"அன்று அவருக்கு குரல் சரியில்லாமல் இருந்திருக்கலாம்" - ஏ.ஆர் ரஹ்மானுக்கு சப்போர்...
SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதில் இறந்தவர்கள் 26.94 லட்சம் பேர், முகவரியில்இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. நீக்கப்பட்டவர்களில் இதுவரை 12.80 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் பெயர் சேர்க்க அல்லது புதிய பதிவுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

உயிரிழந்த வாக்காளர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இன்னும் சுமார் 53.65 லட்சம் பேர் தங்கள் பெயர்களை மீண்டும் பதிவு செய்யாமல் உள்ளனர். இவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்காவிட்டால், வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் சூழல் உருவாகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (ஜனவரி 18) முடிவடைகிறது.
திருத்தப்பணி மேற்கொள்ள வேண்டியவர்கள் இன்று தவறவிட்டால், அடுத்த திருத்தப் பணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதனால், வாக்காளர்கள் தங்களின் வாக்கு உரிமையை காப்பாற்றிக் கொள்ள இன்றே தங்களின் வாக்கு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அடுத்த மாதம் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
















