்

இங்கு மக்களை நெறிப்படுத்துவதற்காகவே தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆதரவாளர்களைத் திரட்டி, ஆயுதம் ஏந்தவும் துணிந்தார்கள். இவ்வாறே மன்... மேலும் பார்க்க

''தண்ணீரிலே மூழ்கிடிச்சி'' - கிராம மக்களின் இடப்பெயர்வு; சாட்சிகளிடம் நேர்காணல் | அணை ஓசை 15

ஏழு வருடங்களில் அணைச்சுவரைஅரசுக்கு அனுப்பிய அறிக்கைசிறப்பு அதிகாரி அரசுக்கு அனுப்பிய ஓர் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. “மேட்டூர் கிராமத்திற்கு வடபுறம் பழைய மண்ணாலான கோட்டை ஒன்று ‘காவேரிபுரம்’ மற்றும்... மேலும் பார்க்க